வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

சுற்றமும் நட்பும் -காரஞ்சன்(சேஷ்)

சுற்றமும் நட்பும்!



வற்றிய குளம் நாடி
வந்திடுமோ நீர்ப்பறவை?

வாழ்ந்த கால்த்தில்
சூழ்ந்திருந்த சுற்றம்
தாழ்கின்ற நேரத்தில்
தள்ளியே நிற்கும்!

ஆனால் தூய நட்போ...

வீழ்கின்ற தருணத்தும்
விழிநீர் துடைத்திடும்!

தவறு மிகுமெனில்
தட்டிக் கேட்டிடும்!

துவள நேர்கையில்
துன்பம் பகிர்ந்து
தோள்தந்து உதவிடும்!

உள்ளத்தின் உணர்வை
உரைக்காமல் அறிந்திடும்!

வேறிடமிருந்தும் மனதால்
ஓரிடமாக்கிடும்!

மண்ணுக்கு நீர்போல
மாந்தர்க்கு நட்பு!

நண்பர்கள் மறையலாம்
நட்புக்கு மறைவில்லை!

                                                          -காரஞ்சன்(சேஷ்)

படம்: கூகுளுக்கு நன்றி!

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

நிழற்கோலம்! எத்தனை பார்வை!-காரஞ்சன்(சேஷ்)












 நிழற்கோலம்- பலரின் பார்வையில்! 

நிழற்கோலம் வரையும்
நீள்கதிர்க் கைகளை
வட்டமிடும் வான்மேகம்
வந்து ஏன் தடுக்கிறதோ?          -ஓவியர்

கதிரவனும் மரமும்
நிழற்கோலம் படப்பிடிப்பில்!
வான்மேகம் சொன்னது
கட்..கட்..கட்.                                       -திரைப்பட இயக்குநர்

வானின் ஒளிக்கும்
வந்ததோ தடை?
ஒளித்தடையால்
நிழல் உற்பத்தி
நின்று போனதே!                               -தொழிலதிபர்

கதிரவன் ஒளிவர
காத்திருந்த மரம்
மண்மீது வரைந்ததோ
மாவில்லா நிழற்கோலம்?

நிழற்கோலத்தில்
நிஜமான அசைவுகள்!
ஓசையின்றி காற்று
உயிர்கொடுத்துச் செல்கிறதோ?    -கவிஞன்

நிஜம் நீ எனில்
நிழல் நான்!
                                                                             -காதலன்

உயர்ந்த இடத்தின்
பார்வை படும்வரை
நிழலுலகம் நிஜமானதுதான்!      -தத்துவஞானி

உறுதியுடன் உழைத்துநில்!
காலம் கைகொடுக்கும்!
உன்நிழலில் ஒருநாள்
உலகம் இளைப்பாறும்!        - காரஞ்சன்(சேஷ்)

புதன், 15 பிப்ரவரி, 2012

நண்பருக்கு நன்றி! -காரஞ்சன்(சேஷ்)

வணக்கம்!

வலைப்பூ தொடங்கி மூன்று மாதங்களில் என் மனதில் தோன்றிய சிந்தனைகளை கவிதைகளாகவும், கட்டுரையாகவும் வெளியிட்டேன். பின்னூட்டங்கள் மேலும் ஊக்கமளித்தது என்பதில் ஐயமில்லை! இந்தத் தருணத்தில் என்னை வலைப்பூ ஆரம்பிக்கத் தூண்டிய, என்னுடைய மாமனார் கவிஞர் கணக்காயன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அவரால் "என் வலைப்பூவின் தந்தை" என பாராட்டப் பட்ட திரு வெங்கட்நாகராஜ் அவர்கள் எனக்கு “The Versatile Blogger Award” என்ற விருதினை வழங்கியுள்ளார்கள். அவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பார்வை: http://venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html

எனக்குப் பிடித்த 7 விஷயங்கள்:

1. பிடித்த புத்தகங்களைப் படிப்பது.

2.என்னுடைய கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம் ஆற்றுமணலில் 
   இயற்கையை இரசித்தபடி நடப்பது

3.மகளின் கவிதைகள் மற்றும் பாடல்களை இரசிப்பது.

4. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது.

5. சைக்கிளில் அதிகாலை (அ) அந்திமாலையில் நெரிசலற்ற சாலையில் பயணிப்பது.

6.நண்பர்களுடன் படித்த, பார்த்த, இரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது

7. பாடல்களை சேகரிப்பது- முன்பு நிறைய ஒலிநாடாக்கள்- தற்போது கணினியிலேயே ஒரு வன்தட்டு முழுவதும்.

எனக்களித்த இந்த விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு அளித்து மகிழ விரும்புகிறேன்.

1.கவிஞர் கணக்காயன் அவர்கள்:

   http://kanakkayan.blogspot.in/

2. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்

   http://gopu1949.blogspot.in/

3.திரு இரத்தினவேல் நடராஜன் அவர்கள்

   http://rathnavel-natarajan.blogspot.in/

4. திரு அரசன் சே அவர்கள்

   http://karaiseraaalai.blogspot.in/

5.திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
http://dindiguldhanabalan.blogspot.in/

விருது வழங்கியவர்களுக்கு நன்றி! விருது பெறுபவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

என்றென்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

நன்றி! நன்றி! நன்றி!- காரஞ்சன் (சேஷ்)

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் அன்பின் அடையாளமாக என்னுடைய வலைப்பூவிற்கு அன்பின் விருது என்ற விருதினை வழங்கியுள்ளார். அவருக்கு என் உளமார்ந்த நன்றி!

பார்வை: http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_11.html
ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னூட்டம் அளித்து, என்னை எழுதத் தூண்டியவர். அவருக்கு இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி! உங்களைப் போன்ற மூத்த, அனுபவமிக்க, படைப்பாற்றல் பெற்றவர்களின் அறிவுரைகளும், ஆசிகளும் புதிய பதிவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை!


எனக்குப் பிடித்த 7 விஷயங்கள்:

1. பிடித்த புத்தகங்களைப் படிப்பது.

2.என்னுடைய கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம் ஆற்றுமணலில் 
   இயற்கையை இரசித்தபடி நடப்பது

3.மகளின் கவிதைகள் மற்றும் பாடல்களை இரசிப்பது.

4. நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது.

5. சைக்கிளில் அதிகாலை (அ) அந்திமாலையில் நெரிசலற்ற சாலையில் பயணிப்பது.

6.நண்பர்களுடன் படித்த, பார்த்த, இரசித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது

7. பாடல்களை சேகரிப்பது- முன்பு நிறைய ஒலிநாடாக்கள்- தற்போது கணினியிலேயே ஒரு வன்தட்டு முழுவதும்.

எனக்களித்த இந்த விருதினை கீழ்க்கண்ட பதிவர்களுக்கு அளித்து மகிழ விரும்புகிறேன்.

1.கவிஞர் கணக்காயன் அவர்கள்:

   http://kanakkayan.blogspot.in/

2. திரு ரவி m
  
http://atchaya48.blogspot.com/

3. enpaarvaiyil
http://ennaparavaigal.blogspot.in/

விருது பெற்றவர்களுக்கு என் நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

சனி, 11 பிப்ரவரி, 2012

ஆசிரியை கொலை- அதிர்ச்சிதரும் செய்தி!-காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!
கடந்த இரு நாட்களாக பரபரப்பாகவும், அதிர்ச்சியுடனும் விவாதிக்கப்படும் விஷயம் இதுதான்!

சென்னையில் வகுப்பறையில் ஆசிரியையைக் கொலை செயத மாணவன்!- 

இதுகுறித்து எனது பார்வை:

பெற்றோருக்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றப்படுபவர்கள் கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்கள்!  அந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு தற்போது எப்படி உள்ளது? என்பதை ஆராயவேண்டிய தருணம் இது!

முதலில் மாணவர்கள் நிலையினைப் பார்ப்போம்.
அந்தக் காலத்தில் பெற்றோரே ஆசிரியரிடம் பிள்ளை படிக்கவில்லையெனில் “கண்ணை விட்டுவிட்டு உரித்தெடுங்கள்” என்று சொல்லி கண்டிக்கச் சொல்லும் நிலையிருந்தது.  ஆசிரியரிடம் ஒரு பயம் கலந்த மரியாதை மாணவனுக்கும் இருந்தது!  ஒழுக்கம் முதலிடம் பெற்றிருந்தது.  பள்ளிகளில். ஆரோக்கியமான போட்டி இருந்தது.  மாணவர்களிடத்தில். தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்களின் தாக்கம் அதிகம் இல்லை. வானொலி மட்டுமே (அதுவும் ட்ரான்ஸிஸ்டர் வருகைக்குப் பின் தான்).  பல வீடுகளில் ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவும், தகவல்கள், நாட்டுநடப்பை அறியவும் உதவியாக  இருந்தது.. இன்னும் கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் செய்தித் தாள்கள் மற்றும் வார, மாத இதழ்கள் இடம்பெற்றிருந்தன. பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பிள்ளைகள் விளையாட்டில் பெரும் பகுதி நேரத்தைச் செலவிடுவர். கூட்டுக் குடும்பங்களாக இருந்ததால் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களின் அரவணைப்பும், பரிவான கவனிப்பும் இருந்தது. பெற்றோர் கண்டித்தாலும், தாத்தா, பாட்டி போன்றோர் புத்திமதிகள் சொல்லி தேற்ற ஏதுவாயிருந்தது. பிள்ளைகள்  ஒன்றுக்கு மேல் இருந்ததால், உடன் பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து பாசமுடன் பழக வாய்ப்பிருந்தது. கிராமப் புறமாயிருப்பின் நெடுந்தூரம் நடந்தோ (அ) மிதி வண்டியிலோ மானணவர்கள் செல்லும்போது நட்பு வட்டம் இருந்தது. மன அழுத்தம் குறைவாக இருந்தது. பள்ளிப் பாடச்சுமையும் குறைவு. உணவுப் பழக்கம் சீரானதாக இருந்தது.

இந்நாளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கவே பயப்படும் நிலை! அப்படிக் கண்டித்தாலும் அவர்களைக் கண்டிக்கும் பெற்றோர்கள்! ( ஒரு சில ஆசிரியர்கள்-எல்லை மீறிக் கண்டித்ததும் கண்டிக்கத்தக்கது). ஊடகங்களின் தாக்கம்- வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்கள் – அவற்றை பெருமளவில் ஒளிபரப்பும்  தொலைக்காட்சி  சேனல்கள்- .கூட்டுக் குடும்பங்கள் எனும் நிலை மாறி தனிக்குடும்பங்களின் பெருக்கம்-முதியோர் இல்லாத வீடுகள்-    அல்லது இருக்கும் வீடுகளில் தப்பித்தவறி முதியோர்கள் கண்டித்தாலும்  அதைப் பொறுக்காத பெற்றோர்கள்-இதனால் வீணான சண்டைகள்-சில முதியோர்கள் தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்- மாணவர்களுக்கு  விளையாட்டிற்கான நேரம் குறைந்தது-கணினி விளையாட்டுகளிலேயே காலங்களைக் கழித்து கண்களையும் மனதையும் கெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை.

பெற்றொர்கள்  வேலைக்குச் செல்லும் வீடுகளில் கண்காணிப்பின்றி வளரும்  சில குழந்தைகள்  தீய நட்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்-விஞ்ஞான வளர்ச்சியை சரியான நோக்கில் பயன்படுத்தாமல் சீரழிகிறார்கள்.

பெற்றொர்களின் அளவுக்கு அதிகமான செல்லம் - தேவையானவற்றை வாங்கித்தருவது மட்டுமல்லாமல் தேவையற்ற ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்து- செலவுத்தொகை என்ற பெயரில்  அவர்கள்  கேட்காமலேயே  பணம் கொடுத்தனுப்புவது  போன்ற செயல்களால் தங்களுக்காக பெற்றோர்கள் எதை வேண்டுமானலும் செய்வார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் குழதைகளிடம் ஏற்பட வகை செய்கிறார்கள்.

கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கத்தால் வயதுக்கு மீறிய வளர்ச்சியடைகிறார்கள். அளவுகோலாக மதிப்பெண்கள்-  அதனைச் சார்ந்தே  மேற்படிப்புகள்-  அதை அடைவதற்கு பெற்றோர்கள் கொடுக்கும் நிர்ப்பந்தங்கள்- அதனால் ஏற்படும் மன அழுத்தம்-  வயதுக்கு மீறிய அறிவுத்திறன்  -அதைச் சரியான பாதையில் திருப்பிவிடாத அல்லது தெரியாத பெற்றோர்! .மதிப்பெண் பெறுவது ஒன்றுதான் மதிப்பளிக்கும் என்ற மனநிலையில் மாணவர்கள் உள்ளனர்.சிறு தோல்வி அல்லது ஏமாற்றத்தைக் கூட தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

பெற்றொர்களும் ஏதோ பிள்ளைகளைப் படிக்க அனுப்பிவிட்டாலே தங்கள் கடமை முடிந்தது என்றில்லாமல், அவர்களைக் கண்காணித்து, ஆசிரியர்களை குறிப்பிட்ட கால இடைவெளிகளிலாவது அல்லது அவர்கள் அழைக்கும்போதாவது நேரில்சென்று சந்தித்து பிள்ளைகளின் நிலையினை அறிந்துகொள்ளவேண்டும்.

அந்நாளில் ஆசிரியர்கள் மாணவர்களின் திறனுக்கேற்ப அவர்களை ஊக்குவித்து முறையாகக் கற்பித்து, தங்கள் கடமையில் கண்ணாயிருந்து ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தனர்.
இந்நாளில் அவ்வாறு இருப்பவர்கள் மிகச் சிலரே! கல்வி ஒரு வியாபாரப் பொருளாகிவிட்டது. ஆசிரியப் பணியில் இருப்பவர்களே ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாக வரும் செய்திகள் மாணவர்களிடையே ஆசிரியர்கள் குறித்து மதிப்பினைக் குறைக்கும் வண்ணம் உள்ளன. மேலும் மாணவர்களிடையே தவறு செய்யும் துணிச்சலைத் தருகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களிடம் காணப்படும் தனித்திறமைகளை கண்டறிந்து, ஊக்குவித்து, வெளிப்பட  வகை  செய்யவேண்டும். பலர் முன்னிலையில் பாராட்டலாம். தனியாகக் கண்டிக்கலாம்.

 இன்றைய கல்வி முறைக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அவர்கள் பணிபுரிவதற்கான நல்ல சூழல், (அளவான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும்), திறமையை வளர்க்கும் விதமான பயிற்சிகள் ஆகியன அளிக்கப் படவேண்டும். இக்கால மாணவர்களை எதிர்கொள்ளும் விதமான மனப்பக்குவத்தை வளர்க்க ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும்.

 வன்முறைச் செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க பெற்றோர்களின் பங்களிப்பு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. பல்வேறு பணிகள் இருந்தாலும் பிள்ளைகளின் படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் அக்கறை காட்டி அவர்களிடம் காணப்படும் திறமைகளை ஊக்குவித்து, அவர்களின் கருத்தினை அறிந்து, தவறென்றால் தயங்காமல் எடுத்துரைத்து அவர்கள் அதை உணர்ந்து திருந்த வகை செய்யவேண்டும்.

கல்வி நிறுவனங்களும், ஆசிரியப் பெருமக்களும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது மற்றும்  பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் தங்கள் குறிக்கோளாகக் கொள்ளாமல்,  மாணவர்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் உள்ளம் பெற்று வருங்கால பாரதத்தை வடிவமைக்கும் சிற்பிகளாக உருவாக , மனதை ஒருமுகப் படுத்தத் தேவையான  பயிற்சிகள் மற்றும் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விதமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் பசுமரத்து ஆணிபோல் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். கல்வி முறையிலும் மாற்றம் வேண்டும். மதிப்பெண் மட்டுமே அளவுகோல் என்ற நிலை மாற வேண்டும்.

இளைஞர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல! குற்றம் புரிய தள்ளப்படுகின்ற சூழ்நிலைகளை பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மாணவர்களை (குழந்தைகளை) அன்பாகவும், அனுசரணையாகவும் நேர்வழியைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.  திணிப்பது போலில்லாமல் மெல்ல மெல்ல அவர்கள் திருந்துவதற்கு நிதானமாக வழிகாட்டவேண்டும். இது கொஞ்சம் காலமானாலும் இறுதியில் வெற்றியைத்தரும். அவசரப் படுதல் கூடாது.

இந்த நிகழ்வு மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
பெற்றோர், ஆசிரியர், துறைசார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் சரியாக இருக்கும்படி நடந்தால் இனிவருங்காலங்களில் இத்தைகய நிகழ்வுகள் இல்லாமல் தவிர்க்கலாம்!

-காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

முரண்பாடுகள் -காரஞ்சன்(சேஷ்)

                                                                   முரண்பாடுகள்!

உருவில் முரணாய்
காலம் காட்டும்
கடிகார முட்கள்!

சுவையில் முரணாய்
இனிப்பும், கசப்பும்!

வாழ்வில் முரணாய்
பிறப்பும், இறப்பும்!

மனதின் முரணாய்
நிறையும், குறையும்!

இல்வாழ்வில் முரணாய்
இன்பமும், துன்பமும்!

நாளில் முரணாய்
இரவும், பகலும்!

முடிவில் முரணாய்
வெற்றியும், தோல்வியும்!

பருவத்தின் முரணாய்
உதிர்தலும், துளிர்த்தலும்!

அறிவியலில் முரணாய்
ஆக்கமும், அழிவும்!

உணர்ச்சியின் முரணாய்
அழுகையும், சிரிப்பும்!

சொல்லில் முரணாய்
இன்சொல்லும், வன்சொல்லும்!

செய்கையில் முரணாய்
நன்மையும், தீமையும்!

நிலத்தில் முரணாய்
மலையும், மடுவும்!

உறவில் முரணாய்
நட்பும், பகையும்!

முரண்கள் தொடர
முடியும் வாழ்வே!
                                        -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 9 பிப்ரவரி, 2012

கா! ...கா!....கா!- காரஞ்சன்(சேஷ்)

கா!.....கா!..... கா!...

                                                வெட்டிவைத்த பள்ளத்தில்
                                                வீழ்ந்த மழைநீரை
                                                எடுத்துப் பருகுவதில்
                                                எங்களுக்குள் சண்டையில்லை!
                                                கா!...கா!..கா!

                                               அணைநீரைப் பகிர்வதற்கு
                                               ஆங்காங்கே சண்டையிடும்
                                                உங்களுடன் எங்கள்பேச்சு
                                                கா!........கா!.......கா!

                                                         -காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

கடைக்கண் பார்வை!- காரஞ்சன்(சேஷ்)



                  கண்ணேறு பொம்மைகள்   கட்டிய கழியினை
                  கழுத்தினில் சுமந்து  கால்கடுக்க நடக்கின்றான்!
                  பலமுக பொம்மைகள்  பாரினில் மாந்தர்போல்!
                  கண்ணேறு கழிக்க     கட்டிவைக்கும் பொருட்களை
                 விற்றுத் தீர்க்க -இவன்  விழவேண்டும் பலர் விழிகளில்!

                                                                                                     --காரஞ்சன்(சேஷ்)

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

ஏதோ நினைவுகள்..கனவுகள் -காரஞ்சன்

கனவுகள்!

மூடிய இமைகளுக்குள்
ஓடிடும் கனவலைகள்!

ஆழ்மன ஆசைகளும்
அரும்பிடுமே கனவுகளாய்!

எல்லையிலா கனவுலகை
எட்டிடுமே மனப்பறவை
கற்பனைச் சிறகடித்து!

வாழ்வைத் திட்டமிட
வாய்ப்பாகும் கனவுகளும்!

உள்ளத்தின் உயர்வே
ஒருவரின் உயர்வாம்
வள்ளுவரின் வாக்கினிலே!

வேதனை எனும்பனி
விலகுவதாய்க் கனவமைக!

அன்புளம் பெருகி- அமைதி
நிலவுவதாய்க் கனவமைக!

வன்முறை அகன்று- நாடு
வளம்பெறவே கனவமைக!

எண்ணிய எண்ணியாங்கு
எய்துவதாய்க் கனவமைக!

திண்ணிய மனதுடனே
தினமும் முயன்றிட்டால்...

நினைவே கனவாகும்!
கனவும் நினைவாகும்!

                                                    -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

என்ன நினைப்பீர்கள்? - காரஞ்சன் (சேஷ்)

என்ன நினைப்பீர்கள்?

காணவிழைந்த நபர்
கண்ணெதிரில் வந்து நின்றால்?

பயணத்தின் போது
பலபேர் நின்றுவர
உங்களுக்கு மட்டும்
உட்கார இடம்கிடைத்தால்?

திரையரங்கில் உங்களோடு
டிக்கட் தீர்ந்துவிட்டால்?

கொட்டும் மழையில்
குடையோடு ஒருவர்
ஒதுங்கி நிற்கும் உங்களுக்கு
உதவ முற்பட்டால்?

வாங்கிய கடனுக்கு
வட்டியெல்லாம் தள்ளுபடி!

வரிசையில் நிற்கையிலே
பின்நிற்கும் உங்களை
முன்செல்ல அனுமதித்தால்?

நேயர் விருப்பத்தில்
நினைத்த பாடல் ஒலித்திட்டால்?

தெரிந்த வினாக்களெல்லாம்
தேர்வினிலே இடம்பெற்றால்?

வெற்றிபெறத் தேவை
ஈரிரண்டு ரன்கள்
இருப்பதோ ஒருபந்து
இருந்தபோதும் நாம் வென்றால்?

கடைசிப் பேருந்தை
கடைசியாக நீர் அடைந்தால்?

எய்த கல்லுக்கு
இருமாங்காய் வீழ்ந்திட்டால்?

கடிந்துரைக்கும் நபரொருவர்
கனிவாக பதிலிறுத்தால்?

மொழியறியா ஊர்தனிலே நம்
மொழியறிந்த நபர் கிடைத்தால்?

பழுதடையும் வாகனம்
பணிமனை எதிர் இருந்தால்?

பிறந்தநாள் பரிசாக
பிடித்தபொருள் கிடைத்திட்டால்?

காதலித்த பெண்ணே
கைப்பிடிக்க வாய்த்திட்டால்?

கற்பனையில் நினைத்தபடி
காணநேர்ந்திட்டால்?

என்ன நினைப்பீர்கள்?
நிச்சயம்
என்னை இனி நினைப்பீர்கள்!

                                                       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

புதன், 1 பிப்ரவரி, 2012

இசைக்கு இசை!- காரஞ்சன்(சேஷ்)

                      

  இசைக்கு இசை!

உலகின் உடன்பிறப்பாய்
உண்டானது- இசை!

உலகின் ஒவ்வோர்
அசைவும்-இசை!

ஒருங்கிணைந்து ஓசை
உருப்பெற்றால் இசை!

செவிக்கு விருந்தாகி
சிந்தை நிறைவது இசை!

வார்த்தையிலா நிலைக்கும்
வடிவம் தரும் இசை!

ஆன்மாவின் அழுக்கை
அகற்றிடுமே  இசை!

இதயத் துடிப்பிலும்
இருப்பது இசை!

இசையில் சிறந்தோர்
ஈட்டுவதும் இசை!

இரண்டாம் தமிழாய்
இருப்பதும் இசை!

நோய்க்கு மருந்தாய்த்
திகழ்வது இசை!

சேய்க்கு மகிழ்வைச்
சேர்ப்பதும் இசை!

அன்றாட வாழ்விலொரு
அங்கமாம் இசை!

 இசைபட வாழ
இசைவோம் இசைக்கு!                                          -காரஞ்சன்(சேஷ்)

பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி