வெள்ளி, 11 மே, 2012

என்ன பார்வை உந்தன் பார்வை?- காரஞ்சன்(சேஷ்)

                                                என்ன பார்வை உந்தன் பார்வை?

முதுமை உடல்முழுதும்  முத்திரை பதித்தாலும்,
உழைக்கும்  எண்ணமது உதிரத்தில் ஊறியதால்
  நோக்கில் தெளிவோடு சாக்கில் கடைவிரித்தாய்!
          தேவைக்குப் பொருளீட்டத் தெருவோரம் கடைபோட்டு
       கொண்டுவந்த காய்கறியை கூறாக்கி வைத்துள்ளாய்!
ஆறு,குளம் வற்றிடலாம்! ஆழ்மனதில் ஈரமுண்டு!
           ஏரெடுத்துப் பிழைப்பவரை ஏறெடுத்துப் பார்க்கும்நிலை
  எப்போது வருமெனவே ஏங்கிடுதோ உன்பார்வை!
பார்க்கத் தெரிந்தால்தான் பாதை தெரியுமென
       நோக்கின்றித் திரிவோர்க்கு நுவலாதோ உம்வாழ்வு?
                                                                               -காரஞ்சன்(சேஷ்)

புதன், 2 மே, 2012

கனவு மெய்ப்படவேண்டும் -காரஞ்சன்(சேஷ்)

சுழலும் உலகத்துக்கு
உழவுதாங்க அச்சாணி!

உழவன் படுந்துயரம்
உலகம் அறியலையோ?

வறுமை அவன் வாழ்வை
வட்டமிட்டுத் தாக்குதுங்க!

மாறிவரும் பட்டியலில்
மாரியும் சேர்ந்திடுச்சு!

மும்மாரி பொழிஞ்சு
முப்போகம் விளைஞ்சகதை
எப்போதோ மாறிடிச்சு!
ஏத்தம், கவலையெலாம்
எந்திரமா மாறிடிச்சு!

ஊருக்கு நீர்சேர்க்க
உண்டியலாய்க் குளமிருக்கும்!

ஏரி குளமெல்லாம்
எப்போதோ வீடாச்சு!
நீர்வளம் குறைஞ்சு
நிற்கதியாய் நின்றாச்சு!

ஆழத் துளையிட்டு
அடிநீரை இறைத்ததனால்
கடல்நீர் உட்புகுந்து
களர் நிலமாயிடிச்சு!

சம்சாரம் இல்லேன்னா
சமாளிச்சு வாழ்ந்திடலாம்!
மின்சாரம் இல்லேன்னா
மிகக் கொடுமை ஆகுதிங்கே!

கால்நடை வளர்த்தோம்
கழிவெல்லாம் உரமாச்சு!
தழையுரமும் புண்ணாக்கும்
தந்ததையா மகசூலை!

தோட்டத்துக் காய்பறிச்சு
தொட்டுக்க கறிசமைச்சா
தூக்குமய்யா வாசம்
தூண்டிவிடும் எம்பசியை!

மாத்திரை மருந்தநம்பி
மனுஷ வாழ்விருக்கு!

வேதி உரமும்
வீரிய மருந்துகளும்
நிலத்தைக் கெடுத்து
நீர்குடிக்கச் செய்திடுச்சு!

விளையும் பயிர்மூலம்
வெவ்வேறு நோய்வருது!

விளைநிலத்தை யெல்லாம்
வீடாக்க வித்துப்புட்டா
கட்டிடங்கள் வந்து
கடும்பசிக்குச் சோறிடுமா?

உற்பத்தி செய்பவனோ
உழலுகிறான் வறுமையிலே
வாங்கி விற்பவனோ
வளமாய் வாழுகின்றான்!

செயற்கைக்கோள் செய்ஞ்சி
செலுத்துறாங்க வானத்தில்!
இயற்கை அழிவதையே
ஏன் தடுத்து நிறுத்தலையோ?


உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா!

அளவோடு விஞ்ஞானம்
அனுபவமும் சேர்ந்து
விழைந்து முன்வந்து
விவசாய்ம் செய்யவந்தா
தழைச்சு பயிர்வளரும்
தரணியெலாம் மனங்குளிரும்!
காலம் முடியுமுன்னே
கண்குளிரப் பார்த்திடணும்!


கனவு நனவாக
காலமே துணைநில்லு!
பொழுது சாயுமுன்னே
புறப்படுறேன் வீட்டுக்கு!
          
                                                    -காரஞ்சன்(சேஷ்)

படத்திற்கு நன்றி: கீதமஞ்சரி அவர்களின் வலைப்பூ