ஞாயிறு, 1 ஜனவரி, 2012

வரம் தருவாய் புத்தாண்டே! - காரஞ்சன்(சேஷ்)

வலைப்பூ  நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.

                                               வரம் தருவாய் புத்தாண்டே!

ஈற்றினிலே ஈராறை
ஏந்தி வரும் புத்தாண்டே!

வாழ்த்தி உனை வரவேற்று
வரம்பெறவே விழைகின்றேன்!

இயற்கையின் சீற்றங்கள்
இனிஇல்லையென வரம்தருவாய்!

வாழ உலகினில்
வான்மழையும் வந்திற(ர)ங்கி
உறுதியான அணைகளிலே
உயர்ந்திடுக நீர்மட்டம்!

அண்டை மாநிலங்கள்
அமைதிநிலை அடைந்திடவே
உயர்த்(ந்)த உள்ளமதை
உவந்தளிப்பாய் புத்தாண்டே!

விண்ணை முட்டிட
விரையட்டும் விண்கலங்கள்!
விலைவாசிக்கும் ஏன்
விபரீத ஆசைஅதில்!
நிலையாகச் சில காலம்
நின்றிட நீயருள்வாய்!

வேடிக்கை காட்டி
விலையேறும் தங்கத்தை
ஏழையின் கரங்களையும்
எட்டிடச்செய் புத்தாண்டே!

எத்தனை முறைதான்
எரிபொருள் விலையேற்றம்?
சீரான நிலையடைய
சீக்கிரம் நீயருள்வாய்!


நித்தம் கவலையுறும்
நெஞ்சங்கள் நிறைந்திடவே
கரன்சியின் மதிப்புயர்த்திக்
காத்திடுவாய் புத்தாண்டே!

கூர்த்த மதியுடையோர்
கூறும் நல்வழியில்
அறிவியலின் ஆக்கத்தால்
அனைவரும் பயனுறவே
தடைகள் தகரும்வண்ணம்
தயைசெய்வாய் புத்தாண்டே!

நோயில் மீளப்போய்
தீயில் மாண்டகதை
திரும்பாமல் நீயருள்வாய்
திருப்பம்தரும் புத்தாண்டே!

விதிகளை மீறியதால்
விபத்துக்கள் எத்தனையோ!

உல்லாசப் படகினிலே
உயிரிழந்தோர் எத்தனைபேர்!

குடித்ததனால் பலருயிரை
குடியும் குடித்ததுவே!

தோளில் செல் அமர
காதைமேல் வைத்து
சாய்ந்த கழுத்துடனே
சாலையில் விரைகின்றார்!
கவனச் சிதறலினால்
கதைமுடிவைத் தேடுகின்றார்!

விதிமீறா மனநிலைக்கு
வித்திடுவாய் புத்தாண்டே!

பங்கு வர்த்தகத்தில்
பங்களிப்பை நீ ஆற்றி
வீழாத நிலையை
விரைந்தளிப்பாய் புத்தாண்டே!

ஊழல் ஒழிந்து
உயர்நிலை நாடடைய
ஆழ்ந்த மனத்திட்பம்
அனைவருக்கும் அருளிடுவாய்!

ஈராறு வரங்களையும்
இனிதே நிறைவேற்றி
அனைவருக்கும் நல்லாண்டாய்
அமைந்(த்)திடுக புத்தாண்டே!

                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

14 கருத்துகள்:

 1. இவ்வாண்டு அனைவருக்கும் இனியதாய் அமைய இவ்வரங்கள் அனைத்தும் நிறைவுறட்டும்.இதைவிட சிறந்த வாழ்த்து வேறில்லை.

  நன்று.

  நிழோனி

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. //பங்கு வர்த்தகத்தில்
  பங்களிப்பை நீ ஆற்றி
  வீழாத நிலையை
  விரைந்தளிப்பாய் புத்தாண்டே!//

  ரம்மி விளையாட்டில் வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்குமாக அனைத்து தீமைகள் அழியவும்
  நன்மைகள் பூக்கவும் தாங்கள் படைத்துள்ள
  புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதை நண்பரே....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 6. இனிய கவிதை

  மாதவன்

  பதிலளிநீக்கு
 7. "விதிமீறா மனநிலைக்கு
  வித்திடுவாய் புத்தாண்டே!"

  அழகான வரிகள்! நல்ல கவிதை!

  பதிலளிநீக்கு
 8. என்ன என்ன கேட்கிறீர்கள், எண்ணி எண்ணிக் கேட்கிறீர்கள் எண்ணம் போல் நடந்திடவே நடத்தி வைக்கப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 9. நல்ல சிந்தனை! வாழ்த்தி வரம் கேட்ட விதம் அருமை! வளர்க!

  பதிலளிநீக்கு
 10. கதையும் சரி,கவிதையும் சரி Super sir.உங்கள் இலக்கிய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
  Mugundan

  பதிலளிநீக்கு
 11. வலைக்குள் சென்றேன்
  வசமாக சிக்கிக்கொண்டேன்
  என்னே எளிமை
  என்னே புதுமை
  என்னே அருமை
  புகழ வார்தைகளை
  தேடுவதுமடமை
  திக்கெட்டும் பரவட்டும்
  உமது பெருமை


  தி.ரா.பட்டாபிராமன்

  பதிலளிநீக்கு
 12. "நண்பனே! நீ ஒரு கவிஞன் என்று இன்றுவரை தெரியாதே. அனைத்துக் கவிதைகளும் அருமை! வாழ்க நின் கவித்துவம்! வளர்க நின் புலமை!"

  Shanmugasundaram Ellappan

  பதிலளிநீக்கு
 13. இந்த உலகம் மற்றவரிடமிருந்து
  பாராட்டை எதிபார்த்தே தன்
  கருத்தை வெளியிடுகிறது

  குறைகள் இல்லாது எதுவும் கிடையாது
  அதே நேரத்தில் குறைகளையும்
  நிறைகளாகவே கருதும்
  பாங்குமக்களிடம் வளர்ந்தால்
  போட்டி இல்லை பூசல்கள் இல்லை
  பொறாமை இல்லை
  இனிக்கும் இப்பூவுலக வாழ்க்கை
  பாராட்டுபவனும் பாராட்ட படுபவனும்
  அடைவது ஒன்றே
  அதுதான் ஆனந்தம்
  அதானால் பயன் பெறுவது இருவருமே
  இதை அனைவரும் புரிந்துகொண்டால்
  இவ்வுலக வாழ்வு ரசிக்கும்
  ருசிக்கும்


  தி.ரா. பட்டாபிராமன்

  பதிலளிநீக்கு