வியாழன், 30 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை-காரஞ்சன்(சேஷ்)


                                                                
                                                                        நம்பிக்கை!


நம்பிக்கை துணையிருந்தால்
நம்வாழ்வில் உயர்வுண்டு!

புழுக்கங்களைப்
பூட்டிவைக்காதே!

மனக்கதவைத் திறந்து
மாசுகளை அகற்றிவிடு!

புன்னகை ஓர் வரம்!
மகழ்ச்சிப் புன்னகை
மலரட்டும் முகத்தினில்!

மறைந்திடும் கவலைகள்!
நிறைந்திடும் இனிமைகள்!

-காரஞ்சன்(சேஷ்)


படம்: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

பட்டாம்பூச்சியின் பயணம்!


                                                    பட்டாம்பூச்சியின் பயணம்!

சாலைப் பயணத்தில்
முத்தமிடுவதுபோல்
மோதிச் சென்றன
பருவமடைந்தவுடன்
பறக்கத்துடித்திடும்
பட்டாம்பூச்சிகள்!

சோலைப் பூக்களென
சாலையோரப் பூக்களை நாடி
சரிகின்றன விபத்தில்!

பாதைமாறிய பயணம்
பாதுகாப்பற்றதெனும்
பாடம் கற்பிக்கும்
பட்டாம்பூச்சிகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி

பதிவர்கள் திருவிழா-நேரடி ஒளிபரப்பு-விழா சிறக்க வாழ்த்துக்கள்!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இதுவோ சுதந்திரம்?

                                                          இதுவோ!   சுதந்திரம்?

 இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தந்திரத்தை நம்பாதே
தன் திறத்தை நம்பென்று
மானிடர்க்கு உரைத்திடும்
மந்திரச்சொல் சுதந்திரம்!

வாக்களிப்பை நம்பி
வாக்களித்தோர்-நிறைவேறா
ஏக்கத்தில் தவிப்பதற்கா
ஏற்பட்டது சுதந்திரம்?

வகுத்திடும் திட்டங்கள்
வந்தடையும் முன்னர்
பகுத்தெடுத்துக் கொள்ளவா
பயன்படும் சுதந்திரம்?

வனம் அழித்தார்-இயற்கை
வளம் அழித்தார்- விளை
நிலம் அழித்தார்- நீர்
நிலை அழித்தார்- இந்
நிலைதொடரவா சுதந்திரம்?

கோடியில் புரள்பவரும்-தெருக்
கோடியில் உழல்பவரும்-வறுமைக்
கோட்டால் பிரிகின்றார்! நற்
குணங்களை துறக்கின்றார்!

மனம்போன போக்கில்
மனிதன் வாழ்ந்திடவா
இன்னுயிர் ஈந்து
இங்களித்தார் சுதந்திரம்!

தீவிரவாதம் பற்றி
தினமொரு வாதம்!-இந்நிலை
மாறிட வேண்டி- நல்
மனங்களின் கீதம்!

ஏற்றம் பெருக்கி- மன
மாற்றம் அருளும்-மூச்சுக்
காற்றாய் மாறி
காக்கட்டும் சுதந்திரம்!

நாட்டை உயர்த்தி
நாமும் உயர்ந்திட- கொடி
ஏற்றி வணங்கி
ஏற்போம் சூளுரை!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி: கூகிள்


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஒத்த மாட்டு வண்டி!


ஒத்தமாட்டு வண்டி பூட்டி
ஊரைச்சுத்தி வாரவரே!
இரட்டைமாட்டு வண்டியாக்க
ஏன் இன்னும் முடியலயோ?

மனபாரம் சுமந்திடும்நான்
மாட்டுக்கு முன்பாரம்!
வாடகைக்கு வண்டியோட்டி
வாழ்க்கை நடந்திடுது!
வண்டிய நம்பி இங்கே
இரண்டு ஜீவன் பொழைப்பிருக்கு!
இன்னோரு ஜீவனுக்கு
இடங்கொடுக்க ஏது வழி?

பாரம் குறையணும்னா
பகிர்ந்து வாழ்ந்திடணும்!
ஒண்ணுசேர்ந்து உழைச்சா
ஒசந்திடலாம் வாழ்க்கையில!
ஒத்துக்க மனமிருந்தா
உன்துணையா நானிருப்பேன்!

ஒத்த மனசிருக்கும்
உன்னுடன் வாழ்வினிக்கும்!
இருவருமா சேர்ந்திழுப்போம்
இல்லற வண்டியினை!
பிழைக்க வழியிருக்க
பிழையாம வாழ்ந்திடலாம்!
பிறக்கும் பிள்ளைகள- நம்
பேர்சொல்ல வளர்த்திடலாம்!

காரஞ்சன்(சேஷ்)

(பட உதவி: கூகிள்)