திங்கள், 7 ஏப்ரல், 2014

திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதற்பரிசு!


மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு முதன் முறையாக
முதல்  பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-01-04-first-prize-winners.html
என் விமர்சனம் இதோ!

கதாசிரியரே கதாநாயகனோ?. முன்கதைச் சுருக்கத்தை கண்முன்னே நிறுத்திய அருமையான நடை  அந்நாளில் இது திரைக்கதையாக வடிவமைக்கப்பெற்று, மறைந்த காதல் மன்னன் ஜெமினி அவர்களோ (அ) நடிகர் திலகம் சிவாஜி அவர்களோ நடித்து திரைப்படமாக வெளிவந்திருந்தால் நிச்சயம் வசூலைக் குவித்து, இன்றும் பேசப்படும் படங்களில் ஒன்றாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
 
ஆயிரம் ஆசைகளை உள்ளடக்கி  இருந்தாலும், அந்தக்காலத்து  இளைஞர்களின் அடக்கமான நடைமுறைகள், உயர்ந்ததோர் சுயக் கட்டுப்பாடு, அவர்தம் பொழுதுபோக்கு, மன ஓட்டம் முதலியவற்றைத் தெள்ளிய முறையில் எடுத்துக்காட்டும் இடங்கள் இனிமை.
 
அந்தக்கால திருச்சி வாழ்க்கையினை விளக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த திரைப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாய் காட்சிகளின் வர்ணனைகள் அமைந்துள்ளன. அந்தக் கால ஓட்டு வீடுகள்,ஒற்றுமையான வாழ்க்கை, திருட்டுப் பயமற்ற நிலை, கட்டுப்பாட்டுடன் கூடிய கண்ணியமான நடைமுறைகள், காலை விடியலின் அன்றாட நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு முதலியன தேர்ந்தெடுத்த சொற்களால் விவரிக்கப் பட்டுள்ளன.
 
இன்றைய தலைமுறை  இழந்த விஷயங்களாகிவிட்டன. தன்னைச் சுற்றி வந்தவள், இலை மறை காய் போல் இதயத்தில் இவர்மீது இருந்த காதலை வெளிப்படுத்தியதாய் விவரிக்கும் வரிகள் பழைய கால திரைப்படக் காட்சிகளைப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன.
 
தன் மனம் விரும்பியவளை விவரித்த விதம், அவளது அழகுருவை அருமையாய் ரசித்த ஒழுங்கு அவர்தம் வீட்டுவாயிலில் நின்று, பின் அவர்களால் அழைக்கப்பட்டு உபசரிப்புக்குள்ளான போதும் உண்மையான உள்ளக்கிடக்கையை விவரிக்க இயலாமல் இருந்த விதம், ஆசீர்வாதம் பெறும்போது தமது அவாவை அசைபோட்டது என்று எல்லாமே ஆற்றொழுக்கோடு அருமையாய் அமைக்கப்பட்டு அன்றைய இளைய தலைமுறை வளர்ந்த விதத்தை  நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.
 
படிப்பு முடிந்தபின் கிடைத்த வேலையில் சேர்ந்து, பின் தன் தகுதிக்கேற்ற வேலையைத் தேட முயலும் நிகழ்வு இன்றைய இளைஞர்களிலிருந்து வேறுபட்டு, அவர்களை நிதர்சனத்திற்குத் தயாராக்கும் நோக்கில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
 
வேலையில் சேர்ந்ததும்,  பெற்றோர்கள் ஏற்ற வயதில் இல்லறத்துணையைத் தேடி மணமுடித்தபோது, அதை மனமுவந்து ஏற்று தமக்கெனப் பிறந்தவள் இவள்தான் எனும் மனப்பக்குவத்தை அடைந்து சீரிய முறையில் இல்லறம் நடத்துவதாய் அமைத்தது மிகச் சிறப்பு.
 
தன்னை விரும்பியவளை, பல வருடங்களுக்குப்பின் சந்திக்க நேர்கையில் அவள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவர் மீது கொண்டிருந்த ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்த விதமும், ஆத்ம திருப்திக்காக அன்றொருநாள் மட்டும் அவள் விரும்பிய சிற்சில பொருட்களை உரிமையோடு தானே வாங்கிக் கொண்டதும், இவர் மனமுவந்து அளித்த முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்ததும், இவரிடத்தில் அவள் கொண்டிருந்த கண்ணியமான காதலை வெளிப்படுத்துவதாய் அமைந்ததும் முதல் தரமானது.
 
தனது மகனின் தேர்வான மருமகளைப்  பார்த்தபோது மனதில் விரிந்த காட்சிப் பிரதிபலிப்பு அற்புதம். அவர்கள் வீட்டிற்குச் சென்றதும், பெண்ணுடைய அம்மாவைப் பார்க்க நேர்கையில் அவள் தன்னால் விரும்பப் பட்டவள் என்று அறிந்தபோது, தான் விரும்பியவள் தன்னையே மறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து   ....... மனம் வருந்தி தாங்கொணாத் துயருற்றதையும், தலை திருப்பி நின்றதையும் தத்ரூபமாய் விளக்கியது தரமானதொரு நடை.
 
தன் மகன் செல்வந்தரான கோபிநாத் அவர்களின் மகளை தான் விரும்புவதையும், ஆனால் அவளின் அம்மாவின் தற்போதைய நிலையை நீக்கி நோக்கினால் ஏற்றுக் கொள்ளவதில் எந்தவொரு தடையும் இருக்கமுடியாதென நியாயப் படுத்தும் விதமாய் உரைக்கும் போது “அவளும் ஒரு காலத்தில் அழகாய் இருந்தவள்தானே!” என தன் மனத்தினுள் இவர் உரைப்பதாய் அமைத்தது மிக அற்புதம்.
 
தான் விரும்பியவளுக்கு தன் மகனை மருமகனாக்கியதில் “இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற கூற்றை இரண்டாம் முறையாய் உணர்ந்த விதம் இனிமை. ஈரோட்டுப் பெண்ணையும், சென்னை வாசியையும் தமது இல்லத்தரசியுடன் ஒப்பிட்டு இன்றும் தனது பெற்றோரின் தேர்வு மிகச் சரியாய் அமைந்ததை சிலாகித்த விதம் சிறப்பு.
 
இளைஞனாய் இருந்தபோது தன்னம்பிக்கையுடனும், விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பி ஏற்று இனிய முறையில் இல்லறம் நடத்தியதிலும், தன்னை விரும்பியவளைச் சந்திக்க நேர்ந்தபோது, கண்ணியமாய் நடந்து கொண்ட விதத்திலும், தான் விரும்பியவள் தன்னிலை மறந்த நிலையில் இருப்பினும் அவள் பெண்ணை விரும்பிய  தன் பிள்ளையின் காதலை ஏற்று அதற்குச் சம்மதம் சொல்லும் தந்தையாய் விளங்கும் இடத்திலும் கதாநாயகன் நம் நெஞ்சங்களில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறார்.
 
இந்தக் கதை இன்றைய இளைஞர்களிடம் நற்சிந்தனையைத் தூண்டி, தன்னம்பிக்கை, கண்ணியம், காருண்யம், மன உறுதி ஆகியவற்றை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
 
-காரஞ்சன்(சேஷ்)

12 கருத்துகள்:

 1. ஹாட்ரிக் + போனஸ் பரிசுகள் பெறவும் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. முதல் பரிசு வென்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் சகோதரரே !

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் சேஷாத்ரி.... வை.கோ. ஜி. அவர்களின் தளத்திலும் பார்த்தேன். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே !

  பதிலளிநீக்கு
 7. முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சேஷா!!!

  பதிலளிநீக்கு
 8. சிறுகதை விமர்சனப் போட்டியில் தாங்கள் முதன்முதலாக முதல் பரிசினை பெற்றமைக்கு உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

  தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

  அன்புடன் கோபு [ VGK ]

  பதிலளிநீக்கு