சனி, 11 பிப்ரவரி, 2012

ஆசிரியை கொலை- அதிர்ச்சிதரும் செய்தி!-காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!
கடந்த இரு நாட்களாக பரபரப்பாகவும், அதிர்ச்சியுடனும் விவாதிக்கப்படும் விஷயம் இதுதான்!

சென்னையில் வகுப்பறையில் ஆசிரியையைக் கொலை செயத மாணவன்!- 

இதுகுறித்து எனது பார்வை:

பெற்றோருக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப்படுபவர்கள் கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்கள்!  அந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு தற்போது எப்படி உள்ளது? என்பதை ஆராயவேண்டிய தருணம் இது!

முதலில் மாணவர்கள் நிலையினைப் பார்ப்போம்.
அந்தக் காலத்தில் பெற்றோரே ஆசிரியரிடம் பிள்ளை படிக்கவில்லையெனில் “கண்ணை விட்டுவிட்டு உரித்தெடுங்கள்” என்று சொல்லி கண்டிக்கச் சொல்லும் நிலையிருந்தது.  ஆசிரியரிடம் ஒரு பயம் கலந்த மரியாதை மாணவனுக்கும் இருந்தது!  ஒழுக்கம் முதலிடம் பெற்றிருந்தது.  பள்ளிகளில். ஆரோக்கியமான போட்டி இருந்தது.  மாணவர்களிடத்தில். தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களின் தாக்கம் அதிகம் இல்லை. வானொலி மட்டுமே (அதுவும் ட்ரான்ஸிஸ்டர் வருகைக்குப் பின் தான்).  பல வீடுகளில் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவும், தகவல்கள், நாட்டுநடப்பை அறியவும் உதவியாக  இருந்தது.. இன்னும் கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் செய்தித் தாள்கள் மற்றும் வார, மாத இதழ்கள் இடம்பெற்றிருந்தன. பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பிள்ளைகள் விளையாட்டில் பெரும் பகுதி நேரத்தைச் செலவிடுவர். கூட்டுக் குடும்பங்களாக இருந்ததால் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களின் அரவணைப்பும், பரிவான கவனிப்பும் இருந்தது. பெற்றோர் கண்டித்தாலும், தாத்தா, பாட்டி போன்றோர் புத்திமதிகள் சொல்லி தேற்ற ஏதுவாயிருந்தது. பிள்ளைகள்  ஒன்றுக்கு மேல் இருந்ததால், உடன் பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து பாசமுடன் பழக வாய்ப்பிருந்தது. கிராமப் புறமாயிருப்பின் நெடுந்தூரம் நடந்தோ (அ) மிதி வண்டியிலோ மானணவர்கள் செல்லும்போது நட்பு வட்டம் இருந்தது. மன அழுத்தம் குறைவாக இருந்தது. பள்ளிப் பாடச்சுமையும் குறைவு. உணவுப் பழக்கம் சீரானதாக இருந்தது.

இந்நாளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கவே பயப்படும் நிலை! அப்படிக் கண்டித்தாலும் அவர்களைக் கண்டிக்கும் பெற்றோர்கள்! ( ஒரு சில ஆசிரியர்கள்-எல்லை மீறிக் கண்டித்ததும் கண்டிக்கத்தக்கது). ஊடகங்களின் தாக்கம்- வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்கள் – அவற்றை பெருமளவில் ஒளிபரப்பும்  தொலைக்காட்சி  சேனல்கள்- .கூட்டுக் குடும்பங்கள் எனும் நிலை மாறி தனிக்குடும்பங்களின் பெருக்கம்-முதியோர் இல்லாத வீடுகள்-    அல்லது இருக்கும் வீடுகளில் தப்பித்தவறி முதியோர்கள் கண்டித்தாலும்  அதைப் பொறுக்காத பெற்றோர்கள்-இதனால் வீணான சண்டைகள்-சில முதியோர்கள் தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்- மாணவர்களுக்கு  விளையாட்டிற்கான நேரம் குறைந்தது-கணினி விளையாட்டுகளிலேயே காலங்களைக் கழித்து கண்களையும் மனதையும் கெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை.

பெற்றொர்கள்  வேலைக்குச் செல்லும் வீடுகளில் கண்காணிப்பின்றி வளரும்  சில குழந்தைகள்  தீய நட்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்-விஞ்ஞான வளர்ச்சியை சரியான நோக்கில் பயன்படுத்தாமல் சீரழிகிறார்கள்.

பெற்றொர்களின் அளவுக்கு அதிகமான செல்லம் - தேவையானவற்றை வாங்கித்தருவது மட்டுமல்லாமல் தேவையற்ற ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்து- செலவுத்தொகை என்ற பெயரில்  அவர்கள்  கேட்காமலேயே  பணம் கொடுத்தனுப்புவது  போன்ற செயல்களால் தங்களுக்காக பெற்றோர்கள் எதை வேண்டுமானலும் செய்வார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் குழதைகளிடம் ஏற்பட வகை செய்கிறார்கள்.

கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கத்தால் வயதுக்கு மீறிய வளர்ச்சியடைகிறார்கள். அளவுகோலாக மதிப்பெண்கள்-  அதனைச் சார்ந்தே  மேற்படிப்புகள்-  அதை அடைவதற்கு பெற்றோர்கள் கொடுக்கும் நிர்ப்பந்தங்கள்- அதனால் ஏற்படும் மன அழுத்தம்-  வயதுக்கு மீறிய அறிவுத்திறன்  -அதைச் சரியான பாதையில் திருப்பிவிடாத அல்லது தெரியாத பெற்றோர்! .மதிப்பெண் பெறுவது ஒன்றுதான் மதிப்பளிக்கும் என்ற மனநிலையில் மாணவர்கள் உள்ளனர்.சிறு தோல்வி அல்லது ஏமாற்றத்தைக் கூட தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

பெற்றொர்களும் ஏதோ பிள்ளைகளைப் படிக்க அனுப்பிவிட்டாலே தங்கள் கடமை முடிந்தது என்றில்லாமல், அவர்களைக் கண்காணித்து, ஆசிரியர்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளிலாவது அல்லது அவர்கள் அழைக்கும்போதாவது நேரில்சென்று சந்தித்து பிள்ளைகளின் நிலையினை அறிந்துகொள்ளவேண்டும்.

அந்நாளில் ஆசிரியர்கள் மாணவர்களின் திறனுக்கேற்ப அவர்களை ஊக்குவித்து முறையாகக் கற்பித்து, தங்கள் கடமையில் கண்ணாயிருந்து ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தனர்.
இந்நாளில் அவ்வாறு இருப்பவர்கள் மிகச் சிலரே! கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிவிட்டது. ஆசிரியப் பணியில் இருப்பவர்களே ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாக வரும் செய்திகள் மாணவர்களிடையே ஆசிரியர்கள் குறித்து மதிப்பினைக் குறைக்கும் வண்ணம் உள்ளன. மேலும் மாணவர்களிடையே தவறு செய்யும் துணிச்சலைத் தருகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களிடம் காணப்படும் தனித்திறமைகளை கண்டறிந்து, ஊக்குவித்து, வெளிப்பட  வகை  செய்யவேண்டும். பலர் முன்னிலையில் பாராட்டலாம். தனியாகக் கண்டிக்கலாம்.

 இன்றைய கல்வி முறைக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரிவதற்கான நல்ல சூழல், (அளவான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும்), திறமையை வளர்க்கும் விதமான பயிற்சிகள் ஆகியன அளிக்கப் படவேண்டும். இக்கால மாணவர்களை எதிர்கொள்ளும் விதமான மனப்பக்குவத்தை வளர்க்க ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.

 வன்முறைச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க பெற்றோர்களின் பங்களிப்பு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. பல்வேறு பணிகள் இருந்தாலும் பிள்ளைகளின் படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் அக்கறை காட்டி அவர்களிடம் காணப்படும் திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் கருத்தினை அறிந்து, தவறென்றால் தயங்காமல் எடுத்துரைத்து அவர்கள் அதை உணர்ந்து திருந்த வகை செய்யவேண்டும்.

கல்வி நிறுவனங்களும், ஆசிரியப் பெருமக்களும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது மற்றும்  பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் தங்கள் குறிக்கோளாகக் கொள்ளாமல்,  மாணவர்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் உள்ளம் பெற்று வருங்கால பாரதத்தை வடிவமைக்கும் சிற்பிகளாக உருவாக , மனதை ஒருமுகப் படுத்தத் தேவையான  பயிற்சிகள் மற்றும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விதமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பசுமரத்து ஆணிபோல் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். கல்வி முறையிலும் மாற்றம் வேண்டும். மதிப்பெண் மட்டுமே அளவுகோல் என்ற நிலை மாற வேண்டும்.

இளைஞர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! குற்றம் புரிய தள்ளப்படுகின்ற சூழ்நிலைகளை பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மாணவர்களை (குழந்தைகளை) அன்பாகவும், அனுசரணையாகவும் நேர்வழியைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.  திணிப்பது போலில்லாமல் மெல்ல மெல்ல அவர்கள் திருந்துவதற்கு நிதானமாக வழிகாட்டவேண்டும். இது கொஞ்சம் காலமானாலும் இறுதியில் வெற்றியைத்தரும். அவசரப் படுதல் கூடாது.

இந்த நிகழ்வு மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
பெற்றோர், ஆசிரியர், துறைசார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் சரியாக இருக்கும்படி நடந்தால் இனிவருங்காலங்களில் இத்தைகய நிகழ்வுகள் இல்லாமல் தவிர்க்கலாம்!

-காரஞ்சன்(சேஷ்)

7 கருத்துகள்:

  1. டிவி , சினிமாக்களை வரைமுறை படுத்த வேண்டிய அரசு, இதன் பிறகாவது முழித்து கொண்டு ஏதாவது உருபடியாக செய்தால்
    நன்றாக இருக்கும்.
    Mugundan

    பதிலளிநீக்கு
  2. இளைஞர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! குற்றம் புரிய தள்ளப்படுகின்ற சூழ்நிலைகளை பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மாணவர்களை (குழந்தைகளை) அன்பாகவும், அனுசரணையாகவும் நேர்வழியைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். திணிப்பது போலில்லாமல் மெல்ல மெல்ல அவர்கள் திருந்துவதற்கு நிதானமாக வழிகாட்டவேண்டும். இது கொஞ்சம் காலமானாலும் இறுதியில் வெற்றியைத்தரும். அவசரப் படுதல் கூடாது

    .ஆழமாக சிந்தித்து அருமையான பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தோழமைக்கு வணக்கம் ,.,.

    உங்களின் பதிவில் பல நிகழ்வுகளை தொகுத்து அற்புதமாய் பதிவாக்கி உள்ளீர்கள் ..
    வாழ்த்துக்கள் ..

    முதலில் நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் ... அப்புறம் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் ஒரு ஆரோக்கிய உறவு இருக்கவேண்டும் .. அது நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதல்ல .. ஒரு ஆசிரியர் சிரித்து பேசிவிட்டாலே அந்த ஆசிரியரை பாடாய் படுத்தும் மாணவர்கள் தான் அதிகம் இங்கு ... சரியான தொலைநோக்கிய சிந்தனைகளை கொண்டு நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும் ..

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமையான சிந்தனைகளை எடுத்துச்சொல்லியுள்ள பதிவு.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ==========================

    தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது.

    பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  5. மிகவும் நியாயமானக் கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான பதிவு. என் மனத்தில் ஓடும் எண்ணங்களை அப்படியே எழுத்தில் வடித்தாற்போல் பிரமிக்கிறேன். பட்டியலிட்டிருக்கும் அத்தனையும் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியச் செய்திகள். மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் இன்றைய கல்வி மற்றும் மாணவர், ஆசிரியர், பெற்றோர் நிலையை எடுத்துக்கூறியது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. குழந்தையும் தெய்வமும்
    கொண்டாடும் இடத்திலே
    என்று ஒரு பழமொழி உண்டு.

    ஆனால் அது இன்று
    ஏட்டளவில்தான் இருக்கிறது

    காமத்தின் மிகுதியால் ஆசைவயபட்டு
    தகாத உறவு கொண்டு ஆணும் பெண்ணும்
    கருத்தரித்து சமூகத்திற்கு பயந்து கருவை கலைப்பதும்
    குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசி எறிவதும்
    இன்று அன்றாட செய்திகளாகிவிட்டன

    போலியாக அன்னையர் தினம் கொண்டாடுவதும்
    மழலையர் தினம் கொண்டாடுவதும்
    இன்று உலகெங்கும் வணிக நோக்கத்திர்க்கன்றி
    வேறெதற்கு என்று புரியவில்லை?

    நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள்
    வாழ்வில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக
    கொண்டு தாய்ப்பால் குடிக்கும் நிலையிலேயே
    குழந்தை காப்பகங்களிலே குழந்தைகளை விடுவதும்
    மழலையர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு
    சென்றுவிடுவதும் இன்றைய மேற்கத்திய
    கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள்

    அடித்தட்டு மக்கள் பிழைக்க வழியில்லாமல்
    தங்கள் குழந்தைகளையும் படிக்க அனுப்பாமல்
    வேலைக்கு அனுப்பி குழந்தைகளின் வாழ்க்கையையும்
    எதிர்காலத்தையும் நாசமாக்குகின்றனர்

    குழந்தை தொழிலாளர்கள் சட்டம்,
    கட்டாய கல்வி உரிமை சட்டம்
    போன்றவை ஏட்டளவில்தான் உள்ளன

    குழந்தையை முறையாக வளர்க்க தயாராக
    இல்லாத ஆணும் பெண்ணும் எதற்காக
    குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்?

    அவர்களுக்கு அவர்களை இளமைதான் முக்கியம்
    அல்லது வசதியான வாழ்க்கைதான் முக்கியம் என்றால்
    கருத்தடை செய்து கொள்ள வேண்டியதுதானே?

    சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி
    அவர்களை சித்திரவதை செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து
    சிறு வயதிலேயே அவர்களை சமூக விரோதிகளாகவும்,
    பிச்சைகாரர்களாகவும் மாற்றும் அளவிற்கு
    இன்றைய சமுதாயம் குழந்தைகள் மீது
    அக்கறையில்லாமல் போய்விட்டது மிகவும் வருத்தர்க்குரியது

    பூ போன்ற குழந்தைகளின் மனதிலே இன்று ஏக்கமும்
    வெறியும் புகுந்து கொண்டு அவர்களை ஆட்டி படைத்து
    கொண்டிருப்பதின் விளைவுதான் ஒரு சிறுவன் ஆசிரியரை
    கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது

    இந்த நிலைக்கு அவன் எப்படி பொறுப்பு வகிக்கமுடியும்?
    இன்று எதை எடுத்தாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்
    தங்கள் எண்ணங்களைதான் அவர்கள் மீது
    திணிக்கிறார்களே தவிர அந்த குழந்தைகளின் எண்ணத்தை
    யாரும் சட்டை செய்வதில்லை
    .
    குழந்தைகளுக்கு தொலைகாட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள்
    நல்ல செய்திகளையும் ஒழுக்க நெறிகளை கொண்டு செல்லாமல்
    கொலைவெறியும், ஒழுக்க கேடும் ,சககிக்கமுடியாத அளவிற்கு வன்முறை
    காட்சிகள் மற்றும் காமத்தை தூண்டும்,போதை, களவு போன்ற
    தீய செய்திகளை அவர்களின் கருவிலிருக்கும் பருவத்திலிருந்தே
    அளித்து வருவதால் நாளைய சமுதாயம் நாசமாகி போய் கொண்டிருப்பதை
    யாரும் உணரவில்லை

    இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தின் வாரிசுகள் என்பதை மக்களும், அரசும்
    உணரவில்லை
    சமூகத்தில் ஒழுக்கம் அழிந்தால் யாரும் மகிழ்ச்சியாக வாழமுடியாது
    இப்போதே விழித்து கொண்டால் நல்லது

    பதிலளிநீக்கு