வெள்ளி, 19 ஜூலை, 2013

இங்கு எங்கள் கவிஞன் இல்லை சென்று வா நிலா! - காரஞ்சன்(சேஷ்)







இங்கு எங்கள் கவிஞன் இல்லை சென்று வா நிலா!

வந்தநாள் முதல்
இந்தநாள் வரை
செந்தேனில் பாட்டெழுதி
செவிகுளிரச் செய்தவரே!

சிந்தை நிறைந்தவரே
விந்தை என்செய்தீர்?
ஐம்பத் தைந்தாண்டு
ஆட்சிசெய்தீர் திரையுலகை!

தமிழ்த்தாய் உமக்கெனவே
தனிவரந்தான் தந்தாளோ!
வண்டமிழின் தேனுண்ணும்
வண்டினம் ஆனோம்யாம்!

சிந்தை நிறைத்திட்ட
சிறப்பான பாடல்பல
தந்ததனால் தமிழுலகில்
தனியிடம் உமக்கென்றும்!

இசையுடன் கலந்தவரி
ஈட்டியது இசையுமக்கு!
போட்டியுடன் நீரெழுதி
புகழ்பெற்ற பாடல்பல!

வாலிநின் வரியில்
வார்த்தைகளின் எளிமை
எளியோ ரிடத்திலும்
எழுச்சியைத் தந்தது!

ஆண்டவ னிடத்தே
வேண்டிய நின்பாடல்
அந்நாளில் ஒலித்திட
அற்புதம் நிகழ்ந்தது!

ஆணையிட்ட பாடல்
அரியணை ஏற்றியது!
காவியங்கள் பலபடைத்தாய்!
கவியுல(க)கும் போற்றியது!

தலைமுறை பலகடந்தும்
வாலிபர் உள்ளத்தே
வாலிபவாலி யென
வாழ்கின்ற கவிஞன்-நீ!

அவதாரபுருஷரென
அவதாரம் எடுத்தவரே!
அழகிய சிங்கரையும்
ஆராதித்து மகிழ்ந்தவரே!

இசையுடன் நின்வரிகள்
ஈட்டின இசையுமக்கு!
அந்தகன் அறிந்தானோ?
அவனுலகு அழைத்தானோ?

அம்மாவின் பெருமைகளை
அறிந்திட உரைத்தவர் நீர்!
உள்ளம் உருகுதையா
உம்பாடல் கேட்கையிலே!

காற்று மண்டலமே! நீ
கல்நெஞ்சம் கொண்டாயோ!
மூச்சில் கலந்தவரின்
மூச்செடுத்துப் போனாயே!

நாளைஇந்த வேளைபார்த்து
ஓடிவரச் சொல்லி
இன்றே பிரிந்துவிட்டார்!
என்செய்வாய்? வெண்ணிலவே!

அரங்கமா நகரத்தார்
அரங்கனடி சேர்ந்தாரோ?
தமிழ்த்தாயின் தாலாட்டில்
தாமுறங்கிப் போனாரோ?

தலைமுறை இடைவெளியை
தகர்த்தெறிந்து கவிதைதர
இவர்போல் ஒருகவிஞர்
இனியிங்கு வருவாரோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

20 கருத்துகள்:

  1. வண்டமிழின் வாலியவர்
    மண்ணறைக்குச் சென்றாலும்
    தீயோடு தானிணைந்து
    பூதியாகிப் போனாலும்
    நானிலத்தே மாந்தருளம்
    நெஞ்சறைக்குள் நீடிருப்பான்!
    விசிறிகட்கு அவன்
    நித்தியமாய் நிற்பவந்தான்
    என்பதனை நும்பாட்டு
    இரங்கலதாய் வந்ததுவே!

    பதிலளிநீக்கு
  2. //நாளைஇந்த வேளைபார்த்து
    ஓடிவரச் சொல்லி
    இன்றே பிரிந்துவிட்டார்!
    என்செய்வாய்? வெண்ணிலவே!//

    தங்களின் அஞ்சலிக்கவிதை அருமை. பாராட்டுக்கள்.

    ஜாலியான திரைப்படக் கவிஞர் வாலியின் மறைவு மிகவும் வருந்தத்தக்கதே.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  4. ரங்கராஜன் என்பவர்
    வாலி ஆனார்
    இன்று உடலை
    காலி செய்துவிட்டு
    அந்த அரங்கனிடமே
    சென்றுவிட்டார்

    இராமாயண வாலியின்
    உயிரை கவர்ந்து சென்றான்
    காப்பிய ராமன்

    இந்த வாலியின் உயிரை
    கவர்ந்தவனோ அனைவரின்
    உயிரையும் பறிக்கும் காலன்
    என்னும் காலதேவன்.

    வாழ் நாளெல்லாம்
    கவிதை மழை பொழிந்தவர்
    இன்று தன் ரசிகர்களை
    கண்ணீர் மழை பொழிய
    வைத்து விட்டு சென்றுவிட்டார்

    தமிழ் உள்ளளவும்
    இத்தரணியில்
    வாழும் அவர் கவிதைகள்

    காற்றில் தவழ்ந்து
    கொண்டிருக்கும் தென்றலாய்
    புயலாய்,இன்பமாய், சுகமாய்
    சோகமாய் மாறி மாறி

    இசைத்துக்கொண்டிருக்கும்
    கேட்பவர் மனதில் இன்ப அதிர்வுகளை
    உண்டாக்கிகொண்டே இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. இரங்கற்ப்பா சோகத்தை இன்னும் அதிகரித்துப்போனது
    அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

    பதிலளிநீக்கு
  7. இரங்கல்பா நன்று ஐயா...

    அவரது வரிகள் என்றும் வாழும்...

    பதிலளிநீக்கு
  8. அரங்கமா நகரத்தார்
    அரங்கனடி சேர்ந்தாரோ?
    தமிழ்த்தாயின் தாலாட்டில்
    தாமுறங்கிப் போனாரோ?

    ஆன்மா சாந்தியடயடையட்டும் ..!

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அவரின் வரிகளில் நிச்சயம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்....

    அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வாலி அவரது பாடல் வரிகள் மூலம் நிச்சயம் நம் மனதில் நிலைத்திருப்பார்.....

    அருமையான இரங்கற்பா....

    எனது அஞ்சலிகளும்......

    பதிலளிநீக்கு