வெள்ளி, 25 ஏப்ரல், 2014

"உண்மை சற்றே வெண்மை" -சிறுகதை விமர்சனம்- இரண்டாம்பரிசு

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "உண்மை சற்றே வெண்மை" கதையின் விமர்சனத்திற்கு எனக்கு இரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

 
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


"உண்மை சற்றே வெண்மை" கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:


என்னுடைய விமர்சனம் இதோ:

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்றார் கவிமணி. ஆனால் இக்கதையோ காராம்பசுவாகப் பிறக்காமல் கன்னிப்பெண்ணாகப் பிறந்துவிட்டேனே என தன் எண்ணக் குமுறலை வெளிப்படுத்தும்  பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்வவதற்காக  எழுதப்பட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.


கதையின் ஆரம்பம் நம்மை ஒரு மாட்டுத் தொழுவத்தின் முன்னால் கொண்டு நிறுத்திவிடுகிறது.

"பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால் பசுவே நீ தரும் பால்..

உன்பால் உலகை உருகிடச் செய்யும் பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்

பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும் பந்தம் திருமகளே - இந்தப்

பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும் சொந்தம் குலமகளே"

எனும் பாடல் வரிகளை நினைவூட்டிச் செல்கிறது. பசுக்களை நன்கு பராமரிப்பதும், கன்றுகள் குடித்த பின் மீதமுள்ள பாலைக் கறந்து பயன்படுத்துவதாகக் காட்டியதிலிருந்து கதாநாயகியின் பெற்றோர் நல்ல இரக்ககுணமும், மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.

பசுக்களிடம் காட்டிய அக்கறையைத் தங்கள் அழகு தேவதையான ஒரே பெண்ணிடம் காட்டத் தவறவில்லை அவர்களது பெற்றோர். அவளைச் செல்லமாக வளர்த்து உரிய பருவத்தில் பொருத்தமான வரனைத் தேடும் முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.

பசுக்கள் வளர்ந்து, கருவுற்று, கன்றுகளை  ஈன்று பண்ணையாகி விட்டாலும் தனக்கென்று ஒரு வரன் மட்டும் இன்னும் அமையவில்லை என அப்பெண் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டும் இடமும்,   இரவு நேரங்களில் சில பசுக்கள் ஒருமாதிரி கத்தும்போது அவைகளால் தம் உணர்வை வெளிப்படுத்த முடிவதாகவும், தன்னால் அவ்வாறு வெளிப்படுத்தமுடியாதென எண்ணும் இடமும் எல்லோர் மனதிலும் நிச்சயம்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் பெற்றோர் தன் மகளுக்கு உரிய வரன் கிடைக்கவில்லையே என கவலைப்படுவதாக அமைத்ததிலிருந்து அவர்களின் பொறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தப் படுகிறது.

"பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. " எனத் தொடங்கும் வரிகளில் கதையின் முடிச்சு ஆரம்பமாகிறது.


"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆயிரம் தடவையானாலும், திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே! " என்ற வரிகளில் ஒரு திருப்பம் விளைகிறது.


பருவ வயதை எட்டியவுடன் மகனோ. மகளோ தம் பெற்றோர் தம்மிடம் முன்புபோல் அன்பாக இல்லையென எண்ணுதல் இயற்கைதான்.

இரவெல்லாம் கத்திக்கொண்டிருந்த பசுமாடு, கால்நடை வைத்தியரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றபின் இரவில் கத்தாமல் அமைதியாக இருந்ததையும், அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும்  குடிகொண்டிருந்ததையும், மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருந்ததையும் வைத்து தனக்கு ஏதோ புரிந்தும், புரியாமலும் இருப்பதாகக் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் வெகுளியானவளாகவும், பாலியல் விஷயங்கள் குறித்து அறியாதிருந்த நிலையும் வெளிப்படுத்தப் பட்டது மட்டுமல்ல  உரிய விதத்தில் பாலியல் குறித்தும், நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.

இக்காலத்தில் மாணவப்பருவத்திலேயே மகளிர் பள்ளிகளில் பாலியல் குறித்த இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியைகள் மூலம் வழிவகை செய்கிறார்கள். பாடத்திட்டங்களும் ஓரளவு இது குறித்த விஷயங்களை அறிய வைப்பதாகவே அமைக்கப்பட்டுள்ளன. பருவமடைந்த   குழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாக ஏற்பாடு செய்கிறார்கள். தாயாரின் பங்கு  இதில் மிகவும் அதிகம்.

காராம்பசுவின் வரவால் கதையின் முடிச்சு அவிழ்க்கப் படுகிறது. காராம்பசுவின் மடியில்    வெள்ளைத் திட்டுகள்  இருந்தும், அதன் அழகு கூடி, அதிக விலை போவதையும்,  தனக்கு அதே இடத்தில் ஒரு ரூபாய் அளவில் உள்ள வெள்ளைத்திட்டால் தன் திருமணம்  தடைபடுவதையும் எடுத்துரைப்பதில்தான் திருமணம தடைபடுவதற்கான காரணம் வெளிப்படுத்தப்படுகிறது.

மறைவிடத்தில் இருந்த தழும்பைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாயாரிடம்  மறைக்காமல் கூறியவிதம் பாராட்டத்தக்கது. கதாசிரியரும் அதை இலைமறை காயாக உணர்த்தியவிதம் அருமை.

இந்த இடத்திலும் சமூகத்திற்கு ஒரு செய்தியை உணர்த்த விழைவதாகவே தெரிகிறது. இன்றும்  இதுபோன்ற வெள்ளைப் புள்ளிகளையும், தழும்புகளையும் “வெண்குஷ்டம்” என்றே நினைத்து அக்குறைபாடுடையவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைக்கும் நிலையும், அவர்களின் திருமணத்திற்கு சிக்கல் உண்டாகும் நிலையும்  ஆங்காங்கே  நிலவுகிறது.


 இது ஒரு நிறக் குறைபாடு என்பதும் இதை “வெண்புள்ளிகள்”என்றே அழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு 2010ல் அரசாணை வெளியிட்டுள்ளது. வெண்புள்ளிகள் உள்ளவர்க்கு தற்காலத்தில் மகிழ்ச்சிதரும் செய்தி ஒன்றும் உள்ளது. நவீன சிகிச்சை முறைகள் மூலம் வெண்புள்ளிகளைக் குணப்படுத்த முடியும் என ஸ்டான்லி மருத்துவமனையில் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
 

இந்தக் கதையின் நாயகிக்கு அவள் பெற்றோர் அதற்கான சிகிச்சை அளிக்க முற்பட்டார்களா என்பதை எங்குமே குறிப்பிடவில்லை. இது ஒரு நோயல்ல. குறைபாடு என்பதை இந்த சமூகத்திற்குப் புரிய வைக்கவும், அதற்காக நவீன மருத்துவத்தில் ஏராளமான சிகிச்சை முறை உள்ளதென்பதையும் விளக்கும் வகையில் இந்தக் கதை உருவாக்கப் பட்டுள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது.

யாராவது ஒரு தூரத்து உறவினர் அல்லது மருத்துவர் அவளைப் பெண்பார்க்க வந்து அந்நோயைக் குணப்படுத்தி திருமணம் முடித்ததாகக் காட்டியிருந்தால் இன்னும் அற்புதமாக இருந்திருக்கும்.


சமுதாயத்தில் அதுவம் நடுத்தர மற்றும் வறுமையில் வாழ்பவர்களிடையே இதுபோன்ற குறைபாட்டுடையவர்களின் மனநிலையையும் அவர் படும் துயரங்களையும் விளக்கி இது ஒரு நோயே அல்ல, குறைபாடுதான் என்பதை விளங்க வைக்க முயற்சித்ததும் அருமை.

மொத்தத்தில் இதை ஒரு விழிப்புணர்வுப் படமாக எடுத்து சமுதாய்த்திற்குப் பயன்படும் வகையில் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து.

கதாசிரியரின் படைப்புகள் யாவும் கற்பனைக் கதைகளாய்த் தோன்றாமல் சமுதாயத்தில் எங்கோ நடந்த நிகழ்வுகளை ஒட்டி அமைவதாகத் தோன்றுகிறது. கதாபாத்திரங்களை சித்தரிப்பதிலும், அதற்கான களத்தைத் தேர்வு செய்யும் விதத்திலும் நம் பாராட்டைப் பெற்றுவிடுவதிலும், அவர் சாதாரணமானவர் இல்லை, சாதிக்கப் பிந்தவர்தான் என்பது உறுதியாகிறது.

-காராஞ்சன்(சேஷ்)

16 கருத்துகள்:

 1. பாராட்டுக்கள் நண்பரே! தொடர்ந்து வெல்ல வாழ்த்துக்கள்- தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 2. தொடரட்டும் வெற்றிகள்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.

  தொடர்ச்சியான வெற்றி மழை... இன்னும் பல வெற்றிகள் குவிய எனது வாழ்த்துக்கள் ஐயா.

  எனது பக்கம் கவிதையா.
  எப்போது ஒளிருமட வசந்த காலம்......

  வாருங்கள் அன்போடு....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. சிறுகதை விமர்சனப் போட்டியில் தாங்கள் பரிசு பெற்றமைக்கு, உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

  தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

  அன்புடன் கோபு [ VGK ]

  பதிலளிநீக்கு
 6. அருமையான விமர்சனம். தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இரண்டாம் பரிசு பெற்றமைக்கு பாராட்டுகள். அவரது தளத்தில் படித்தேன்....

  மேலும் பல பரிசுகள் உங்களை வந்தடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு