நலம் தருவாய் நரசிம்மா!
அகந்தைக்கிழங்கை
அழித்திடவோ
நகத்துடனும்,
சிங்கமுகத்துடனும்
நான்காம் அவதாரமென
நரசிம்மா நீ
உதித்தாய்!
அகத் தாமரையில்
அமரவைத் துன்னை
அனுதினம் துதித்தவனின்
துயரினைக் களைந்திட
வானளந்த திருவுருவே
தூணினுள்நீ உதித்தனையோ!
தோன்றிய நாள்முதலாய்
தொடர்ந்து வரும்
துயரம்
‘மா’வினுள்
வண்டினைப்போல்
மனதுள்ளே வளருதப்பா!
பாதமலர் பற்றிநின்றேன்
பரந்தாமா துயர்
களைவாய்!
வேதநெறி அறியேன்!
ஓதும் விதியறியேன்!
சாத்திரம் அறியேன்!
சாற்றுமுறை
நானறியேன்!
அரிநாமமொன்றேதான்
அறுதுயர் களையுமென
போற்றித் துதிக்க
வந்தேன்
ஏற்று எமக்கருள்வாய்!
நாவால் நின்திருநாமம்
நம்பி நவில்பவர்க்கு
நல்வினைகள் சூழ்ந்தென்றும்
நலம்பலவும் பெருகாதோ?
உதிக்கின்ற கதிரொத்த
உன்பார்வை பட்டாலே
பனிவிலகல் போலெந்தன்
பாபங்கள் விலகாதோ?
சங்கொடு சக்கரமும்
என்றுமிடர் அகற்றாதோ?
மன்னுபுகழ் மாயவனின்
மனங்குளிரச் செய்பவளே!
உலகளந்த திருவடியின்
உயர்மடியில் அமர்ந்தவளே!
செங்கமலக் கண்களினால்
சினம்தணியச் செய்பவளின்
அருட்பார்வை பட்டாலே
அகலாத துயருமுண்டோ?
அகிலத்தைக் காத்திட
ஆராய்ந்து அருள்பவனே!
படைப்புகள் அனைத்துள்ளும்
படைத்தநீ உறைகின்றாய்!
பிறவித்துயர் களைய-நின் அருட்பார்வை அருளாயோ?
நரசிங்கா நின்நாமம்
நாவால் துதிப்பவர்தம்
எண்ணத்தில் உறைந்து
ஏற்றம் அருள்பவனே!
வாடி வருவோர்க்கு
ஈடில்லா பெருமகிழ்வை
என்றும் அருள்வாயே!
தேரேறும் நின்னருளால்
நீரேறி நெல்விளையும்
பூவரசங் குப்பமுறை
புண்ணியன் நின்நாமத்தை
எண்ணித் துதிப்போர்க்கு
என்றுமினி துயருமிலை!









