சனி, 15 ஆகஸ்ட், 2015

வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்! -காரஞ்சன் (சேஷ்)

வாழ்க சுதந்திரம்! வளர்க நம்தேசம்!
 
  
அடிமைத்தளை அகன்று
ஆயின ஆண்டுகள்
அறுபத் தொன்பது!


இந்நாட்டின் விடுதலைக்கு
தன்னலமற்ற தலைவர்கள்
ஈந்தனர்  இன்னுயிரை!

முன்னோர்களின் தியாகத்தை
இன்றைய தலைமுறைக்கு
இந்நாளில் எடுத்துரைப்போம்.

இனிவரும்காலம்
இளைஞர்கள் காலம்!


வன்முறை அகற்றிடுவோம்!
வனங்களைக் காத்திடுவோம்!

மாசிலாச் சூழல்
மலர்ந்திட வழிகாண்போம்!

உழவுத் தொழிலின்
உயர்வினைப் போற்றுவோம்!

அனைவருக்கும் கல்வி
அளித்திட வகைசெய்வோம்!

போதைப் பழக்கத்தை
போக்கிட வழிகாண்போம்!

தன்னிறைவுடன் தாய்த்திருநாடு
என்றும் மிளிர்ந்திட


 
இந்நாளில் கொடியேற்றி
ஏற்றிடுவோம் உறுதிமொழி!

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

சனி, 1 ஆகஸ்ட், 2015

எத்தனை கோடி உள்ளங்களைக் கவர்ந்தாய்! ஏனோ இப்படி சட்டென மறைந்தாய்?- காரஞ்சன்(சேஷ்)எத்தனை கோடி உள்ளங்களைக் கவர்ந்தாய்!
ஏனோ இப்படி சட்டென மறைந்தாய்?

 தென்கோடித் தமிழரே!- நீர்
எத்தனைகோடி இன்னுளம் கவர்ந்தீர்!
சாதாரணனும் சாதிக்க முயன்றால்
சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு
சான்றாய்த் திகழ்ந்தீர்!

பொய்யாமொழிக்கேற்ப
புவியில் வாழ்ந்தவரே!
தன்னம்பிக்கையும்
தளரா முயற்சியும்
தரணியில் உமை உயர்த்தின!

எளிமைக்கு இலக்கணமே!
எம் நாட்டுச்  சுடரொளியே!
ஏவுகணை நாயகனே!
விண்வெளி ஆய்வில்
வியக்க வைத்தாய் உலகத்தை!

 அடிமை விலங்ககற்றி
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென
பாடிய பாரதி- அதைப்
பார்க்குமுன்னே மறைந்தான்!

இரண்டாயிரத்து இருபதில்
இந்தியா வல்லரசாக
எந்நாளும் கனவுகண்டீர்!
பாரதிபோல் ஏனோ அதைப்
பார்க்குமுன்னே  மறைந்தீர்!

மறைந்தீர் எனக்கேட்டு
உறைந்தனர் மக்கள்!
மெழுகைச் சுமந்து
அழுதனர் பிள்ளைகள்!
ஆழ்ந்தனர் துயரில்!

 எத்தனையோ மனிதர்கள்
பிறக்கலாம் இப்புவியில்!
இறக்கலாம் இப்புவியில்!
கலாம்போல் ஒருவரை
இனி எப்போது பார்க்கலாம்?


செயற்கைக்கோள் மட்டுமின்றி
செயற்கைக்கால் வடிவமைத்தீர்!
செயற்கரிய செயல்களால்
உயர்ந்திட்டீர் உளங்களிலே!
சம்பவங்களிலும் சரித்திரம் படைத்தவர் நீர்!

வருங்கால பாரதத்தை
வடிவமைக்கும் சிற்பிகளின்
சிந்தனையைத் தூண்டி
சிறகடிக்க விட்டவரே!
வல்லரசாக்க வழிகாட்டி நீரன்றோ!

கடைசிப் பயணத்தைக்
கண்ணுற்றபோது கனத்தது இதயம்!
கண்ணீர் பெருகியது!
நேசத்தின் வெளிப்பாடாய்
தேசமே அழுதது!

வாழ்வதற்குகந்த பூமி
வாய்ப்பதாக ஒரு காட்சி!
அமைதியாக நடந்த
அஞ்சலியே அதன் சாட்சி! 

விண்ணில்  இன்று எழுகின்ற வெண்ணிலவே!
மண்ணுக்குள் மறைந்த இந்த மாமனிதர்
எண்ணம்போல் எம்தேசம் மிளிர்வதை - நீ
கண்ணுறும் காலம் கட்டாயம் தூரமில்லை!

 -காரஞ்சன்(சேஷ்)