சனி, 17 டிசம்பர், 2011

துயில் கலைத்த குயிலுடன் ஓர் உரையாடல்- காரஞ்சன் (சேஷ்)


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பயிற்சிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தேன். விடுதியில் தங்கியிருந்தபோது, அதிகாலை, குயில்களின் குரலிசை கேட்டு கண்விழித்தேன். அந்த இனிமையான தருணம் இயற்கையோடு நம் வாழ்வு இயைந்திருந்தால் அற்புதமாக அமையுமே என ஆதங்கப்பட வைத்தது!

விளைநிலங்கள் எல்லாம் வாழ்விடமாக்க விலை பேசப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதனால் வாழ்விடங்கள் இழந்து பல உயிரினங்கள்
அரிதாகிக் கொண்டு வருவதும் வேதனையைத் தூண்டுவதாக அமைகிறது.

இவையெல்லாம் அறிந்தும் அறியாதுபோல் வாழும் மானுடத்தைத் தட்டி எழுப்பிடுமோ இக்குயிலோசை?

                            
துயில் கலைத்த குயில்!

அதிகாலை நேரம்!
சுதி சேர்ந்த பண்ணென
சுகமான் குயிலோசை!
கதவைத் திறந்து
கண்டேன் கருங்குயிலை!

குயில்:
              ஊருக்குப் புதிதோ நீர்?
              உம் உறக்கம் கலைத்தேனோ?
              எங்கிருந்து வந்துள்ளீர்?

நான்:
               எம்மூராம் புதுவையிலே
               உமக்கெனவே தோப்புண்டு!
               தேசியக்கவி பாரதியின்
               தேன்தமிழ்ப் பாட்டுண்டு!

               தேவைகள் அதிகரிக்க
               தினம் மாறும் தொழில்நுட்பம்!
               சேவை சிறப்படைய
               சீரிய பயிற்சிக்காய்
               சேர்கின்றோம் இவ்விடத்தே!

              காலைப் பொழுதினிலே
              களிப்புடன் கூவுகின்றாய்!
              கவலையிலா வாழ்வு
              கைவந்த தெப்படியோ?

குயில்:
             
               ஊர்வளம் கண்டீரா?
               வானுக்கும் பூமிக்கும்
               வரைந்த கோடுகளாய்
               வளர்ந்த மரவரிசை!
               
              வளம்பெருக்கும் நதிகள்!
               ஊர்வெப்பம் தணித்து
                ஊரழகை ஒளித்துவைக்கும்
                உயர்ந்த தென்னைகள்!
               
              தேவை அதிகமில்லை!
               முட்டை இடுவதுடன்
               முடிந்தது என்கவலை!
              
               மேடைகளாய்க் கோடுகள்
               மெய்மறந்து கூவுகின்றேன்!

நான்:
              எப்போது நீ வருவாய்
              எங்கள் ஊர் கண்டிடவே?

குயில்:

               இயற்கையோ டிசைந்திட்ட
               இனிய வாழ்வு இங்கெமக்கு!

              இயந்திர வாழ்வினிலும்
              எம் குரலை இரசிக்கின்றீர்!

              வளர்த்திடுங்கள் மரங்கள்பல!
              வானம் பார்க்கா(த)து
              வளம் காணும் உம் ஊரும்!

              வனவளம் தழைத்திட்டால்
              வாழும் பல் உயிரினமே!

              வந்தைடைவோம் நாங்களுமே
              வாழ்த்தி உமைப் பாடிடவே!

                                                         -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

10 கருத்துகள்:

  1. enakku emappur veettu mutramum ottinmel pookkaludan avaraikkodiyum gnabagam varuthu

    பதிலளிநீக்கு
  2. குயிலுடன் ஓர் உரையாடல் கவிதையாய் அமைந்த வண்ணம் சிறப்பு. கற்பனையில் குயில் பேசியது உங்கள் மன எண்ணங்களின் தொகுப்பாக அமைந்திருந்ததும் சிறப்பே

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி சகோ.., நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  4. குயிலுடன் நடந்த உரையாடல்... மிக நன்று நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. Kasthuri wrote: "ennmur puduvaiyele onaku oru thoppu undu - arpudham"

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் காரஞ்சன் - அருமையான கவிதை - ஆதங்கம் புரிகிறது. இயற்கையினைக் காக்க வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி விட்டோம். குருவியும் கவிஞனும் உரையாடுவது அழகான கவிதையாய் மிளிர்கிறது. நல்வாழ்த்துகள் காரஞ்சன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. வானுக்கும் பூமிக்கும் கோடுகளாய் மரங்கள்...
    அருமை....
    குயில் தோப்புக்கே குயிலுக்கு அழைப்பு...
    பாரதிக்கும் அழைப்பு...
    பாரதி பாடிய குயிலுக்கும் அழைப்பு...
    சமூக அக்கறையோடும் கவிதை--
    இயற்கை மீதான அக்கறையோடும் கவிதை...
    தொடருங்கள்.. நானும் தொடர்ந்தே வருவேன்...
    அனைத்தையும் இரசிப்போம் நன்றி!

    முத்துக்குமார்

    பதிலளிநீக்கு
  9. குக்கூ குக்கூ குயிலினமே நண்பரோடு பேசியது போதும் தென்றலோடும் பேச வருவாயோ ?

    பதிலளிநீக்கு