செவ்வாய், 28 அக்டோபர், 2014

ஒட்டுவாரின்றி உடைகிறதோ? -காரஞ்சன்(சேஷ்)


                                                          ஒட்டுவாரின்றி உடைகிறதோ?

ஏற்றிவைத்த விளக்குகளால்
எத்தனையோ இரவுகளில்
வெளிச்சம் பரப்பிய
விளக்குமாட விழிகள்!

எத்தனையோ மனிதர்கள்
மி(ம)தித்தும்
நித்தம் கடந்திருப்பர்
நிலைப்படியை!

எத்தனை குழந்தைகள்
ஏறிநின்று முகம்காட்டி
கெட்டியாய்ப் பிடித்திருப்பர்
எட்டுக்கம்பி ஜன்னலினை!

கட்டியவர் மட்டுமின்றி
ஒட்டிய உறவுகளும்
கைவிட்டுச் சென்றனரோ?
ஒட்டுவார் யாருமின்றி
உடைகிறதே வீடொன்று!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: நன்றி!-மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ!

செவ்வாய், 21 அக்டோபர், 2014

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- காரஞ்சன்(சேஷ்)


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்த தீபாவளி நன்னாளில், பழைய தீபாவளி மலர்களில் வெளிவந்த, நான்

இரசித்த  சில படங்கள்  தங்களையும் மகிழ்விக்கும் என எண்ணுகிறேன்!


நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளி மலர்:1961

நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்: 1959

                                               
                                             நன்றி: கல்கி தீபாவளி மலர்:1950


                                    நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்:1954


                                         நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர்:1969

எல்லோருக்கும்  மகிழ்வளிக்கும் நன்னாளாய் தீபாவளித் திருநாள் அமைய
எனது வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)

தீபாவளி வாழ்த்துப்பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

மழையடிச்சு மரம் அழுதா?- காரஞ்சன்(சேஷ்)


மழையடிச்சு மரம் அழுதா?

சுத்தி மணலிருக்க
சூரியனும் சுட்டெரிக்க
படர்ந்த மரமொண்ணு
பசுங்குடையாய் விரிஞ்சிருக்க

சொத்து எதுவுமில்லை
சொந்தபந்தம் ஏதுமில்லை!
சேத்தைப் பிசைஞ்சு வைச்ச
செவுறுகளே என் வீடு!

பச்சை மரத்தினிலே
பதிஞ்ச ஆணிபோல
நெஞ்சுக் குழிபாரம்
நித்தம் எம் பாட்டினிலே!

செவுத்துக்குள்ள நான்பாட
செவிமடுக்க வளைஞ்ச மரம்!
மழையடிச்சு மரம் அழுதா
மண்குடிசை தாங்கிடுமா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 18 அக்டோபர், 2014

வரிக்கு வரி! -காரஞ்சன்(சேஷ்)


வரிக்கு வரி!

முகவரி தேடிவந்து
அகம்கவர்ந்த சுகவரிகள்!

புரிதலின் வெளிப்பாடு
விரிகிறதோ வரிகளிலே!

சரியான புரிதலுக்கு
வரிவிலக்கில் இடமுண்டு!

வரிவடிவில் வந்திங்கு
வாரி அணைக்கின்றார்!

பிரிவின் துயரத்தைப் 
பரிவால் தணிக்கின்றார்!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: மாயவரத்தான் MGR அவர்களின் வலைப்பூ

புதன், 15 அக்டோபர், 2014

இதயத்தில் ஓர் உதயம்! -காரஞ்சன்(சேஷ்)


 
இதயத்தில் ஓர் உதயம்!


படிந்த புழுதியை
எப்போதாவது வரும் மழை
கழுவிக் களைவதைக்
கண்டு களிக்கையில்.....
 
முகமறியா மனிதர்களை
சுகமான குரலால்
துதிபாடித் துயிலெழுப்பும்
குயிலோசையைக் கேட்கையில்..
 
குரைத்துத் துரத்தும்
நாய்களுக்கிடையில்
எனைப் பார்த்து
வாலாட்டும் நாயினைக் காணநேர்கையில்.....
 
விரிந்த வானில்
இருளும் வேளையில்
தனித்துப் பறக்கும்
பறவையைப் பார்த்து வியக்கையில்....
 
ஒடுங்கிய தேகமும்
இடுங்கிய கண்களுமாய்
"இரட்டை மல்லி" எனக்கூவி
விற்கும் கிழவியை வியந்து பார்க்கையில்...
 
கடந்து செல்லும் ஊர்தியில்
கையசைத்துச் செல்லும்
மழலைச் செல்வங்களின்
மலர்ந்த புன்னகை மகிழ்வளிக்கையில்....


இன்னும் பல்லாண்டு
இவ்வுலகில் வாழ
ஆசை என்மனத்துள்
அன்றாடம் மலர்கிறது!
                                                  -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!