திங்கள், 30 ஜனவரி, 2012

காத்திருப்பு! -காரஞ்சன்(சேஷ்)


காத்திருப்பு!

வாழ்வில் மனிதருக்கு
வகைவகையாய்க் காத்திருப்பு!

ஐயிரண்டு மாதங்கள்
அன்னையாகக் காத்திருப்பு!

பிஞ்சுமொழி கேட்க
பெற்றவர்கள் காத்திருப்பு!

சிறந்த பள்ளி சேர
சிறுவர்கள் காத்திருப்பு!

முடிவடைந்த தேர்வின்
முடிவுக்குக் காத்திருப்பு!

தொடர்ந்து பயின்றிட
துறைதேடிக் காத்திருப்பு!

உற்ற பணிதேடி
கற்றவர்கள் காத்திருப்பு!

வாய்த்த பணியில்
உயர்வுபெறக் காத்திருப்பு!

கடமையில் தவறினால்
கட்டாயக் காத்திருப்பு!

விருப்ப ஓய்வுபெற
விண்ணப்பித்துக் காத்திருப்பு!

பணிப்பெண்ணின் வருகைக்கு
பாவையர்கள் காத்திருப்பு!

வளர்ந்த மக்கட்கு
வரன் தேடிக் காத்திருப்பு!

வஞ்சி நெஞ்சம்புக
வாலிபர்கள் காத்திருப்பு!

கண்டு களிப்படைய
காதலர்கள் காத்திருப்பு!

அரசியல்வாதி பலர்
அணிமாறக் காத்திருப்பு!

எதிர்வரும் தேர்தலுக்காய்
எதிர்க்கட்சி காத்திருப்பு!

வறியவர்கள் வாழ்வில்
விடியலுக்குக் காத்திருப்பு!

வெளிநாடு செல்ல
'விசா' வரக் காத்திருப்பு!

ஆடல் மகளிர்
அரங்கேறக் காத்திருப்பு!

தொடுத்த வழக்குகள்
துவக்கம் பெறக் காத்திருப்பு!

நிறைவுற்ற வாதத்தின்
நீதிபெறக் காத்திருப்பு!

விருப்பத்திற்கேற்ற
வீடமையக் காத்திருப்பு!

வாகான வானிலைக்கு
வலைஞர்கள் காத்திருப்பு!

விளையும் நெல்லறுக்க
விவசாயி காத்திருப்பு!

படைப்புகளை வெளியிடவே
படைப்பாளி காத்திருப்பு!

திருநாளைக் கொண்டாட
திட்டமிட்டுக் காத்திருப்பு!

வாழ்ந்து முடித்தவர்கள்
வான்செல்லக் காத்திருப்பு!

காத்திருந்து காத்திருந்து
காலம் பலகழித்தோம்

காலமும் கடலலையும்
காத்திருப்பதில்லை-ஏனோ?

                                                             -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு தினமலருக்கு நன்றி

10 கருத்துகள்:

  1. //காத்திருந்து காத்திருந்து
    காலம் பலகழித்தோம்

    காலமும் கடலலையும்
    காத்திருப்பதில்லை-ஏனோ?//

    அவற்றுக்கும் சேர்த்து மனிதர்கள் காத்திருப்பதாலோ???

    நல்ல கவிதை நண்பரே.....

    பதிலளிநீக்கு
  2. எத்தனை வகையான காத்திருப்புகள் ! சூப்பர் சார் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  3. அனைத்துக் காத்திருப்புகளும் அருமை!

    பயணப்பேருந்துகளுக்கு/ரெயிலுக்குக் காத்திருப்போரையும் காஸ் சிலிண்டர்களுக்குக் காத்திருப்போரையும் விட்டுவிட்டீர்களோ!

    //காலமும் கடல் அலையும்
    காத்திருப்பதில்லை-ஏனோ?//

    சரியாகவே சொல்லி முடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. காத்திருப்புகளை வகைப்படுத்தியவிதம் அருமை..காத்திருப்பதில் மன வேதனை சங்கடங்கள் இருந்தாலும் கிடைக்குமா கிடைக்காதா என்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸியமே..கவிதை சிறப்பு ஐயா.

    பதிலளிநீக்கு
  5. காத்திருத்தலே வாழ்க்கையோ எனக் கூட
    தங்கள் கவிதையைப் படித்தவுடன்
    எண்ணத் தோன்றுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ரமணி சார், சொல்லுவது போல் காத்திருப்பதே வாழ்கையோ என்று தோன்றுகிறது.
    சிறப்பாக இருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு
  7. காலமும் கடலலையும் உன் போல் தொடர்ந்து உழைப்பதால் காத்திருக்க தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் அடுத்த கவிதை
    வரவிற்கும் காத்திருப்பு.
    முகுந்தன்

    பதிலளிநீக்கு
  9. அன்பின் காரஞ்சன் - காத்திருத்தல் தவிர்க்க இயலாதது - அதுவே ஒரு சுகம் தான் - எத்தனை எத்தனை காத்திருப்புகள் - கவிதை நன்று - நீளம் குறைத்திருக்கலாமோ - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. Entha Kaathirupal, Ratha Kodipu.....
    --- ramanans

    பதிலளிநீக்கு