சனி, 27 ஜூலை, 2013

சாரம்!- காரஞ்சன்(சேஷ்)



 வாழ்வின் சாரம்!




காலச் சக்கரத்தில்
கட்டுண்ட நீ
வாழ்க்கைப் பயணத்தில்
வண்டிக்குள் கால்நடையாய்!

விரித்த கரங்களின்
அரவணைப்பில்
சாரமாய் நின்ற
சவுக்கு மரங்கள்!

உயர்ந்த கட்டிடத்திற்கு
சாரமாய் நின்ற
சவுக்குக் கம்பங்கள்
அக(ற்ற)ப்படுகின்றன
அடுத்தொன்றை உயர்த்திட!
அல்லது
அடுப்பினில் எரித்(ந்)திட!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: நண்பர் இரவிஜி அவர்களின் வலைப்பூ!

புதன், 24 ஜூலை, 2013

கிளை தழைக்க! - காரஞ்சன்(சேஷ்)


                                                        கிளை தழைக்க!

வெட்டி  முறித்தாயோ?
வியர்வை பெருகியதோ?
பாழும் மனிதா!
வீழும் நிலையிலும்
நிழல் கொடுக்கும் மரமுனக்கு
போதி மரமாகி
புத்தி புகட்டாதோ?
அழித்திடும் இழிசெயலை
அடியோடு வெட்டியெறி!
தழைத்த மரம் பெருகிடத்தான்
தரணியில் நம் கிளை தழைக்கும்!

                                              -காரஞ்சன்(சேஷ்)

மின்னஞ்சலில் படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி!

வெள்ளி, 19 ஜூலை, 2013

இங்கு எங்கள் கவிஞன் இல்லை சென்று வா நிலா! - காரஞ்சன்(சேஷ்)







இங்கு எங்கள் கவிஞன் இல்லை சென்று வா நிலா!

வந்தநாள் முதல்
இந்தநாள் வரை
செந்தேனில் பாட்டெழுதி
செவிகுளிரச் செய்தவரே!

சிந்தை நிறைந்தவரே
விந்தை என்செய்தீர்?
ஐம்பத் தைந்தாண்டு
ஆட்சிசெய்தீர் திரையுலகை!

தமிழ்த்தாய் உமக்கெனவே
தனிவரந்தான் தந்தாளோ!
வண்டமிழின் தேனுண்ணும்
வண்டினம் ஆனோம்யாம்!

சிந்தை நிறைத்திட்ட
சிறப்பான பாடல்பல
தந்ததனால் தமிழுலகில்
தனியிடம் உமக்கென்றும்!

இசையுடன் கலந்தவரி
ஈட்டியது இசையுமக்கு!
போட்டியுடன் நீரெழுதி
புகழ்பெற்ற பாடல்பல!

வாலிநின் வரியில்
வார்த்தைகளின் எளிமை
எளியோ ரிடத்திலும்
எழுச்சியைத் தந்தது!

ஆண்டவ னிடத்தே
வேண்டிய நின்பாடல்
அந்நாளில் ஒலித்திட
அற்புதம் நிகழ்ந்தது!

ஆணையிட்ட பாடல்
அரியணை ஏற்றியது!
காவியங்கள் பலபடைத்தாய்!
கவியுல(க)கும் போற்றியது!

தலைமுறை பலகடந்தும்
வாலிபர் உள்ளத்தே
வாலிபவாலி யென
வாழ்கின்ற கவிஞன்-நீ!

அவதாரபுருஷரென
அவதாரம் எடுத்தவரே!
அழகிய சிங்கரையும்
ஆராதித்து மகிழ்ந்தவரே!

இசையுடன் நின்வரிகள்
ஈட்டின இசையுமக்கு!
அந்தகன் அறிந்தானோ?
அவனுலகு அழைத்தானோ?

அம்மாவின் பெருமைகளை
அறிந்திட உரைத்தவர் நீர்!
உள்ளம் உருகுதையா
உம்பாடல் கேட்கையிலே!

காற்று மண்டலமே! நீ
கல்நெஞ்சம் கொண்டாயோ!
மூச்சில் கலந்தவரின்
மூச்செடுத்துப் போனாயே!

நாளைஇந்த வேளைபார்த்து
ஓடிவரச் சொல்லி
இன்றே பிரிந்துவிட்டார்!
என்செய்வாய்? வெண்ணிலவே!

அரங்கமா நகரத்தார்
அரங்கனடி சேர்ந்தாரோ?
தமிழ்த்தாயின் தாலாட்டில்
தாமுறங்கிப் போனாரோ?

தலைமுறை இடைவெளியை
தகர்த்தெறிந்து கவிதைதர
இவர்போல் ஒருகவிஞர்
இனியிங்கு வருவாரோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 18 ஜூலை, 2013

ஒட்டுறவு!



ஒட்டுறவு!

நண்பனின் மறைவுக்கு
கண்ணீர் அஞ்சலியாய்
நட்பு வட்டங்கள்
ஒட்டிய சுவரொட்டி!

ஒடுங்கிய வயிறும்
இடுங்கிய கண்களுமாய்-அதைப்
படித்த கிழவிக்கு
பனித்தன கண்கள்!

எதையொட்டி ஏங்குகிறாள்?
ஒட்டிய உறவுக்கா? ஒட்டுறவுக்கா?
-காரஞ்சன்(சேஷ்)
 

ஞாயிறு, 14 ஜூலை, 2013

உயிரான மெய்யே!



                                                                        
                                                                 உயிரான மெய்யே!

உயிருடன் மெய்சேர
உயிர்மெய் என்றாகும்!
உயிராய் என்னுள் நீ
உறைகின்றாய் மெய்யாக!
காதல் எனும் சொல்லில்
கடைசியில் மெய்சேரும்!
மெய்யான காதலென்றும்
மேன்மையுறும்! ஐயமிலை !

-காரஞ்சன்(சேஷ்) 
படஉதவிக்கு நன்றி!:
(திரு பனித்துளி சங்கர் அவர்களின் வலைப்பூ)

வியாழன், 11 ஜூலை, 2013

படித்ததில் பிடித்தது!- காரஞ்சன்(சேஷ்)



படித்ததில் பிடித்தது:-


எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!


பட உதவி: கூகிளுக்கு நன்றி!
மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 8 ஜூலை, 2013

என்றும் பசுமையாய்!

                                                     
                                                           என்றும் பசுமையாய்!

வளரும் பருவத்தில்
வளர்த்தாய் எங்களை!

வாங்கிய கடனை
வட்டி வளர்த்தது!

கரும்பும் நெல்லும்
கருகும் நிலையில்

ஆழ்துளைக் கிணறுகள்
அமைத்திட முயன்றோம்

நீராய்க் கரைந்தது பணம்
நீர் கிடைக்காமலே!

கடனை அடைக்க
கைமாறியது நிலம்!

கண்ணீர் பெரு(க்)கும் நினைவுகளில்
என்றும் பசுமையாய் என்னுள் நீ !

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!