சனி, 10 டிசம்பர், 2011

பணம்- கவிதைஆக்கம் காரஞ்சன் (சேஷ்)


நாடக மேடைதனில்
நடிக்க வந்த மாந்தரினம்
தேடித் தினம் அலையும்
திருவெனத் திகழ்பவளே!

இல்லாதோர் ஆகின்றோம்-  நீ
இல்லமதில் இல்லையெனில்!
தங்கி நீ வளர்ந்தால்
தனவந்தர் ஆகின்றோம்!

உண்மையைச் சில நேரம்
உறங்கச் செய்பவள் நீ!
மதிப்பு தரும் உன் மதிப்போ
மாறிடுமே நாடுகளில்!

அடைய முயல்வோரும்
அளவின்றிப் பெற்றோரும்
துறந்திடுவர்-   தூக்கத்தை!

ஈகைக் குணமுடையோர்
இருப்பிடம் நீ சேர்ந்தால்
வள்ளலாய் மாற்றிடுவாய்
வறியவர் வாழ்(ந்)த்திடவே!

பெட்டியில் அடைத்து உனை
வட்டியால் வளர்ப்பர் -சிலர்!
அடைக்க வழியின்றி
அணைந்து மாய்வர்-பலர்!

உழைப்பவர் கைகளிலே
ஊதியமாய் உதித்திடும் நீ
திங்கள் முடியுமுன்னே
திங்கள் போல் தேய்ந்திடுவாய்!

பத்தும் பறந்திடும்
பசி வந்தால்!
பத்தும் நடந்திடும்
பணமிருந்தால்!

அல்லன செய்தடைந்தால்-நீ
அழிவுக்கு வழி செய்வாய்!
 அறவழியால் உனை அடைவோர்
அடைவாரோ பெருந்துயரம்?
                                                       -காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

4 கருத்துகள்:

 1. நல்ல சிந்தனை.வளமான கற்பனை.வாழ்த்துக்கள்.

  பவித்ரா

  பதிலளிநீக்கு
 2. மிக நல்ல வார்த்தைக் கோர்வை... கவிதை...

  வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 3. அன்பின் காரஞ்சன் - சொல் தாண்டவம் ஆடுகிறது. நன்று நன்று. திகழும் திரு - இல்லையெனில் இல்லாதோர் - தங்கினால் தனவந்தர் - உண்மை உறங்க - மதிப்போ மாற - அடய முயன்று தூக்கம் தொலைத்தலும் - அளவின்ற் அடைந்து துறத்தலும் - ஈகை உடையோர் வள்ளலாய் மாறி வாழ்த்துப் பெறுதலும் - வட்டியால் வளர்தலும் அடைக்காமல் மாய்தலும் - திங்களின் இறுதியில் திங்களாய்த் தேய்ந்திடுதலும் - பத்தும் பறப்பது பின் நடப்பது பாழும் பணத்தினால் - அல்லன செய்தால் அழிவு - அறவழியெனில் துயரமடையார்.

  என்ன கற்பனை என்ன கற்பனை - மிக மிக இரசித்தேன் - வாழ்க வளமுடன - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 4. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு