புதன், 14 மார்ச், 2012

கடல்- காரஞ்சன்(சேஷ்)

கடல்


நீள்நிலமதில் படர்ந்த
நீலக் கொடியோ நீ?

உன்னுள் ஓருலகம்
ஒளிந்திருப்பதாலோ
ஓயா அலைகளுடன்
உறங்காதிருக்கின்றாய்?

உலகை உய்விக்க
உன்வழி இதுவாமோ?

கதிரவனின் கருணையால்
கார்மேக உருக்கொண்டு
காற்றெனும் தேரேறி
வான்மழையாய் வந்திறங்கி
வளம்தரும் நதிகளாகி
வந்தடைவாய் உன்னிடத்தை!

உதித்திடும் கதிரவன்
உறைவது உன்னிடமோ?
உலக நஞ்செலாம்
உன்னிடம் சேர்ந்ததனால்
நீலநிறந்தனை நீ
நிரந்தரமாய்ப் பெற்றனையோ?

உப்பான உன்னுடலில்
உண்டான பெருந்தாகம்
எத்தனை நதிகலந்தும்
ஏன் இன்னும் தீரலையோ?

கையளவு இதயந்தனில்
கடல்மேல் ஆசை என்ன?

காதல் கைகூடக்
காத்திருக்கும் காதலர்கள்!
மணல் வீடமைத்து
மகிழ்ந்திருக்கும் சிறுவர்கள்!
கவலை மறக்க
காற்றாட வந்தவர்கள்!
தினப் பிழைப்புக்காய்
தின்பண்டம் விற்பவர்கள்!
கட்டுமரத்தோடு
கடலடையும் மீனவர்கள்!

அண்டி வருவோர்க்கு
ஆறுதலை அளிப்பவளே!

சீரியநின் செல்வங்களை
மாந்தரினம் பறிப்பதாலோ
சினங் கொண்டெழுந்து
சிலநேரம் சீறிப்பாய்கின்றாய்?
                                 -காரஞ்சன்(சேஷ்)

16 கருத்துகள்:

  1. //காதல் கைகூடக்
    காத்திருக்கும் காதலர்கள்!
    மணல் வீடமைத்து
    மகிழ்ந்திருக்கும் சிறுவர்கள்!
    கவலை மறக்க
    காற்றாட வந்தவர்கள்!
    தினப் பிழைப்புக்காய்
    தின்பண்டம் விற்பவர்கள்!
    கட்டுமரத்தோடு
    கடலடையும் மீனவர்கள்!//

    அழகான கடற்கரைக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ள கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  2. பதில்கள்
    1. கருத்துப் பகிர்வுக்கு உளமார்ந்த நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  3. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  4. என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு