சனி, 24 டிசம்பர், 2011

ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா? - காரஞ்சன்(சேஷ்)

ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா?
            
                                    டிசம்பர் 26- 2004
          கடல்சூழ்  நம்நாடு -துயரக்
          கடலில் ஆழ்ந்த தினம்!
                 
          உலகமெலாம் கண்ணீரோடு
          ஒலித்த வார்த்தை- சுனாமி!

          அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
          எங்கோ ஓரிடத்தில்
          எரிமலையாய் வெடிக்கிறதே!
          நடுங்கிப் பிளந்து
          நாட்டையும் அழிக்கிறதே!

         அன்றோ.....
         சுமத்ராவின் கடலடியில்
         சூல்கொண்ட நிலநடுக்கம்
         அதிரப் பெயர்த்த ஆழிநீரோ
         ஆற்றல் அழியா
         அலைத்தொடர் ஆனதே!

         பாயப் பதுங்கிய புலியாய்
         ஓரிரு மணித்துளிகள்
         உள்வாங்கிய கடல்!

         நூறடிச் சுவர்போல்
        ஆயிரம் கைகொண்டு
         தீராப் பசியுடன்
         எட்டிய மட்டில்
         ஊரினுட் புகுந்து
         உட்கொண்டது அனைத்தையும்!

        ஓட வழியுமில்லை!
        ஒளிய இடமுமில்லை!

        வறியோர் முதியோர்
        சிறியோர், சீமான்
        பிணியில் வாடினோர்
        பணிமேற் சென்றோர்,-உடற்
        பயிற்சி  மேற்கொண்டொர்
        அனைவரும் மாண்டனர்!

        உலக வரைபடம் சில
        ஊர்களை இழந்தது!

        என்ன நடந்தது?
        என்றறி யுமுன்னே
        எல்லாம் முடிந்தது!

        பெற்றோர் இருந்தனர்
        பிள்ளைகள் இல்லை!
        பிள்ளைகள் இருந்தனர்
        பெற்றோர் இல்லை!

         துயரே உருவாய்
         உறவைத் தேடிய
         உறவுகள் அனைத்தும்
         ஓர் உறவாயின!

         நொடியில் மடிந்து
         ஒதுங்கிய கூடுகள்
         எத்தனை கோடி!
     
         இந்த நூற்றாண்டில்
         இது பேரழிவு!

         உறவை இழந்தோர்க்கு
         உறவெனப் பலபேர்
         உதவிட விரைந்தனர்!

         மானிடர் அழிந்தும்
         மானுடம் வாழ்ந்தது!

         எத்தனை பேரிடர்
         எதிர் வந்தாலும்
         உற்ற துணையாய்
         உதவிடப் பலரை
         பெற்றுளதை எண்ணி
         பெருமிதம் கொண்டு
         மீண்டெழுந்து மிளிர்கிறாள்
         எங்கள் பாரதத்தாய்!

                                                   -காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

புதன், 21 டிசம்பர், 2011

பேய்மழை! - காரஞ்சன்(சேஷ்)

                                                                    பேய்மழை!

                 சுட்டெரித்த        சூரியனால்             வற்றின              நீர்நிலைகள்!
                 கைவிரித்த          காவிரியால்          கருகின               பயிர்கள்!
                 கதிரவனுக்          கெதிராய்                கடலில்               காற்றழுத்தம்!
                
                  ஏற்றத்                தாழ்வுகளால்          ஏற்படுமே           போராட்டம்!
                 முற்றுகைப்       போராட்டமென  முகில்களின்     முடிவு!
                  சுட்டெரித்த        சூரியனைச்            சூழ்ந்தன              கருமேகங்கள்!
                 சீற்றமுடன்         காற்று !               சிறைப்பட்டான்  கதிரவன்!

                 காய்ந்த                நிலத்தைக்              களிப்படையச்    செய்ய
                 ஓயாமல்             பெய்த(து) மழை!    ஓடியது                 பெருவெள்ளம்!

                 நீரின்றிப்             போனதனால்          நீர் என்னை         அபகரித்தீர்!
                 வேறுஇடந்         தேடி                          விரைந்திடுவீர்    என
                 விரட்டின             ஏரிகள்!                    வெள்ளத்தில்       விளைநிலங்கள்!

                 காலைச்              செய்திக்குக்           காத்திருக்கும்      பெற்றோர்கள்!
                 பள்ளிகளுக்கு   விடுமுறை              பகர்ந்தது                தொலைக்காட்சி!
                 துள்ளினர்          சிறுவர்கள் ,             தொடர்ந்து              விளையாட!
                 அலுவலகம்        உண்டே!               அப்பாவின்            கவலை இது!

                 தெருவெங்கும்  பெருவெள்ளம் ! -   தினக்கூலி            பெறுவோர்
                 பிழைப்பைக்       கெடுக்கிறதே        பேய்மழை!            என்கின்றார்.

                 பெய்த                  மழைக்கும்          பெருங்கவலை   ஒன்றுண்டாம்
                 என்னென்று        கேட்க                      இயம்பிற்று            இவ்வாறாய்

                 "வாராமல்            நானிருந்தால்      வசைபாடும்           வையகமே!
                 ஓடிநான்               புகவே                    புதுவீடெனக்          கெதுவுமில்லை!
                 பொங்கிநான்      வந்தால்                  புகுந்திட                  இடமுமில்லை
                 வீணாக                நான்                      விரிகடலில்           கலக்கின்றேன்!

                 நீர் நான்             இல்லையெனில்   நீரற்றுப்                   போய்விடுவீர்!
                 நீர் என்னை      சேமித்தால்              நீரென்றும்              வளமாவீர்!"

                கோடைக்               காலத்தில்              குளம், குட்டை     தூர்வாரி
                அடைமழையை  அடைத்திட்டால் அண்டிடுமோ      நீர்ப்பஞ்சம்!

                                                                                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

செவ்வாய், 20 டிசம்பர், 2011

கல்லும் சொல்லும்! -காரஞ்சன்(சேஷ்)


கல்லும் சொல்லும்!

         சிறந்த கல்லில்
         சிற்பியின் கைவண்ணம்
         பிறந்திடும் கண்கவர் சிற்பம்!

         சிறந்த கருப்பொருள்
         கற்பனை வசப்பட
         கவிஞனின் கைகளில்
         உருப்பெறும் நற்கவி!

         கவிதையும் சிற்பமும்
         காலக் கண்ணாடியாம்!

         தோன்றிய காலம்முதல்
         தொடர்ந்துவருங் காலத்திலும்
         கண்ணுக்கும் கருத்துக்கும்
         விருந்தாகும் சிற்பம்!
      
         செவிக்கு விருந்தாகி
         சிந்தனையைத் தூண்டும்
         சிறந்த நற்கவிதை!

         படைப்பதனால் இருவருமே
         படைப்புலக பிரம்மாக்கள்!

         வாழ்ந்த காலத்தின் சுவடுகளை
         வருங் காலத்திற்கு அளிப்பர்
         இந்த சிந்தனைச் சிற்பிகள்!

         படைத்தவர் மறையலாம்
         படைப்புகள் மறையுமோ?

         ஆண்டு பலகடந்தும்
         சான்றாய் நின்று அவை
         சாற்றிடும் அவர் புகழை!
                                        
                                                          -காரஞ்சன் (சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

புற்றுநோயைப் புரையோட விடலாமா? -காரஞ்சன்(சேஷ்)

புற்றுநோயைப் புரையோடவிடலாமா?


                  வருங்கால பாரதத்தை
                  வடிவமைக்கும் சிற்பிகளே!

                  சிற்பிகளின் சிந்தனையில்
                  சீர்கேடு ஏற்பட்டால்
                  சிற்பம் என்னவாகும்?
                  சிந்திப்பீர் இக்கணமே!.

                 கல்லாத பெற்றோரும்
                 தம்பிள்ளை கற்றிடவே
                 கல்லூரிக் கனுப்பிவைப்பர்!
               
                 கற்றிடச் சென்ற பிள்ளை
                 பெற்றனன் சிலரால் தொல்லை!

                 மூத்தமாணவர் மொழியும்
                 அத்தனையும் இளைய மாணவர்
                  ஏற்றிடல் வேண்டுமாம்!

                 தனிமனித சுதந்திரத்தைத்
                 தட்டிப் பறிக்கும்விதம்
                  எழுதப்படாத சட்டமிதை
                 இயற்றியவர் யாரோ?

                உடலாலும் உள்ளத்தாலும்
                உற்ற துன்பத்தால்
                படிப்பதை விட்டுவிட்டு
                ஓடினர் பலபேர்!

                மனத்துயர் அதனால்
                மாண்டனர் சிலபேர்!

               பெற்றவர் பலர் கனவு
               பிழையாகிப் போனதென்ன!

              ஏனிந்த இழிசெயல்கள்
              'ராகிங்' எனும் பெயரால்?

               மாமியாரும் முன்பொருநாள்
               மருமகள்தான் என்பதனால்
               தம் மருமகளுக்குத் துன்பம்
               தாமும் தருதல் நன்றோ?

              புற்றுநோயான இதைப்
              புரையோட விடலாமோ?
             
               வேரறுப்போம் இதை
               மாணவர் சமுதாயம்
               மறுமலர்ச்சி பெற்றிடவே!

                                                            -காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

சனி, 17 டிசம்பர், 2011

துயில் கலைத்த குயிலுடன் ஓர் உரையாடல்- காரஞ்சன் (சேஷ்)


சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பயிற்சிக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தேன். விடுதியில் தங்கியிருந்தபோது, அதிகாலை, குயில்களின் குரலிசை கேட்டு கண்விழித்தேன். அந்த இனிமையான தருணம் இயற்கையோடு நம் வாழ்வு இயைந்திருந்தால் அற்புதமாக அமையுமே என ஆதங்கப்பட வைத்தது!

விளைநிலங்கள் எல்லாம் வாழ்விடமாக்க விலை பேசப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதனால் வாழ்விடங்கள் இழந்து பல உயிரினங்கள்
அரிதாகிக் கொண்டு வருவதும் வேதனையைத் தூண்டுவதாக அமைகிறது.

இவையெல்லாம் அறிந்தும் அறியாதுபோல் வாழும் மானுடத்தைத் தட்டி எழுப்பிடுமோ இக்குயிலோசை?

                            
துயில் கலைத்த குயில்!

அதிகாலை நேரம்!
சுதி சேர்ந்த பண்ணென
சுகமான் குயிலோசை!
கதவைத் திறந்து
கண்டேன் கருங்குயிலை!

குயில்:
              ஊருக்குப் புதிதோ நீர்?
              உம் உறக்கம் கலைத்தேனோ?
              எங்கிருந்து வந்துள்ளீர்?

நான்:
               எம்மூராம் புதுவையிலே
               உமக்கெனவே தோப்புண்டு!
               தேசியக்கவி பாரதியின்
               தேன்தமிழ்ப் பாட்டுண்டு!

               தேவைகள் அதிகரிக்க
               தினம் மாறும் தொழில்நுட்பம்!
               சேவை சிறப்படைய
               சீரிய பயிற்சிக்காய்
               சேர்கின்றோம் இவ்விடத்தே!

              காலைப் பொழுதினிலே
              களிப்புடன் கூவுகின்றாய்!
              கவலையிலா வாழ்வு
              கைவந்த தெப்படியோ?

குயில்:
             
               ஊர்வளம் கண்டீரா?
               வானுக்கும் பூமிக்கும்
               வரைந்த கோடுகளாய்
               வளர்ந்த மரவரிசை!
               
              வளம்பெருக்கும் நதிகள்!
               ஊர்வெப்பம் தணித்து
                ஊரழகை ஒளித்துவைக்கும்
                உயர்ந்த தென்னைகள்!
               
              தேவை அதிகமில்லை!
               முட்டை இடுவதுடன்
               முடிந்தது என்கவலை!
              
               மேடைகளாய்க் கோடுகள்
               மெய்மறந்து கூவுகின்றேன்!

நான்:
              எப்போது நீ வருவாய்
              எங்கள் ஊர் கண்டிடவே?

குயில்:

               இயற்கையோ டிசைந்திட்ட
               இனிய வாழ்வு இங்கெமக்கு!

              இயந்திர வாழ்வினிலும்
              எம் குரலை இரசிக்கின்றீர்!

              வளர்த்திடுங்கள் மரங்கள்பல!
              வானம் பார்க்கா(த)து
              வளம் காணும் உம் ஊரும்!

              வனவளம் தழைத்திட்டால்
              வாழும் பல் உயிரினமே!

              வந்தைடைவோம் நாங்களுமே
              வாழ்த்தி உமைப் பாடிடவே!

                                                         -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

வெள்ளி, 16 டிசம்பர், 2011

வானவில், முருங்கை -காரஞ்சன்(சேஷ்)


                                 
                                            முருங்கை!            

                              மூப்படைந்த மாந்தராய்
                              முதிர்ந்த பழுப்பிலைகள்!

                              இளைய தலைமுறையாய்
                              விளைந்த பசும் இலைகள்!

                              பிறந்த குழந்தைகளாய்
                              வளரும் துளிரிலைகள்!

                              மூன்று தலைமுறையும்
                              ஒன்றாய்ச் சேர்ந்த
                              கூட்டிலைக் குடும்பமாய்த்
                              திகழ்கிறது எங்கள்
                              தோட்டத்து முருங்கை!    
                          
                                                    -காரஞ்சன்(சேஷ்)

                                                                     வானவில்!


                                                    நிறங்களைப் பிரிக்கும்
                                                   சூரியனுக்கெதிராய்
                                                   வானில் தோன்றிய
                                                   வண்ணங்களின் கூட்டணி!
              
                                                      -காரஞ்சன்(சேஷ்)

படங்கள்- உதவிக்கு கூகிளுக்கு நன்றி

வியாழன், 15 டிசம்பர், 2011

ஒளிவெள்ளம்!-காரஞ்சன் (சேஷ்)

                              ஒளிவெள்ளம்           (படம்-காரஞ்சன்)
  
          ஒளி வெள்ளம் ஓடியதால் -வானில்
           உண்டான மணற்படிவோ
           வெண்பஞ்சு மேகங்கள்!
                                                                -காரஞ்சன்(சேஷ்)
    
   

  மூடுபனி!

மண்மகள் போர்த்திய
வெண்பனிப் போர்வையால்
மார்கழித் திங்களில்
மக்களுக்குக் குளிர்!

       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

புதன், 14 டிசம்பர், 2011

மரங்கள்! - காரஞ்சன்(சேஷ்)


அசோக மரத்திடம் ஒரு கேள்வி!

                     வேப்பிலை உடை தரித்து
                     வேண்டி நிற்கும் பெண்கள்போல்
                     இலையால் உன் உடல் போர்த்தி
                     என்ன வேண்டி நிற்கின்றாய்?


ஆலமரம்

                 விஞ்ஞான உலகில்
                 விதவிதமாய்த் தைலங்கள்!
                 எத்தனை வந்தாலும்
                 பாவையர் கூந்தலுக்கு
                 பயனெதுவும் கிடைக்கவில்லை!
                ஆறடிக் கூந்தல்
                அரையடி ஆனதுவே!

                 ஆண்டுக்கு ஆண்டு
                அடர்ந்த நின் கிளையெங்கும்
                விரிந்த சடைமுடியாய்
                விழுதுகளை நீவளர்க்கும்
                விந்தை என்னென்பேன்!
                                                                           -காரஞ்சன்(சேஷ்)
படங்கள்:உதவிக்கு கூகிளுக்கு நன்றி

திங்கள், 12 டிசம்பர், 2011

சொல் - கவிதை ஆக்கம் காரஞ்சன் (சேஷ்)

சொல்

(சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை!)

வாக்கிய மாலைக்கு
வார்த்தை மலராகும்!

உதிர்க்கும் வார்த்தைகளே
ஒருவரின் குணமுணர்த்தும்!

சொல்வன்மை தன்னுடனே
சோர்வின்மை சேர்ந்திருந்தால்
விலகாமல் நம்முடனே
வெற்றி நிலைத்திருக்கும்!

எய்த அம்பும்
இயம்பிய வார்த்தையும்
என்றும் திரும்பாது!

கல்லடி பட்டாலும்
காயம் ஆறிவிடும்!
சொல்லடி பட்டாலோ
சுட்டவடு நிலைத்திருக்கும்!

மனித குலத்திற்கு
மருந்தாகும் நல்வார்த்தை!

பழுதற்ற விதையாகும்
பயனுள்ள நற்சொல்லும்!

இனிய சொற்களையே
என்றும் விதைத்திடுவோம்!

வளர்ந்து பயிராகி
வாழ்வில் வளம்தரவே!

                                       -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

சனி, 10 டிசம்பர், 2011

எட்டையபுரத்தில் எழுந்த ஞாயிறு (பாரதி)பாரதி!

எட்டையபுரத்தில்
ஞாயிறாய் எழுந்தனை!
அடிமைத்தளையை
அறவே ஒழிக்க
எழுத்தாயுததை
ஏந்தி நின்றனை!

சுதேச மித்திரனில்
சுட்ட  நின் எழுத்தால்,
நாட்டுப் பற்றற்றாரும்
பற்றினர் பற்றினை!

எத்தனை மொழிகள்
இருந்த போதிலும்
சிந்தனை ஒன்றென
செப்பி மகிழ்ந்தனை!

பொதுவுடைமைக்கு
புதுவிதி செய்தனை!
ஆணுக்கிங்கே பெண்
அறிவில் நிகரென்றனை!

அசைவறு மதியும்
நசையறு மனமும்
அன்னை பராசக்தி
அருள வேண்டினை!

எண்ணியபடியெலாம்
கண்ணனைக் கண்டனை!
சாதிகள் இல்லையென
சமத்துவம் போற்றினை!

ஆனந்த சுதந்திரம்
அடைந்ததாய் முழங்கி
அதை அடையுமுன்னரே
அணைந்து மறைந்தனை!

முறுக்கு மீசையும்
முண்டாசுத் தலையும்
அடுத்த தலைமுறைக்கு
நின் அடையாளமாயின!

இத்தனை இத்தனை
செப்பினை எனினும்
எத்தனை எத்தனை
பற்றினர் மாந்தரார்?
என்று நீ கண்டிட
இன்று நீ வந்திடு!

தமிழகத் தமிழர்
நாவினில் தமிழே
இல்லிலும் மதலையர்
சொல்லிலும் தமிழே
இன்றிலை- ஆதலால்
என் செய்குவை
என் தேசியக் கவியே?
                                       -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

பணம்- கவிதைஆக்கம் காரஞ்சன் (சேஷ்)


நாடக மேடைதனில்
நடிக்க வந்த மாந்தரினம்
தேடித் தினம் அலையும்
திருவெனத் திகழ்பவளே!

இல்லாதோர் ஆகின்றோம்-  நீ
இல்லமதில் இல்லையெனில்!
தங்கி நீ வளர்ந்தால்
தனவந்தர் ஆகின்றோம்!

உண்மையைச் சில நேரம்
உறங்கச் செய்பவள் நீ!
மதிப்பு தரும் உன் மதிப்போ
மாறிடுமே நாடுகளில்!

அடைய முயல்வோரும்
அளவின்றிப் பெற்றோரும்
துறந்திடுவர்-   தூக்கத்தை!

ஈகைக் குணமுடையோர்
இருப்பிடம் நீ சேர்ந்தால்
வள்ளலாய் மாற்றிடுவாய்
வறியவர் வாழ்(ந்)த்திடவே!

பெட்டியில் அடைத்து உனை
வட்டியால் வளர்ப்பர் -சிலர்!
அடைக்க வழியின்றி
அணைந்து மாய்வர்-பலர்!

உழைப்பவர் கைகளிலே
ஊதியமாய் உதித்திடும் நீ
திங்கள் முடியுமுன்னே
திங்கள் போல் தேய்ந்திடுவாய்!

பத்தும் பறந்திடும்
பசி வந்தால்!
பத்தும் நடந்திடும்
பணமிருந்தால்!

அல்லன செய்தடைந்தால்-நீ
அழிவுக்கு வழி செய்வாய்!
 அறவழியால் உனை அடைவோர்
அடைவாரோ பெருந்துயரம்?
                                                       -காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

வியாழன், 8 டிசம்பர், 2011

தீபத்திருநாள்- கவிதை ஆக்கம்- காரஞ்சன்(சேஷ்)


இத்தனை நாளும் இருண்ட வானம்,
இனி ஓளி தரவே ஏற்றுவீர் தீபம்!
வறியவர் வாழ்வில் விடியல் மலர,
விழைந்து ஏற்றுவீர் வீடெங்கும் தீபம்!
கல்லாமை இருள் இல்லாமல் ஒழிய,
கற்றோர் ஏற்றுவீர் கல்வி எனும் தீபம்!
உழவும் தொழிலும் உயர்நிலை பெறவே,
உவந்து ஏற்றுவீர் உழைப்பெனும் தீபம்!
மன இருள் நீங்கி, மனைநலம் சிறக்க.
மங்கையர் ஏற்றுவீர் மஙகல தீபம்!
தீமை நீங்கி, நன்மை தழைக்க
தீபத் திருநாளில்
குவலயம் எங்கும் குன்றின்மேல் தீபம்!
                                            சேஷாத்ரி

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

குழந்தை-- கவிதை ஆக்கம் காரஞ்சன் (சேஷ்)

பயிராகும் நாற்றைப் போல்
பிறைநிலவு கீற்றைப்போல்
தரை மீது தவழ்கின்ற
உயிர் பெற்ற ஓவியமே!

வாழ்க்கைப் பயணத்தில்
வழியறியா மானிடர்போல்
ஈரப் படுக்கையிலே
ஏன் நீ உழலுகிறாய்?

அழுக்கைச் சுமந்தமுகம்
அழுக்கற்ற வெள்ளை மனம்!
மழலைப் பேச்சிருக்க
மற்றதெல்லாம் எனக்கெதற்கு?

நித்தம் கவலையொன்று
நிம்மதியைக் கெடுக்கையிலே
மழலைச் சிரிப்பினிலே
மனதைப் பறிகொடுத்தோம்!

                                                சேஷாத்ரி

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி