சனி, 10 டிசம்பர், 2011

எட்டையபுரத்தில் எழுந்த ஞாயிறு (பாரதி)



பாரதி!

எட்டையபுரத்தில்
ஞாயிறாய் எழுந்தனை!
அடிமைத்தளையை
அறவே ஒழிக்க
எழுத்தாயுததை
ஏந்தி நின்றனை!

சுதேச மித்திரனில்
சுட்ட  நின் எழுத்தால்,
நாட்டுப் பற்றற்றாரும்
பற்றினர் பற்றினை!

எத்தனை மொழிகள்
இருந்த போதிலும்
சிந்தனை ஒன்றென
செப்பி மகிழ்ந்தனை!

பொதுவுடைமைக்கு
புதுவிதி செய்தனை!
ஆணுக்கிங்கே பெண்
அறிவில் நிகரென்றனை!

அசைவறு மதியும்
நசையறு மனமும்
அன்னை பராசக்தி
அருள வேண்டினை!

எண்ணியபடியெலாம்
கண்ணனைக் கண்டனை!
சாதிகள் இல்லையென
சமத்துவம் போற்றினை!

ஆனந்த சுதந்திரம்
அடைந்ததாய் முழங்கி
அதை அடையுமுன்னரே
அணைந்து மறைந்தனை!

முறுக்கு மீசையும்
முண்டாசுத் தலையும்
அடுத்த தலைமுறைக்கு
நின் அடையாளமாயின!

இத்தனை இத்தனை
செப்பினை எனினும்
எத்தனை எத்தனை
பற்றினர் மாந்தரார்?
என்று நீ கண்டிட
இன்று நீ வந்திடு!

தமிழகத் தமிழர்
நாவினில் தமிழே
இல்லிலும் மதலையர்
சொல்லிலும் தமிழே
இன்றிலை- ஆதலால்
என் செய்குவை
என் தேசியக் கவியே?
                                       -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

3 கருத்துகள்:

  1. இதையெல்லாம் பார்க்கப் பிடிக்காமல் தான் முன்னரே சென்றுவிட்டாரோ....

    நல்ல கவிதை நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. அன்பின் காரஞ்சன் - முண்டாசுக்காரனும் மீசைக்காரனும் ஆகிய பாரதி கூறியதை எல்லாம் இன்றைய மக்கள் மறந்து விட்டார்களே ! இல்லிலும் சொல்லிலும் தமிழே இல்லையே ....... ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு