செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஆசிரியர்தின வாழ்த்து- என் மகளின் கவிதைகள்





விண்ணளக்கப்  பாதையிட்டு
கண்களுக்குள்  கனவைத்தொட்டு
வண்ணங்கள் குழைத்து வாழ்வில் ஒளியூட்ட
பூமிக்குள் பிறந்த நிலவும் நீ!

என்பாதைகளில் பூக்கள்பரப்பி
என்மனமுழுதும் நம்பிக்கைநிரப்பி
நீங்காது நெஞ்சில் நிற்கிறாய்
என் ஆசானாய் நிலவும் நீ!

வாழ்விற்கு வித்திட்ட விதையும் நீ!
விதைமேல் தூவும் மழையும் நீ!
மழையால் வளரும் மரமும் நீ!

வாழ்விலும் தாழ்விலும்
தாங்கிநிற்கும் தாயும் நீ!
தாயினும் மேலாகி தன்னைக்
கொடுத்துத் துணைசெயும் தெய்வம் நீ!

தெய்வங்களுள் உயர்ந்து
நிற்கும் என் ஆசான் நீ!

சே.பவித்ரா.

                                     ஆங்கிலக் கவிதை

when I lay weak and lame
You lifted me and called my name
Into mylife a Rainbow came
And gave me all the light and fame!

Whatever I do you never blame
And in my heart, you lit a flame
You made me win all my games
And without you I'd never be the same

My dear teacher calm and kind
A person like you is hard to find
And all I want is to wish you and say
"A VERY HAPPY TEACHERS DAY"

-S.PAVITHRA

சனி, 1 செப்டம்பர், 2012

வரம் வாங்கி வந்தால்தான்-காரஞ்சன்(சேஷ்)




கோடை வெயிலுக்கு
குளிர்நிழல் அளிக்குமென
வேப்ப  மரமொன்றை
வீட்டோரம்  வளர்த்துவந்தார்!

உயர்ந்த மரத்தின்
ஒருகிளை பால்கனியில்
படர்ந்ததைக் கண்டு
பரவசம் மிகக் கொண்டார்!


வளர்ந்த மரம்நாடி
வந்தமர்ந்த காகமொன்று
துணையுடன் சேர்ந்து
துவங்கியது கூடமைக்க!

காலமாற்றம்
காக்கைக்கும் உண்டன்றோ!
கட்டுக்கம்பிகளும்
காக்கையின் கூட்டிலுண்டு!

ஆக்ரமிப் போரிடம்
அகப்பட்ட நிலம்போல
வளர்ந்(த்)த மரத்தைத்-தன்
வசமாக்கின காக்கைகள்!

கரையும் காக்கைக்கு
கரையாத மனம்போலும்!
பால்கனிப்பக்கம் யாரைப்
பார்த்தாலும் கொத்தவரும்!

வளர்த்த மரத்தருகில்
வந்து நிற்க முடியாமல்
வாடிநிற்கும் முதியவரின்
வாயுரைத்த மொழிகேளீர்!


வரம்வாங்கி வந்தால்தான்
வளர்த்ததெல்லாம் பயன்தருமோ?


-காரஞ்சன்(சேஷ்)



 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை-காரஞ்சன்(சேஷ்)


                                                                
                                                                        நம்பிக்கை!


நம்பிக்கை துணையிருந்தால்
நம்வாழ்வில் உயர்வுண்டு!

புழுக்கங்களைப்
பூட்டிவைக்காதே!

மனக்கதவைத் திறந்து
மாசுகளை அகற்றிவிடு!

புன்னகை ஓர் வரம்!
மகழ்ச்சிப் புன்னகை
மலரட்டும் முகத்தினில்!

மறைந்திடும் கவலைகள்!
நிறைந்திடும் இனிமைகள்!

-காரஞ்சன்(சேஷ்)


படம்: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

பட்டாம்பூச்சியின் பயணம்!


                                                    பட்டாம்பூச்சியின் பயணம்!

சாலைப் பயணத்தில்
முத்தமிடுவதுபோல்
மோதிச் சென்றன
பருவமடைந்தவுடன்
பறக்கத்துடித்திடும்
பட்டாம்பூச்சிகள்!

சோலைப் பூக்களென
சாலையோரப் பூக்களை நாடி
சரிகின்றன விபத்தில்!

பாதைமாறிய பயணம்
பாதுகாப்பற்றதெனும்
பாடம் கற்பிக்கும்
பட்டாம்பூச்சிகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி

பதிவர்கள் திருவிழா-நேரடி ஒளிபரப்பு-விழா சிறக்க வாழ்த்துக்கள்!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இதுவோ சுதந்திரம்?

                                                          இதுவோ!   சுதந்திரம்?

 இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தந்திரத்தை நம்பாதே
தன் திறத்தை நம்பென்று
மானிடர்க்கு உரைத்திடும்
மந்திரச்சொல் சுதந்திரம்!

வாக்களிப்பை நம்பி
வாக்களித்தோர்-நிறைவேறா
ஏக்கத்தில் தவிப்பதற்கா
ஏற்பட்டது சுதந்திரம்?

வகுத்திடும் திட்டங்கள்
வந்தடையும் முன்னர்
பகுத்தெடுத்துக் கொள்ளவா
பயன்படும் சுதந்திரம்?

வனம் அழித்தார்-இயற்கை
வளம் அழித்தார்- விளை
நிலம் அழித்தார்- நீர்
நிலை அழித்தார்- இந்
நிலைதொடரவா சுதந்திரம்?

கோடியில் புரள்பவரும்-தெருக்
கோடியில் உழல்பவரும்-வறுமைக்
கோட்டால் பிரிகின்றார்! நற்
குணங்களை துறக்கின்றார்!

மனம்போன போக்கில்
மனிதன் வாழ்ந்திடவா
இன்னுயிர் ஈந்து
இங்களித்தார் சுதந்திரம்!

தீவிரவாதம் பற்றி
தினமொரு வாதம்!-இந்நிலை
மாறிட வேண்டி- நல்
மனங்களின் கீதம்!

ஏற்றம் பெருக்கி- மன
மாற்றம் அருளும்-மூச்சுக்
காற்றாய் மாறி
காக்கட்டும் சுதந்திரம்!

நாட்டை உயர்த்தி
நாமும் உயர்ந்திட- கொடி
ஏற்றி வணங்கி
ஏற்போம் சூளுரை!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி: கூகிள்


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஒத்த மாட்டு வண்டி!


ஒத்தமாட்டு வண்டி பூட்டி
ஊரைச்சுத்தி வாரவரே!
இரட்டைமாட்டு வண்டியாக்க
ஏன் இன்னும் முடியலயோ?

மனபாரம் சுமந்திடும்நான்
மாட்டுக்கு முன்பாரம்!
வாடகைக்கு வண்டியோட்டி
வாழ்க்கை நடந்திடுது!
வண்டிய நம்பி இங்கே
இரண்டு ஜீவன் பொழைப்பிருக்கு!
இன்னோரு ஜீவனுக்கு
இடங்கொடுக்க ஏது வழி?

பாரம் குறையணும்னா
பகிர்ந்து வாழ்ந்திடணும்!
ஒண்ணுசேர்ந்து உழைச்சா
ஒசந்திடலாம் வாழ்க்கையில!
ஒத்துக்க மனமிருந்தா
உன்துணையா நானிருப்பேன்!

ஒத்த மனசிருக்கும்
உன்னுடன் வாழ்வினிக்கும்!
இருவருமா சேர்ந்திழுப்போம்
இல்லற வண்டியினை!
பிழைக்க வழியிருக்க
பிழையாம வாழ்ந்திடலாம்!
பிறக்கும் பிள்ளைகள- நம்
பேர்சொல்ல வளர்த்திடலாம்!

காரஞ்சன்(சேஷ்)

(பட உதவி: கூகிள்)