திங்கள், 28 டிசம்பர், 2015

வீறு கொண்டு எழு மனமே!- காரஞ்சன்(சேஷ்)

                                             
                                வீறு கொண்டு எழு மனமே!

சேற்று வயலினிலே செந்நெல் விளைவிக்க
ஏரோட்டி, எருவிட்டு, நாற்றுநட்டு, நீர்பாய்ச்சி
நாளெல்லாம் உழைத்தாலும் பயிரிடையே வளர்கின்ற
களையெடுத்த பின்தானே காண்கிறோம் நல்விளைச்சல்!

பாடுபட்டு விளைத்த பயிரன்றோ சுதந்திரமும்!
ஊழல் வளர்தலும், சுற்றுச் சூழல் கெடுதலும்
தீயெனப் பரவும் தீவிரவாதமும், பாலியல் வன்முறையும்,
தேசத்தின் வளர்ச்சிக்கு தேக்கநிலை அளிக்காதோ?

வண்ணப் பறவைகள் வாழ்ந்திடும் கூடு!
நம்முள் பிரிவுகள் நீர்மேல் கோடு!
உறுபசியும், செருபகையும், ஒவ்வாப் பிணிகளையும்
வேருடன் களையெடுக்க விழைந்து முன்வருவோம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், உள்ளத்துயர்வே உயர்வென்ற
வள்ளுவப் பெருந்தகை வாக்கினை நாம்போற்றி
சிந்தையொடு செயலும் ஒன்றுபட உழைத்திட்டால்
விந்தைகள் பலவிளையும்! வீறு கொண்டு எழுமனமே!
                                                                                                     
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  -காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 9 நவம்பர், 2015

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்!-காரஞ்சன் (சேஷ்)

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்  என் இனிய
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!


         
     புத்தாடை, மத்தாப்பு, பொங்கிவரும் புன்சிரிப்பு                  
   எத்திக்கும் ஒளிபரப்பும் ஏற்றிவைத்த தீபங்கள்     
   தித்திக்கும் இனிப்புவகை, தீபாவளித் திருநாளில்!    
   இல்லங்கள்  தோறும் இன்பம் தழைக்கட்டும்!  
   நல்லோர்கள் ஆசிகளால் நம்வாழ்வு சிறக்கட்டும்!
   பொல்லா எண்ணங்கள் இல்லாமல் மறையட்டும்!   
  எல்லோரும் இன்புற்று இந்நாடு உயர்வடைய
  பல்லாண்டு வாழ்கவென பகிர்ந்திடுவோம் வாழ்த்துகளை!
                                                                                                     
-காரஞ்சன் (சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 15 ஆகஸ்ட், 2015

வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்! -காரஞ்சன் (சேஷ்)

வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்!
 
 



 
அடிமைத்தளை அகன்று
ஆயின ஆண்டுகள்
அறுபத் தொன்பது!


இந்நாட்டின் விடுதலைக்கு
தன்னலமற்ற தலைவர்கள்
ஈந்தனர்  இன்னுயிரை!

முன்னோர்களின் தியாகத்தை
இன்றைய தலைமுறைக்கு
இந்நாளில் எடுத்துரைப்போம்.

இனிவரும்காலம்
இளைஞர்கள் காலம்!


வன்முறை அகற்றிடுவோம்!
வனங்களைக் காத்திடுவோம்!

மாசிலாச் சூழல்
மலர்ந்திட வழிகாண்போம்!

உழவுத் தொழிலின்
உயர்வினைப் போற்றுவோம்!

அனைவருக்கும் கல்வி
அளித்திட வகைசெய்வோம்!

போதைப் பழக்கத்தை
போக்கிட வழிகாண்போம்!

தன்னிறைவுடன் தாய்த்திருநாடு
என்றும் மிளிர்ந்திட


 
இந்நாளில் கொடியேற்றி
ஏற்றிடுவோம் உறுதிமொழி!

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 1 ஆகஸ்ட், 2015

எத்தனை கோடி உள்ளங்களைக் கவர்ந்தாய்! ஏனோ இப்படி சட்டென மறைந்தாய்?- காரஞ்சன்(சேஷ்)



எத்தனை கோடி உள்ளங்களைக் கவர்ந்தாய்!
ஏனோ இப்படி சட்டென மறைந்தாய்?

 தென்கோடித் தமிழரே!- நீர்
எத்தனைகோடி இன்னுளம் கவர்ந்தீர்!
சாதாரணனும் சாதிக்க முயன்றால்
சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு
சான்றாய்த் திகழ்ந்தீர்!

பொய்யாமொழிக்கேற்ப
புவியில் வாழ்ந்தவரே!
தன்னம்பிக்கையும்
தளரா முயற்சியும்
தரணியில் உமை உயர்த்தின!

எளிமைக்கு இலக்கணமே!
எம் நாட்டுச்  சுடரொளியே!
ஏவுகணை நாயகனே!
விண்வெளி ஆய்வில்
வியக்க வைத்தாய் உலகத்தை!

 அடிமை விலங்ககற்றி
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென
பாடிய பாரதி- அதைப்
பார்க்குமுன்னே மறைந்தான்!

இரண்டாயிரத்து இருபதில்
இந்தியா வல்லரசாக
எந்நாளும் கனவுகண்டீர்!
பாரதிபோல் ஏனோ அதைப்
பார்க்குமுன்னே  மறைந்தீர்!

மறைந்தீர் எனக்கேட்டு
உறைந்தனர் மக்கள்!
மெழுகைச் சுமந்து
அழுதனர் பிள்ளைகள்!
ஆழ்ந்தனர் துயரில்!

 எத்தனையோ மனிதர்கள்
பிறக்கலாம் இப்புவியில்!
இறக்கலாம் இப்புவியில்!
கலாம்போல் ஒருவரை
இனி எப்போது பார்க்கலாம்?


செயற்கைக்கோள் மட்டுமின்றி
செயற்கைக்கால் வடிவமைத்தீர்!
செயற்கரிய செயல்களால்
உயர்ந்திட்டீர் உளங்களிலே!
சம்பவங்களிலும் சரித்திரம் படைத்தவர் நீர்!

வருங்கால பாரதத்தை
வடிவமைக்கும் சிற்பிகளின்
சிந்தனையைத் தூண்டி
சிறகடிக்க விட்டவரே!
வல்லரசாக்க வழிகாட்டி நீரன்றோ!

கடைசிப் பயணத்தைக்
கண்ணுற்றபோது கனத்தது இதயம்!
கண்ணீர் பெருகியது!
நேசத்தின் வெளிப்பாடாய்
தேசமே அழுதது!

வாழ்வதற்குகந்த பூமி
வாய்ப்பதாக ஒரு காட்சி!
அமைதியாக நடந்த
அஞ்சலியே அதன் சாட்சி! 

விண்ணில்  இன்று எழுகின்ற வெண்ணிலவே!
மண்ணுக்குள் மறைந்த இந்த மாமனிதர்
எண்ணம்போல் எம்தேசம் மிளிர்வதை - நீ
கண்ணுறும் காலம் கட்டாயம் தூரமில்லை!

 -காரஞ்சன்(சேஷ்)

சனி, 25 ஜூலை, 2015

இசையெனும் அமுதினில் இவரொரு பாகம்! எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்? -காரஞ்சன்(சேஷ்)

                                      இசையெனும் அமுதினில் இவரொரு பாகம்!

                 எமனுக்கும் ஏனோ இவரிடம் மோகம்?

குப்தர்கள் காலம் பொற்காலம்
       இந்திய வரலாற்றில் !
உந்தன் காலம் பொற்காலம்
      இசையுலக வரலாற்றில் !

எங்கிருந்தோ வந்தாய்!
   இசைக்கலைஞன்    நான் என்றாய்!
இங்குனையே நாம்பெறவே
   என்னதவம் செய்தோமோ!

செந்தமிழ் வரிகளுக்கு
    செவிகுளிரும் இசைசேர்த்துத்
தெவிட்டாத தெள்ளமுதைத்
    தேன்மழையாய்த் தவழவிட்டாய்!

இன்றைய தொழில்நுட்பம்
    இல்லாத காலத்தே
நுட்பங்கள் பற்பலவும்
    நும் இசையில் நுழைத்தவரே!

வளர்ந்த நிலையில்- நீர்
   வடிவமைத்த பாடல்கள்
வளரும் பருவத்தே- நாங்கள்
     வாயாரப் பாடியவை!

எதார்த்த வாழ்வியலை
எடுத்துரைத்த காலத்தில்
இசைக்குத் தளமிருந்தது!
கவிஞர்க்குக்  களமிருந்தது!

மெல்லிசையின் வருடலிலே
சொல்லாட்சிக் கவிஞர்கள்
சொக்கிநின்ற தாக்கத்தில்
ஆக்கினரே அரும்பாடல்!

காதலோ, ஊடலோ, சாடலோ
மோதலோ, தேடலோ,ஆடலோ
ஏற்ற  பலபாடல்கள்
சாற்றின உம் திறத்தை!

உந்திய சிந்தனையால்
உருவான பாடலுக்கும்
சந்தம் பலதந்து
விந்தை புரிந்தவர் நீர்!

இறவாப் பாடல்கள்
இரட்டையரின் கைவண்ணம்!
தனித்து நின்றும் -நீர்
தணியாத  இசைவெள்ளம்!

மயக்கமா!கலக்கமா! பாடல்
மற்றொரு கவிஞனை
பெற்றெடுத்துத் தந்தது!
பேரெடுக்க வைத்தது!

பாடிய குயில்களுக்கு
பண்ணமைத்துத் தந்தவர் நீர்!
எண்ணங்களுக்கெல்லாம்
இசைவடிவம் தந்தவர் நீர்!

நினைத்தாலே இனிக்கும்!
நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்!
இசைவானில் உன்பாடல்
திசையெங்கும் ஒலித்திருக்கும்!

தமிழ்த்தாய் வாழ்த்து
தரணியிலே ஒலிக்கும்வரை
உந்தன் புகழும்
உலகெங்கும் நிலைத்திருக்கும்!

என்னுளம் கவர்ந்த
மென்னுளம் கொண்டவனின்
ஆன்மா அமைதிபெற
அருளாயோ இறைவா நீ!

 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 12 ஜூலை, 2015

கவிதைப்போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன் (சேஷ்)

வணக்கம் நண்பர்களே!

திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் இணைந்து நடத்திய “உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி 2015”ல் எனக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும், மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!


பரிசு அறிவிற்பிற்கான இணைப்பு இதோ
http://www.trtamilkkavithaikal.com/2015/06/2015.html

பரிசிற்குத் தெரிவுசெய்யப்பட்ட எனது கவிதை கீழே!
 
இணையத் தமிழே இனி!
தொட்டில் பருவத்தே தொடங்கியதே தமிழுணர்வு!
மட்டிலா மகிழ்வுடனே மழலைக்குத் தமிழமுதை
ஊட்டிடுவாள் அன்னையவள் ஊற்றெடுக்கும் தாலாட்டால்!
எம்மொழிகள் செம்மொழியாம் என்றாய்ந்து பார்க்கையிலே
எம்மொழிதான் செம்மொழியே-- ஏற்புடைத்த பழமையினால்!
 
மூவேந்தர் காலத்தை முத்தமிழால் உணர்ந்தோம் நாம்!
ஐம்பெரும் காப்பியங்கள் அணிந்திட்டாள் தமிழன்னை!
தோய்ந்ததமிழ்ப் புலவரெலாம் தொண்டாற்றி தமிழ்வளர்த்தார்!
தேய்கின்ற திங்களுமே திரும்பிடுதே முழுநிலவாய்!
தேயாமல் தீந்தமிழை திக்கெட்டும் வளர்த்திடுவோம்!
 
ஒற்றெழுத்துப் பிழையாலே உருக்குலையும் தமிழ்ச்சொல்போல்
ஒற்றுமை குன்றியதால் உருவிழந்தோம் தமிழினமே!
தாய்மொழியைக் கற்றிடவே தயங்குவதும் சரிதானோ?
சேய்களின் நாவெல்லாம் செந்தமிழும் தவழாதோ?
 
பைந்தமிழைப் பயிற்றிட பற்பல வழி செய்வோம்!
 
தேன்தமிழ்ப் பாடல்கள் திரையிசையில் நாம்கேட்டோம்!
இன்றைய தலைமுறைக்கு இல்லையந்த பேரின்பம்!
இன்றைய கவிஞர்களே! இயற்றுங்கள் நற்பாடல்!
சேய்களின் செவிகளிலே செந்தமிழைச் சேர்த்திட்டால்
தாய்மொழியும் வளராதோ? தமிழரினம் மகிழாதோ
 
கணிணிகளில் பல்வகையும் கைப்பேசி வகைகளுமே
பிணையத்தில் இணைந்து இணையமான இந்நாளில்
அனைத்திலும் தமிழ்தவழ ஆக்கிடுவோம் மென்பொருட்கள்!
இணையத்தில் தமிழ்வளர்த்து இசைபட வாழ்ந்திடுவோம்!
இணைத்திடுமே தமிழர்களை- இணையத்தமிழே இனி!
                                                              -காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 1 மே, 2015

மேதினியில் மேதினமே! -காரஞ்சன் (சேஷ்)



மேதினியில் மேதினமே!

உழைப்போர்கள் உரிமைபெற
உருவான இத்தினத்தில்
வறுமை அகன்றிடவே
பெருகட்டும் தொழில்கள்பல!

பிறருழைப்பைச் சுரண்டி
பிழைப்பவர்கள் தம்செயலைப்
பிழையென உணரட்டும்
பெருமைமிகு இந்நாளில்!

ஏழை எளியோரின்
இன்னல்கள் மறையட்டும்!
பிழையா மழை வரவால் 
உழவெங்கும் தழைக்கட்டும்!

அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!-காரஞ்சன்(சேஷ்)


மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!


என் செயலாவது யாதுமிலை என்றுணர்ந்து

தன்னடியால் உலகளந்து தாமுயர்ந்து நின்றோனின்

பொன்னடி பற்றி போற்றி வணங்கிடுவோம்

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகிடவே!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

புதன், 14 ஜனவரி, 2015

"பொங்கலோ பொங்கல்!" -காரஞ்சன்(சேஷ்)














"பொங்கலோ பொங்கல்!"


நாட்டினில் பசிப்பிணியை
ஓட்டிட உழைப்பவர்கள்
கூடிக் களித்துக்
கொண்டாடும்  பொங்கல்!

உறுதுணையாய் நிற்கின்ற
கறவைக்கும் கதிருக்கும்
மறவாமல் நன்றிசொல்லி
மகிழும்நாள் பொங்கல்!

நோக்குங்கால் மகிழ்விக்கும்
மாக்கோலம் பூவோடு!
மணநாள் வரவிற்கு
கன்னியர்கள் கனவோடு!

விளைந்த செந்நெல்லால்
வீடெங்கும் புத்தரிசி!
மஞ்சள் கழுத்துடனே
பொங்கலிடப் புதுப்பானை!
  
செங்கரும்பின் சுவையுடனே
பொங்கட்டும் தைப்பொங்கல்!
எங்கெங்கும் மகிழ்வலைகள்
எந்நாளும் தங்கட்டும்!

உழைப்பின் பயன்பெற்று
உழவர்கள் உயரட்டும்!
தழைத்தோங்கி நம்நாடு
தரணியிலே உயரட்டும்!

பொங்கட்டும் நல்லன்பு !
தங்கட்டும் மகிழ்வலைகள்!
நகைதவழும் முகங்களொடு
பகையுணர்வு மறையட்டும்!

பொங்கலோ பொங்கலென
பொங்கிவரும் மகிழ்வோடு
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம் இந்நாளில்!
                                               -காரஞ்சன்(சேஷ்)
படங்கள்:கூகிளுக்கு நன்றி!