திங்கள், 29 ஏப்ரல், 2013

தேர்தல்!-காரஞ்சன்(சேஷ்)அங்கீகாரம் பெற
சங்கங்களிடையே போட்டி!
வெற்றி யாருக்கு?
விடையறியக் காத்திருப்பு!

தேர்தல் முடிவுகள்
அறிவிக்கும் வேளையில்
அணிவகுத்து ஆர்ப்பரிப்பு!

அலுவலக வாயிலில்
அருகருகே அமைந்தன
சங்கங்களின் கொடிமரங்கள்!

காற்றின் திசைக்கேற்ப
கைகுலுக்கிக் கொண்டிருந்தன
எதிரெதிர் அணிகளின் கொடிகள்!

-காரஞ்சன்(சேஷ்)

சனி, 13 ஏப்ரல், 2013

"கேட்போமே கிளிப்பேச்சை!"-காரஞ்சன் (சேஷ்) 
 

கேட்போமே கிளிப்பேச்சை!

பாடிப்பறந்தெங்கும்
தேடிப்பழந்தின்று
கூடி மகிழும்கிளியே!
குற்றம் என்செய்தாய்?
கூண்டில் உனைஅடைத்தார்!

 வட்டமிட்டுத் திரிந்தஎனை
திட்டமிட்டுப் பிடித்துவந்தார்!
சோலையில் திரிந்தஎனை
சோதிடம் சொல்லவைத்தார்!
கோவைப்பழம் விடுத்து
கொடுக்கின்றார்- நெல்மணிகள்!

 சொன்னதைச் சொல்லும் நீ
சோதிடம் அறிவாயோ?
அடுக்கிய அட்டைக்குள்
அனைவருக்கும் பலன்உண்டோ?

 ஈராறு இராசிகளில்
இவ்வுலகம் அடங்குமென்பார்!
பார்ப்பவர் பெயருரைத்துத்
தீர்ப்பினைத் தேர்ந்தெடுக்க
கூண்டைத் திறந்துவிட்டு
கூப்பிடுவார் என்னையுமே!

 உழைப்பவர் ஊக்கம்பெற
ஒருசீட்டு அதிலுண்டா?
ஏமாற்றிப் பிழைப்போரை
எச்சரிக்கும் சீட்டுண்டா?
எதிர்காலம், வளமாக
ஏதெனும் வழியுண்டா? 

எழுதிவைத்த சீட்டிலொன்றை
எடுத்துத் தருவதொன்றே
எமக்கிங்கு இட்டபணி! 

மாற்றம் விளைவித்து
ஏற்றம் காண்பதெல்லாம்
உங்களின் கைகளில்
உள்ளதை அறிவீரா?

 திருத்துவதும் திருந்துவதும்
மானிடரின் கையிலென்று
இனியேனும் உணர்வீரா?

 (சோ) திடமாய் நம்பிஇதை
தினமும் உழைத்திடுக!
விடுதலை அளித்திடுக
விருப்பம்போல் நான்வாழ!

-காரஞ்சன்(சேஷ்)

படங்கள்  உதவி: கூகிளுக்கு நன்றி!
 

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

உடைந்த படகுகள்!-காரஞ்சன்(சேஷ்)

                                            
                                                 உடைந்த படகுகள்!வாழ்க்கைப் பயணத்தில்
ஓடிக்களைத்து
ஒடுங்கிடும் மனிதர்கள்போல்

நீரலைமீதினிலே
நித்தம் சுமைதாங்கி
ஓ(டி)டாய்த் தேய்ந்து
ஒதுங்கிய படகுகளோ?

சுமந்து மகிழ்வளித்து
சுகவீனமானபின்னர்
அக்கறைகாட்ட ஆளின்றி
இக்கரையில் ஒதுங்கினவோ?

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி; கூகிளுக்கு நன்றி!