வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நினைவேட்டிலிருந்து! -------காரஞ்சன்(சேஷ்)


                                                    நினைவேட்டிலிருந்து!

தொண்ணூறுகளின்
தொடக்கம் வரை
ஊற்று நீரை உவந்தளித்த
தோட்டத்துக் கிணறு இது!

கோடையிலோ இது
குளிர்ந்த நீர்ப்பானை!
எப்போதும் ஈரத்தால்
செங்கல் தரையெங்கும்
தங்கிடும் பாசியினம்!

கணக்காசிரியரின்
பிரம்படி தவிர்த்திட
பெருக்கலையும் வகுத்தலையும்
துணிதுவைத்த அம்மாவைத்
தொந்தரவு செய்து
நான்காம் வகுப்பில்
நான் கற்றது இங்குதான்!

அடிவரை சுரண்டி
அள்ளினர்- மணலினை!
வறண்ட மடியாயின
வளமான ஆறுகள்!

ஊற்றுக்கண் அடைபட
ஈரக்கயிற்றுடன் இராட்டினமும்
குறுக்கு மரக்கட்டையும்
காலமாற்றத்தில்
காணாமற்போயின!

புதுப்பித்த சுவர்களுடன்
புது நடைபாதையுடன்
நீரில்லாக் கிணறு
நினைவுச் சின்னமாய்!

என் நினைவேட்டில்
இன்றளவும்
ஈரக்கிணற்றடிதான்
நீங்கா இடம்பிடித்து
நிரந்தரமாய் நிற்கிறது!

எட்டிப் பார்க்கிறேன்!
வறண்ட கிணற்றினுள்
வழிந்து மறைந்தன
கண்களில் திரண்ட
கண்ணீர்த் துளிகள்!

-காரஞ்சன்(சேஷ்)

21 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா.

  கடந்த கால நினைவுகள் சுமந்த கவிதை.வரிகள் ...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....

  கட்டுரைப் போட்டிக்கான
  சன்றிதழ்+பரிசுப்பொருளும் மிகவிரைவில் வந்தடையும்..ஐயா..
  வேலையின் நிமிர்த்தம்....கால தாமதம்......

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு கம்பனிகளின் உற்பத்தி பொருட்களை ஆய்வு செய்யும் காரணத்தால் வலையுலகம் வருவதும் மிக கடினம்...பணி முடிவடைய இன்னும்.15நாட்கள் உள்ளது...அதன் பின்புதான் வலையுலகம் எட்டிப்பார்க்க முடியும்.ஐயா..

   நன்றி
   அன்புடன்
   ரூபன்

   நீக்கு
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. பல கிணறுகள் வரண்டு போய், மூடியே விட்டார்கள்.... :(

  நினைவலைகள்..... சில சமயங்களில் வருத்தமும் தரக்கூடும்...

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. என் இளம் வயதில் ஓட்டு வீட்டுக்குடியிருப்பினில் ஒண்டிக்குடுத்தனமாக வாழ்க்கை. சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள். குடிநீருக்கு நான்கு பொதுக்குழாய்கள் மட்டுமே.

  மற்ற எல்லாத் தேவைகளுக்கும் ஒரு பிரும்மாண்ட கிணறு உண்டு. அது கங்கைபோல கோடையிலும் வற்றாத கிணறு. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்ன இரும்பு வாளி + கயிறு வைத்திருப்போம்.

  இரண்டு பெரிய ஜகடைகள் எப்போதுமே கிணற்றில் இருக்கும். ஓயாமல் அதில் நீர் எடுப்பதால் அவை ஒரு வித ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அவை காதுக்குக் கஷ்டமாக இருக்கும். அவற்றைக் கழட்டி எண்ணெய் மற்றும் கிரீஸ் போட்டு சத்தமில்லாமல் செய்வார்கள் சில பொதுநல விரும்பிகள்.

  சமயத்தில் கிணற்றுக்குள் ஏதாவது முக்கியமான பொருட்கள் + நீர் எடுத்துவரும் வாளி முதலியன அறுந்து விழுந்து விடுவதும் உண்டு. அந்த ஆழமாக கிணற்றில் சிலர் இறங்கி நீச்சலடித்து, மூச்சை தம் கட்டி உள்ளே சென்று காணாமல் போன பொருட்களை தேட முயற்சிப்பதும் உண்டு. இடுப்பில் வலுவாக கயிற்றினைக் கட்டிக்கொண்டு இறங்குவார்கள். கயிற்றின் மறுநுனியை வெளியே ஒருவர் பாதுகாப்புக்காக வலுவாகப் பிடித்துக் கொண்டிருப்பார்.

  அங்கு அருகில் இருந்தக் கோயிலில் பாதாளக்கரண்டி என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் கயிற்றைக்கட்டி கிணற்றில் போட்டு துழாவினால் அதில் உள்ள நூற்றுக்கணக்கான கொக்கிகளில் ஏதாவது ஒன்றில் மாட்டிக்கொண்டு, வாளி முதலிய பொருட்கள் மேலே வந்துவிடும் வாய்ப்பும் உண்டு. நாம் தொலைத்த எதையாவது தேடினால் வேறு ஏதாவது கிடைப்பதும் உண்டு.

  பாதாளக்கரண்டி என்பது இரும்பினால் செய்யப்பட்டது. மிகப்பெரிய ஆமை வடிவத்தில் இருக்கும். அதைச்சுற்றி நிறைய அசையும் கொக்கிகள் தொங்கிக்கொண்டிருக்கும்.

  பாதாளக் கரண்டியை கோயில் நிர்வாகம் நம்மிடம் தருவதற்கு, அடமானமாக ஒரு பெரிய பித்தளைச்சொம்பு போன்ற ஏதாவது ஒரு பொருளை அங்கு கொடுத்துவிட்டு வரவேண்டும். பிறகு பாதாளக்கரண்டியை திரும்ப கோயிலில் ஒப்படைக்கும் போது அந்த அடமானப்பொருளை நம்மிடம் திரும்பத்தருவார்கள்.

  இப்போது அங்கு அந்த கிணற்றையும் காணோம். தண்ணீரையும் காணோம். அதன்மேல் ஒரு மிகப்பெரிய கட்டடம் எழுப்பியுள்ளார்கள்.

  காலம் காலமாக தண்ணீர் அளித்த அந்த மிகவும் பிரும்மாண்டமானக் கிணற்றை நினைத்தால் ...... இன்று தண்ணீருக்கு பதில் கண்ணீர் மட்டுமே வருகிறது என்பது உண்மை தான்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! எங்கள் வீட்டுக் கிணற்றில் கோடையில் தூர்வாரும்போது, காணாமற்போன சில பொருட்களும், காக்காய் தள்ளிவிட்ட பொருட்களும் அந்தக் கருத்த மண் குழம்பிலிருந்து கண்டெடுக்கப் பட்டதுண்டு! சில நேரங்களில் கயிறு அறுந்து விழுந்த குடம் அல்லது வாளியை எடுக்க வடக்கயிறு ஒன்றை பக்கவாட்டத் தூண்களில் கட்டிவிட்டு அதைப் பிடித்துக்கொண்டு இறங்கி எடுப்பார் என் அப்பா! இப்போது இவையெல்லாம் காணக்கிடைக்காத காட்சிகள்! எப்போதாவது வந்து சுகாதாரத் துறை சார்பில் மருந்து கரைத்து விட்டுச் செல்வார்கள். ஓரிரு நாட்களுக்கு அந்த நீரை அருந்தப் பிடிக்காது. குளோரின் நெடி வீசும். வயதான தாத்தா ஒருவர் நீங்கள் குறிப்பிடும் "பாதாளக் கரண்டி" ஒன்றை வைத்திருந்த ஞாபகம். அதை எங்கள் ஊரில் "பாதாளகொலுசு" என்றழைத்ததாக ஞாபகம். ஒரே ஒருமுறை வான்கிவந்திருக்கிறேன். மலரும் நினைவுகளைப் பகிர்ந்து/பகிர வைத்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி பல!

  பதிலளிநீக்கு
 7. இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

  நினைவேட்டிலிருந்து புதுப்பித்தவை அருமை..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி! சித்திரைப் புத்தாண்டு கவிதை படைத்துள்ளேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. கண்ணீர்த்துளிகளால்தான் இனிமேல் கிணறும் நிறையவேண்டும்போலிருக்கிறது....ம்ம்ம்ம்...என்ன செய்வது???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 10. கிணற்றின் புகைப்படம் பழைய நினைவுகளைக் கிளறிவிடுவது என்னவோ நிஜந்தான்.கிணற்றடியின் துளசிமாடப் பூஜையும் நல்ல நிலவு நாட்களில் குழந்தைகளுக்கு கைச்சோறு போட்ட நினைவும் நடுஇரவிலும் ஒன்றாய் அமர்ந்து குடும்பத்தின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்ட நினைவும் வரத்தான் செய்கின்றன.நினைவுகளை நினைவூட்டிய தங்களுக்கு என் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு