திங்கள், 14 ஏப்ரல், 2014

"நாவினாற் சுட்ட வடு"- சிறுகதை விமர்சனத்திற்கு முதற்பரிசு! - காரஞ்சன்(சேஷ்)

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு முதல்  பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு மீண்டும்  ஒருமுறை கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


நாவினாற் சுட்டவடு கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-01-03-first-prize-winners.html

என்னுடைய விமர்சனம் இதோ:

மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது  பேச்சும், நகைச்சுவை உணர்வும்தான்.  எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறரோடு பேச்சின் மூலம் பகிர்ந்துகொள்ள  உறுதுணையாக இருக்கும் நாவிற்கு, வள்ளுவர் தனி அதிகாரம் அமைத்து முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்தே அதை அடக்கி ஆள வேண்டியதன் அவசியம் வெளிப்படுகிறது. தலைப்பைப் பார்த்தவுடன்  கதை நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.

இன்றும் கூட கிராமங்களில் “வார்த்தையைக் கொட்டிவிட்டால் வாரமுடியாது” என்ற பழமொழி வழக்கில் உள்ளது. எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இவற்றைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும். நாவடக்கம் எந்தச் சூழலிலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைக்கு  “நாவினால் சுட்ட வடு” என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 
வாழ்வின் பேரின்பம் மழலைச் செல்வங்கள்தான். அது இல்லாத இடங்களில் ஆயிரம் செல்வமிருப்பினும் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது.  தன் கல்லூரித் தோழியான ரேவதி தன் நாத்தனார் குழந்தைகளுடன் தன் வீட்டிற்கு வரும்போதெல்லாம், அந்தக் குழந்தைகளின் சேட்டையால், ஒரு சலிப்பும், பயமும் அடைந்தாலும்,   குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என எண்ணும் பாங்கும், அவர்களுக்குப் பிரியமான உணவுகளைத் தயார் செய்து வைத்துவிட்டுக் காத்திருப்பதிலும்  குழந்தைகள் மீது கதாநாயகிக்கு ஒரு அக்கறை இருப்பதை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளது. குழந்தைகளின் குறும்புகளை விவரிக்கும்போது ஆசிரியர் அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அவர்களுக்குப் பிடித்தமான உணவுவகைகளையும் பட்டியலிட்டவிதம் அருமை!
குழந்தைகள் மிகவும் இயல்பானவர்கள். தாம் செல்லும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் உடனே ஒன்றாய்க் கலந்து விளையாட ஆரம்பிக்கும் இயல்புடையவர்கள். அவர்கள் தனித்து விடப்படும்போது, பிறர் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காக கையாளும் வழிமுறைகள் தர்மசங்கடமாக சிலருக்குத் தோன்றுகின்றன. தோழியின் வருகையால் தான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது தடைபடுமோ என்று எண்ணி வெளிப்படையாகவே அது முடிந்ததும் வரச் சொல்வதும், அன்றைய தினம் மதிய உறக்கம் கெட்டுவிடும் என நினைப்பதும் ஒரு சராசரிப்பெண்ணின் சின்ன சின்ன ஆசைகள் கதாநாயகிக்குள் இருப்பதை அழகாக வெளிக்கொணரும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
தான் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டிய, தான் இந்த இடத்தில் வாழ்க்கைப்பட உதவிய தன் தோழி ரேவதிக்கும் குழந்தை பாக்கியம் இதுவரை இல்லாதிருப்பதை எண்ணி  தானும் அவளும் ஒரே நிலையில் இருப்பதை நினைத்து அல்ப சந்தோஷம் அடைவதும், தனக்கு ஒன்றுக்கே வழி இல்லாதபோது சிலருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தையாகப் பிறப்பதை எண்ணி ஆதங்கப் படுவதிலிருந்தும், மழலைச் செல்வம் இல்லாததால் மனதில் குடிகொண்ட ஏக்கத்தையும், பெற்றவர்களைப் பார்த்து பெருமூச்செறியும் சராசரிப் பெண்ணாகிவிடுவதை வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு தொட்டில் இடும்போது, குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்கள், அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம்  செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று, கூடியிருந்த வயதான பெண்மணிகள் கூற, மறுமனை என்ற பெயரில்  பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, இவர்களுக்கும், மாலையிட்டு, கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விடுகின்றனர். பலமுறை இப்படி நிகழும்போது அதனால் அந்தப் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை கதாநாயகி   தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துவதாய் அமைத்து  அத்தகைய செயல்களைத் தவிர்க்கலாமே என சமுதாயத்திற்கும் ஒரு சாட்டையடி கொடுத்துள்ளார்.
குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொருவர் வெவ்வேறுவிதமான ஆலோசனைகளையும், சம்ப்பிரதாயமான  தீர்வுகளையும் சொல்லும்போதும், பிறர் பார்வையில் அவர்கள் ஒரு காட்சிப்பொருளாக ஆகநேர்கையில்  அவர்களின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதை தனக்கே  உரித்தான பாணியில் எடுத்துரைத்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அயர்ந்து  உறங்கிய குழந்தையால் நேரம்போவது தெரியாமல் அளவளாவிய தோழிகள், சத்தம் கேட்டவுடன் படுக்கையறையில் இருந்த மடிக்கணினியை கீழே இழுத்துத் தள்ளியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாலும், ரேவதி நான் வருகிறேன் என்று கூறி அசட்டையாக அகல்வதும், அதனால் கதாநாயகி எரிச்சல் அடைவதும் சராசரிப் பெண்களின் வாழ்வில் நிகழ்வதுதான். கணவரின் மடிக்கணினியை இயக்கத் தெரியாது அப்படியே முயற்சித்து ஏதாவது பழுதாகிவிட்டாலென்னசெய்வது என எண்ணும் இடத்தில் கதாநாயகியுடைய தாழ்வு மனப்பான்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
கணவரிடம் அந்நிகழ்வை உரைப்பதற்கு கதாநாயகி பீடிகை போடுவதும் அருமை! அவர் மனம் நோகாத வகையில் அதை வெளிப்படுத்த நினைத்ததும் அருமை.   வீட்டிற்குச் சென்றபின் ரேவதி தன் தோழியிடம் மடிக்கணினிக்கு ஏதாவது சேதம் விளைந்ததா என வினவியிருக்கலாம்.  இதுபோன்ற நிகழ்வுகள் யாருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்காக தோழியின் செயல்பாடு  அமைக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அசட்டையாய் அகன்ற ரேவதிக்கு, தன் கணவர் தொலைபேசியில்,  தன் மடிக்கணினிக்கு எள்ளளவும் சேதமில்லை என உரைப்பதைக் கேட்டு மனதிற்குள் தனக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவளிடம் கனிவுடன் தன் கணவர் பேசுவதாக ஆதங்கப் படுவதாய் அமைத்தது நியாயமான நிகழ்வுதான்.
”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான் .....  விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே”   என்று கணவர் கூறும்போது, தன்னில் பாதியான தன் மனைவியின் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்  என உணரத் தவறி விட்டார்.
 ஒருவேளை மடிக்கண்ணிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இதே வார்த்தைகள் வெளிப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும் குழந்தையில்லாமல் போனதற்கு மனைவி மட்டுமே காரணம் என அவர் எண்ணுகிறாரா? அவரிடமும் குறைகள் இருக்கலாம் அல்லவா?
மடிக்கணினி உடையாததைப்பற்றி மகிழ்வடைந்த கணவர் தன் மனைவியின் மனம் உடைந்ததை உணராதது கொடுமை!
மொத்தத்தில் இந்தக் கதையில்  குழந்தைகளின் குறும்புகள், குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தைகளை வரவேற்கக் காத்திருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்றவை மிகவும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.
நாம் சொல்லும் சொற்கள், சொல்லும் சுழ்நிலைகள் மற்றும்  சொல்லும் விதத்தைப் பொறுத்து பிறர் மனத்தை எப்படி பாதிக்கும் என்பதை அருமையாக விளக்கி “நா காக்க” என அறிவுறுத்துகிறார் கதாசிரியர். குழந்தையில்லாதவர்களுக்கு, சில சடங்குகளில் அவர்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்துவதால் அவற்றின் மீது அவர்கள் நம்பிக்கை இழப்பதும், செய்யச் சொல்பவர்களின் மீது வெறுப்புணர்ச்சி கொள்வதும் நிகழும் என்பதை அழகாக விளக்கி அவற்றைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார்.
அருமையான  இந்தக் கதையைப் படைத்த ஆசிரியருக்கு என் பாராட்டுகள்!
- காரஞ்சன்(சேஷ்)

என்னுடன் பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! நன்றி!

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
  2. சிறுகதை விமர்சனப் போட்டியில் தாங்கள் மீண்டும் ஓர் முதல் பரிசினை பெற்றமைக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

   மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

   தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

   அன்புடன் கோபு [ VGK ]

   நீக்கு
  3. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 2. சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சேஷாத்ரி. மேலும் பல பரிசுகள் பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு