செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! - காரஞ்சன்(சேஷ்)

 
 

ஈற்றினிலே          ஈரேழை                      ஏந்திவரும்           புத்தாண்டில்
கற்கண்டாம்         நல்வாழ்த்தைக்      களிப்புடனே         நவில்கின்றேன்!

எல்லாத்                துறைகளிலும்           எம்நாடு                 சிறந்ததென்று
சொல்லும்           நிலையடைந்து         சோதனைகள்     விலகட்டும்!

இன்னலின்றி      மக்களெங்கும்           இன்புற்று              வாழ்ந்திடவே
இயற்கைச்           சீற்றங்கள்                   இல்லாமல்           விலகட்டும்!

பொல்லாத          நோய்களெலாம்       போக்கிடமின்றி    இனி
இல்லாமற்          போனதென                 எல்லோரும்          மகிழட்டும்!
 
கல்லாதோர்         இல்லையென          களிக்கின்ற           நிலையடைய
எல்லா                    முயற்சிகளும்          எம்நாட்டில்           பெருகட்டும்!
 
அன்புளம்             பெருகிவிட்டால்        அனாதை               யாருமில்லை!
வன்முறை          நீங்கிவிட்டால்            எங்கெங்கும்           இன்பநிலை!
 
இல்லத்தில்          துவங்கிடுதே              இதற்கான            முதல்நிலையும்!
வெள்ளை              உள்ளத்தில்                 விதைக்கும்         நற்சிந்தனைகள்
எல்லையிலாப்     பயனளிக்கும்!         என்றென்றும்       உயர்வளிக்கும்!
 
புத்தாண்டு           வாழ்த்துகளைப்          புகன்றிடும்          இந்நாளில்
நல்விதைகள்     ஊன்றிடுவோம்           நம்நாடு                 தழைத்தோங்க!
 
 
 
 
அனைவருக்கும்  என்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

                                                                                       -காரஞ்சன்(சேஷ்)

புதன், 25 டிசம்பர், 2013

விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)








விரிந்த மைதானம்!
வலைகட்டி விளையாடும்
விளையாட்டில் விதியுண்டு!

மாடப் புறாக்கள்
மைதானம் வந்தது
விதிப்படி விளையாட்டா?
விதியின் விளையாட்டா?

                                     -காரஞ்சன்(சேஷ்)

சனி, 21 டிசம்பர், 2013

ஓவியக்கவிதை- காரஞ்சன்(சேஷ்)





நண்பர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று அவர் தம் வலைப்பூவில் பகிர்ந்த ஓவியத்திற்கான என்னுடைய கவிதை இது!. என் கவிதையை ஏற்று தன் வலைப்பக்கத்தில் கவிதை தொடர்பாக என்னைப்பற்றித் தந்த அறிமுகம்!


காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு சேஷாத்ரி புதுவையில் வசிப்பவர்.  இந்த கவிதை அழைப்பில் முதல் கவிதையை எழுதிய திரு இ.சே. இராமன் அவர்களின் உறவினர். இதுவரை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் சில சமயங்களில் அலைபேசி மூலம் பேசியது உண்டு. சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான கவிதைகளை அவ்வப்போது தனது பக்கத்தில் வெளியிடுவார். அத்தனையும் சிறப்பான பகிர்வுகள். 

அறிமுகத்தோடு பகிர்ந்த அவருக்கு எனது உளமார்ந்த நன்றி!

கவிதையைப் படியுங்கள்! கருத்தினைப் பதியுங்கள்!

கவிதை இதோ!

பொங்கிவரும் அன்புடனே
நங்கையவள் கூந்தலிலே
நறுமண மலர்ச்சரத்தை
நாயகன்தான் சூட்டிவிட 

எங்கிருந்து வந்தனவோ,
இத்தனை வண்டினங்கள்?
பூவிதழில் தேனருந்த
போட்டியாய் வந்தனவோ!

வலிமைமிகு கரத்தாலே
வண்டினத்தை அவன் விரட்ட,
நாணித் தலைசாய்க்கும்,
நங்கையவள் கண்ணிரண்டும்,
வண்டுகளாய் மாறி,
வாலிபனை மொய்ப்பதென்ன?

                          -காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 12 டிசம்பர், 2013

மழைக்காலப் பார்வை...காரஞ்சன்(சேஷ்)



கொட்டும் மழையிலும்......

முட்டையுள்ள  கூட்டை
விட்டுப் பிரியாமல்
நனைந்தபடி
மரத்தின்மேல்
அமர்ந்திருககும்
ஒரு காகம்!

கட்டப்படும்
அடுக்குமாடிக் கட்டிடத்துள்
கயிற்றிலாடும் சில காகங்கள்!

மழையுடன்
இவற்றை
இரசித்தபடி
வாடகை வீட்டின்
பால்கனியில் நான்!

                                       -காரஞ்சன்(சேஷ்)

 

திங்கள், 9 டிசம்பர், 2013

புகைப்படங்கள்!- காரஞ்சன்(சேஷ்)




கடந்த காலத்தை
கண்முன் நிறுத்தி
சிந்தையைத் தூண்டும்
சின்னங்களாய்
கருப்பு வெள்ளை
புகைப்படங்கள்!

இறந்த காலத்தை
எதிர்காலம் அறிந்திட
இறந்த காலத்தின்
நிகழ்காலப் பதிவுகளாய்
நிழற்படங்கள்!

முன்னோர் பலரின்
முகமறிய வழிவகுக்கும்!
அந்நாளின் தோற்றத்தை
எந்நாளும் பிரதிபலிக்கும்!

கடந்தகால நினைவுகளில்
கரைந்து போக வழிவகுக்கும்!
அரிய புகைப்படங்கள்
அனைத்தையும் காத்திடுவோம்!

கணினி யுகத்தினில்
காத்திட வழிஉண்டு!
ஏற்றிடுவோம் கணினியிலே
எதிர்காலம் அறிந்திடவே!

-காரஞ்சன் (சேஷ்)


பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 2 டிசம்பர், 2013

பார்த்ததில் இரசித்தது!- நகைச்சுவை பகிர்வு- காரஞ்சன்(சேஷ்)



இந்த வாரம் நான் இரசித்த காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளேன்!
பார்த்து இரசிக்க வேண்டுகிறேன்!

நன்றி!

காரஞ்சன்(சேஷ்)

காணொளியைப் பகிர்ந்த என் தம்பிக்கு நன்றி!