வெள்ளி, 1 மே, 2015

மேதினியில் மேதினமே! -காரஞ்சன் (சேஷ்)



மேதினியில் மேதினமே!

உழைப்போர்கள் உரிமைபெற
உருவான இத்தினத்தில்
வறுமை அகன்றிடவே
பெருகட்டும் தொழில்கள்பல!

பிறருழைப்பைச் சுரண்டி
பிழைப்பவர்கள் தம்செயலைப்
பிழையென உணரட்டும்
பெருமைமிகு இந்நாளில்!

ஏழை எளியோரின்
இன்னல்கள் மறையட்டும்!
பிழையா மழை வரவால் 
உழவெங்கும் தழைக்கட்டும்!

அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!-காரஞ்சன்(சேஷ்)


மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகுக!


என் செயலாவது யாதுமிலை என்றுணர்ந்து

தன்னடியால் உலகளந்து தாமுயர்ந்து நின்றோனின்

பொன்னடி பற்றி போற்றி வணங்கிடுவோம்

மன்மத ஆண்டில் நன்மைகள் பெருகிடவே!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

புதன், 14 ஜனவரி, 2015

"பொங்கலோ பொங்கல்!" -காரஞ்சன்(சேஷ்)














"பொங்கலோ பொங்கல்!"


நாட்டினில் பசிப்பிணியை
ஓட்டிட உழைப்பவர்கள்
கூடிக் களித்துக்
கொண்டாடும்  பொங்கல்!

உறுதுணையாய் நிற்கின்ற
கறவைக்கும் கதிருக்கும்
மறவாமல் நன்றிசொல்லி
மகிழும்நாள் பொங்கல்!

நோக்குங்கால் மகிழ்விக்கும்
மாக்கோலம் பூவோடு!
மணநாள் வரவிற்கு
கன்னியர்கள் கனவோடு!

விளைந்த செந்நெல்லால்
வீடெங்கும் புத்தரிசி!
மஞ்சள் கழுத்துடனே
பொங்கலிடப் புதுப்பானை!
  
செங்கரும்பின் சுவையுடனே
பொங்கட்டும் தைப்பொங்கல்!
எங்கெங்கும் மகிழ்வலைகள்
எந்நாளும் தங்கட்டும்!

உழைப்பின் பயன்பெற்று
உழவர்கள் உயரட்டும்!
தழைத்தோங்கி நம்நாடு
தரணியிலே உயரட்டும்!

பொங்கட்டும் நல்லன்பு !
தங்கட்டும் மகிழ்வலைகள்!
நகைதவழும் முகங்களொடு
பகையுணர்வு மறையட்டும்!

பொங்கலோ பொங்கலென
பொங்கிவரும் மகிழ்வோடு
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம் இந்நாளில்!
                                               -காரஞ்சன்(சேஷ்)
படங்கள்:கூகிளுக்கு நன்றி!

வியாழன், 1 ஜனவரி, 2015

புத்தாண்டே வருக! வருக!-புத்தாண்டு நல்வாழ்த்துகள்!-காரஞ்சன்(சேஷ்)






வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஊற்றுநீர் உயர்ந்து ஊர்கள் தழைத்திடவே
சேற்று வயல்களெலாம் செந்நெல் விளைந்திடவே
வேற்று கிரகங்களுக்கு விண்கலன்கள் விரைந்திடவே
குற்றங்கள் குறைந்து நல் மாற்றம் விளைந்திடவே
காற்றின் மாசகற்றி கடும்பிணி ஒழிந்திடவே
மாற்றங்கள் விளைவித்து ஏற்றங்கள் சேர்த்திடும்
ஈற்றினிலே மூவைந்தை ஏந்திவரும் புத்தாண்டே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 23 நவம்பர், 2014

வழி காண்போம்!- காரஞ்சன்(சேஷ்)

 
அழுக்கைக் களைந்தநீர்
ஆனதே சாக்கடையாய்!
சாக்கடையின் தேக்கநிலை
போக்குகின்றார் குழியிறங்கி!
இழித்தவரைப் பழிப்பவர்தம்
அழுக்கடைந்த மனக்கழிவை
வழித்துத் துடைத்தெறிய
வழிகாண்போம் மானிடரே!
-                                                    -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

"நம் உரத்த சிந்தனை" இதழுக்கு "ஒளிப்படக் கவிதை" போட்டிக்காக எழுதிய கவிதை!

ஞாயிறு, 16 நவம்பர், 2014

கவிதைப்போட்டியில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு! -காரஞ்சன் (சேஷ்)

ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து தீபாவளித் திருநாளை ஒட்டி நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்(2014 ) வெளியாகி உள்ளன. இதில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! 

என் மனைவியின் கவிதைகள் இதோ:

ஓவியக் கவிதை:





வண்ண மலர்ச்சரத்தை 
வாடுமுன்னே சூட்டிவிடு!
புத்தாடை உடுத்தி
புன்முறுவல் பூத்து
மன்னவன் பார்த்திடவே
மலர்ந்திங்கு நின்றாயோ?

ஓவியமாய் உனைப்பார்த்துக்
காவியங்கள் படைப்பானோ?
பிடியிடையில் மலர்க்கூடை
உடைக்கேற்ற பூச்சரங்கள்!

காந்தக் கண்ணாலே
கவர்ந்தாயோ மன்னவனை!
சார்ந்து நிற்பவளின்
சஞ்சலங்கள் அறியானோ?

கஞ்சிக்குள் உப்பாக
கலந்திட்ட அவன்நினைவால்
வஞ்சியவள் நெஞ்சத்தில்
கொஞ்சமல்ல கற்பனைகள்!

பூத்த புன்னகையும்
பூவிதழ் தேன்சுவையும்
மேவிய காதலினால்
மென்மேலும் வளராதோ?
  
நித்திரையில் முத்திரையாய்
நின்றிருக்கும் மன்னவனே!
வண்ண மலர்ச்சரத்தை
வாடுமுன்னே சூட்டிவிடு!

இரண்டாவது கவிதை:

தழைக்காதோ தாயகமே!

நாட்டின் உயர்வுக்கு
நாளுமொரு திட்டம்!
வீணர்கள் சிலராலே
விழலுக்கு நீராக!

எங்கே பிழை என்று
ஏங்கிநாம் தவிக்கின்றோம்!
தாங்கிவரும் செய்திகளோ
தலைக்குனிவைத் தந்திடுதே!

சிறுமியர்க்குக் கொடுமைகள்!
வறுமையால் தற்கொலைகள்!
கற்பழிப்பு, கொலைகளெலாம்
ஏற்புடைத்தா? எண்ணிடுவோம்!

மதுவுக்கு அடிமையென
மயங்கிக் கிடப்போரின்
குடும்பங்கள் சீரழிந்து
படுந்துயரம் பரிதாபம்!

ஒருதலைக் காதலுக்கு
உடன்படவில்லையெனில்
தெருவழி வரும்போது
திராவகத்தை வீசுவதா?

உள்ளத்தில் தெளிவுடனே
ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால்
விழுமிய நிலையடைந்து
தழைக்காதோ தாயகமே!-  

-----முனைவர். இரா.எழிலி புதுச்சேரி

போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
போட்டியை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு.ரூபன் மற்றும் யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகள். போட்டி சிறப்பாக நடைபெற உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நடுவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

-காரஞ்சன் (சேஷ்)

சனி, 8 நவம்பர், 2014

திரு வைகோ அவர்களின் சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவுவிழா-பாராட்டுமடல்!-காரஞ்சன்(சேஷ்)



மலைக்கோட்டை நகர்வாழும்
மாமனிதர் பேர்தன்னை
வைகோ என உரைத்து
வலையுலகம் போற்றுதிங்கே!

வையகத்தில் கோவென்பார்!
ஆனால் நீரோ
வலையுலகின் கோவானீர்!
நிலையான புகழென்றும்
நிச்சயம் உமக்குண்டு!

அருட்கண் பார்வையினை
அருளிவிட்டாள் கலைமகளும்!
திறமையுடன் படைக்கின்றீர்
திகட்டாத தெள்ளமுதை!

கண்பட்ட பொருளெல்லாம்
கதைக்கரு ஆவதென்ன?
எண்ணத்தில் வடிவமைத்து
எழுதுகின்றீர் பலகதைகள்!

ஊருணி நீரன்றோ
உம்கையில் கதைக்கருக்கள்!
வெளிவந்த படைப்புகளோ
விளம்பிடுதே உம்திறத்தை!

திட்டமிட்டுச் செயலாற்றி
எட்டுகின்றீர் உம் இலக்கை!
திடமான மனம்கொண்டு
இடர்களுக்கு விடைகொடுத்தீர்!

அறிவித்தீர் போட்டியொன்றை!
அருந்தவப் பயனைடைந்தோம்!
கரும்புதின்னக் கூலியென்றால்
விரும்பாதோர் யாரிருப்பார்?

வெள்ளியெழும்புகையில்
வெளிவருமே ஒருகதையும்!
வியாழன் உறங்குமுன்னே
விமர்சனங்கள் உமையடையும்!

செவ்வாய் மலராதோ? என
செய்திக்குக் காத்திருப்போம்!
வாயார வாழ்த்தியங்கு
வந்திருக்கும் உம்மடலும்!

நடுவர் யாரென்றே
நாமறியா வண்ணம்
கடந்தன சிலவாரம்
காத்திருந்தோம் விடையறிய!





நடுவரின் சிரமத்தை
நாமறிய ஒருபோட்டி!
விதவிதமாய் விமர்சனங்கள்!
விழிபிதுங்கிப் போனோம் நாம்!

திறம்பட செயலாற்றி
தேர்ந்தெடுத்த விமர்சனங்கள்
அறிவித்தது அவர்திறத்தை!
அயராத அவருழைப்பை!
  
விமர்சனம் எதுவென்று
விளக்கிய விதம் அருமை!
அன்னாரின் உழைப்பினையே
நன்றியுடன் போற்றிடுவோம்!

நாற்பது வாரங்கள்
விரைந்து கரைந்துவிட
வெற்றிவிழாக் காணும்
வேளையை நாமடைந்தோம்!

திண்ணியராகித் 
திறம்படச் செயலாற்றி
எண்ணிய எண்ணமெலாம்
ஈடேறக் காணுகின்றீர்!

அறிவித்தீர் பலவிருதை!
அள்ளிவிட்டீர் பரிசுகளை!
பேரறிவாளன் திருவுக்கு
வேறேதும் விளக்கமுண்டோ?
  
தமிழ் வளரத்தொண்டாற்றும்
உமைப்போற்றும் வலையுலகம்!
ஆழிசூழ் இவ்வுலகில்
வாழிய நீர் பல்லாண்டு!








-காரஞ்சன்(சேஷ்)