ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வருக புத்தாண்டே! வருக! வருக! -காரஞ்சன் (சேஷ்)


அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வருக புத்தாண்டே! வருக! வருக!
 
ஈராறுடன்  இன்னும் ஒன்றிணைந்திட

வருக புத்தாண்டே! வருக! வருக!

மைதி நல்கிடும் ஆண்டென வருக!

ற்றொணாத் துயர்களை அகற்றிட வருக!

ன்சொல் எங்கும் எதிரொலித்திடுக!
 

கைக்குணம் எங்கும் நிறைந்திட

ழவும் தொழிலும் உலகினில் ஓங்கிட

ற்றாய் எங்கும் உவகை பொங்கிட

ங்கும் மங்கலம் என்றும் தங்கிட

ற்றம் அளிக்கும் ஆண்டென வருக!
 

யம் போக்கி அறங்கள் தழைத்திட

ற்றுமை உணர்வு உலகெலாம் உதித்திட

ரணி நின்று வன்முறை ஒழித்திட

ஒளடதம் பெருகி உறுபிணி அகற்றிட

உறுதியும் திறனும் அருள்க புத்தாண்டே!

                                                            - காரஞ்சன் (சேஷ்)

சனி, 29 டிசம்பர், 2012

எச்சம்!-காரஞ்சன்(சேஷ்)


எச்சம்!


காட்டிக் கொடுக்கும்
கறுப்பு ஆடல்ல இது!

காலார ஓய்வெடுக்கும்
கருப்பு ஆடு!

எங்கிருந்தோ பறந்துவந்து

இதன்மேல் ஏன் அமர்ந்தாய்?

சிலையென நினைத்து நீ
சென்றமர்ந்தாயோ?
 
இடங்கொடுத்தவர்மேல்
எச்சமிடாமல்
எழுந்துபற காகமே!

                 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வியாழன், 27 டிசம்பர், 2012

அணைத்திட வருவாயோ?- காரஞ்சன்(சேஷ்)


                                                                     அணைத்திட வருவாயோ?

ஆற்றின் கரையினிலே
அந்திப் பொழுதினிலே
சந்தித்த பொழுதுகளென்
சிந்தையில் தோன்றுதடி!
 
வளைந்தோடும் நீர்காட்டும்
வண்ணமிகு வான்நிறத்தை!
கண்ணிரண்டின் நீர்காட்டும்
கவலையுறும் என்னுளத்தை!

சுழித்தோடும் நீர்போல
சுற்றுதடி உன்நினைவு!
பகையாச்சு பொழுதெல்லாம்
பாவை உன் பிரிவாலே!

கழித்திட்ட காலமெலாம்
கனவென வரும்வேளை
விழிக்கிறதே விழியிரண்டும்
விழிக்கையில் நீயின்றி!
 
கோடையில் மழையொருநாள்
குடைக்குள் இருவருமாய்
பிடித்த கதைகளெலாம்
பேசியே நடந்திட்டோம்!
நனைந்தன உடைகளொடு
நம்மிருவர் இதயமுமே!

கூடிடத் துணைதேடி
கூவிடும் குயிலொன்று
இழையோடும் சோகத்தை
இன்னிசையாய் மீட்டுதடி!

மதிற்மேல் படர்ந்தகொடி
மனதினை வாட்டுதடி!
ஏக்கம் எனும்தீயை
என்னுள்ளே மூட்டுதடி!

ஏக்கப் பெருந்தீயை
என்றணைக்க வருவாயோ?

                       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த கவிதை
 

புதன், 26 டிசம்பர், 2012

இடம்பிடித்தாய்!-காரஞ்சன்(சேஷ்)
      
                                                          இடம்பிடித்தாய்!
வாலாட்டி நன்றிகாட்டும்
வளர்ப்புப் பிராணிக்கு
இடத்தோளில் இடமளித்தாள்!

உள்ளத்தில் இடமுண்டு
உந்தனுக்கு என்றாளோ?

இடம்பிடித்த களிப்பு
இருக்கிறதே அதன்முகத்தில்! 
 
இடமளித்து வலம்வரும் நீ
இடம்பிடித்தாய் என்னுள்ளும்!

-காரஞ்சன்(சேஷ்)
          
பட உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு!

வணக்கம் நண்பர்களே!


வலைச்சரத்தில் வரும் 17-12-2012 ( நாளை முதல்) 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க திரு சீனா ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று இசைந்துள்ளேன்! என்னைத் தொடர்ந்து இதுநாள் வரையில் பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தில் என் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க தங்களின் நல்லாதரவை நல்கிட வேண்டுகிறேன்!
நன்றி!
வலைச்சரத்தில் நாளை முதல் சந்திப்போம்!
வருக!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 6 டிசம்பர், 2012

பிடிப்பு!-காரஞ்சன்(சேஷ்)


பிடிப்பு!


பிடித்தார்…
பிடித்ததனால் பிடிக்கின்றார்!
பிடிப்பதனால்
பிடித்தவர்க்கும்
பிடிக்காதவர் ஆகின்றார்!
பிடிப்பவரைப் பிடித்திட்டால்
பிடித்திடுவாரோ இனி?
பிடிப்பதனால்
பீடிக்கும் பிணிகள் பல!
பிடிக்காதீர்- புகை!
 
 
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 3 டிசம்பர், 2012

எது ஊனம்? -காரஞ்சன்(சேஷ்)

                                                             
                                                                எது ஊனம்?
03-12-2012

உலகமெங்கும் அனுசரிக்கும்
ஊனமுற்றோர் தினம் இன்று!

அவர்படு துயரம்
அடுத்தவர் உணர்ந்து
அரவணைத்திடவே
அமைந்த தினமிது!

உலகளவில்
 ஊனமுற்றோர்
மொத்த மக்கள் தொகையில்
பத்து சதவீதமாம்!

ஆனால் உண்மையில்...

கண்ணிருந்தும் கல்லாதோர்
கண்ணிழந்தோரே!

செல்வம் நிறைந்திருந்தும்
எள்ளளவும் ஈயாதார்
கையிழந்தோரே!

உடல் ஊனம்
 ஒரு பொருட்டல்ல என
உழைப்பவர் மத்தியில்
உடல் பலமிருந்தும்
உழைக்க மறுத்து
முடங்கிக் கிடப்பவர்
முடவரன்றோ!

அடுத்தவர் படுதுயர்-செவி
மடுத்திட மறுப்பவர்
செவிடரன்றோ?

நாடி வந்தோர்க்கு
ஓடி உதவாக்
கால்களும் ஊனமன்றோ?

வாய்மை உரைக்காத
வாயும் ஊமையன்றோ?

பிறர் உயர்வைப்
பொறுக்காத பலரின்
மனமும் ஊனமன்றோ?

இத்தனை ஊனம்
நம்மிடம் இருப்பதை
இனியேனும் உணர்ந்து
உதவிக்கரம் நீட்டுவோம்
ஊனமுற்றோர்க்கு!

முடங்கிக் கிடக்கும்
முக்கியத் திட்டங்கள்
விரைந்து செயல்பட
வேண்டியன செய்வோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

 

வியாழன், 29 நவம்பர், 2012

நீர் கொண்டுவா வெண்மேகமே!-காரஞ்சன்(சேஷ்)

                                       
                                                நீர் கொண்டுவா வெண்மேகமே!

நீசென்று  நீருண்டு

வேருண்ணத் தருவாயா

வெண்மேகமே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:  கூகிளுக்கு நன்றி!

புதன், 28 நவம்பர், 2012

நடந்ததும் நடப்பதும்! காரஞ்சன்(சேஷ்)
நடை திறந்ததும்……

நினைத்து நடந்தார்!
நினைத்தபடி நடந்ததும்
நினைத்தபடி நடந்தார்!
நடப்பதை மறந்தார்!

நடத்துவதும் நீ!
நடத்தப்போவதும் நீ!
நினைத்தது(ம்) நடப்பது
நின்னருளா லன்றோ?
நடந்ததை நினைப்பது
நம் கடனன்றோ?

                     -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 27 நவம்பர், 2012

குழப்பமென்ன?- காரஞ்சன்(சேஷ்)
                                                         குழப்பமென்ன?நகமும் சதையுமாய்
நாமிருப்போம் என்கிறதோ? 

சமாதானத் தூதாக
சம்மதிக்க வேண்டியதோ? 

குரங்கின் தலையில்
குழப்பமென்ன வெண்புறாவே? 

நிம்மதி நாடிவந்து
நின்மேல் சாய்கிறதோ?

                                   -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

இனிக்கட்டும் எம்வாழ்வும்!


 
வளைந்த கரும்புகளே நீர்
வாயிற் காவலரோ?
வாய்க்கால்வழி நீர்ப்பாய்ச்ச
வழிவிடு செங்கரும்பே!

 
இனிப்பொடு கசப்பும் -உன்னில்
இருப்பதாய்ப் பாடலுண்டு!
உறிஞ்சிநீ நீர்குடித்தால்
உண்டாகும் நற்சாறும்!


விளைந்தபின் உனக்குரிய
விலையும் கிடைத்தால்தான்
இனிக்கும்  உன்னாலே
இனித்திடும் எம்வாழ்வும்!

                        -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வியாழன், 15 நவம்பர், 2012

வாழவை! -காரஞ்சன்(சேஷ்)

                                                     
                                                                  வாழவை!


     விளைந்திடும் பயிருக்கு
     வேண்டிய நீரில்லை!
     களையான நெல்வயலைக்
     களையாக விடலாமோ?
     களைந்திடு துயரென்று
     கரம்நீட்டி வேண்டுகிறேன்!
 
     இப்புவியின் பரப்பினிலே
     முப்பங்கு நீர்படைத்தாய்!
     எப்(ம்)பங்கும் இல்லையெனில்
     முப்போகம் விளைவதெங்கே?
      இப்போகம் விளைந்திடவே
     இன்னருள் புரியாயோ?

     பெருகிடும் கண்ணீரில்
     உருகாதோ உந்தனுள்ளம்?
     நெல்விளையும் நிலங்களிலே
      கல்லறுக்கும் நிலைதகுமோ?
      கரையட்டும் கல்நெஞ்சம்-நின்
     கருணை மழையாலே!


                            -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

சனி, 10 நவம்பர், 2012

நலம் தருவாய் நரசிம்மா!-காரஞ்சன்(சேஷ்) நலம் தருவாய் நரசிம்மா!

அகந்தைக்கிழங்கை அழித்திடவோ
நகத்துடனும், சிங்கமுகத்துடனும்
நான்காம் அவதாரமென
நரசிம்மா நீ உதித்தாய்!

அகத் தாமரையில்
அமரவைத் துன்னை
அனுதினம் துதித்தவனின்
துயரினைக் களைந்திட
வானளந்த திருவுருவே
தூணினுள்நீ உதித்தனையோ!

தோன்றிய நாள்முதலாய்
தொடர்ந்து வரும் துயரம்
‘மா’வினுள் வண்டினைப்போல்
மனதுள்ளே வளருதப்பா!
பாதமலர் பற்றிநின்றேன்
பரந்தாமா துயர் களைவாய்!

வேதநெறி அறியேன்!
ஓதும் விதியறியேன்!
சாத்திரம் அறியேன்!
சாற்றுமுறை நானறியேன்!
அரிநாமமொன்றேதான்
அறுதுயர் களையுமென
போற்றித் துதிக்க வந்தேன்
ஏற்று எமக்கருள்வாய்!

நாவால் நின்திருநாமம்
நம்பி நவில்பவர்க்கு
நல்வினைகள் சூழ்ந்தென்றும்
நலம்பலவும் பெருகாதோ?
 
உதிக்கின்ற கதிரொத்த
உன்பார்வை பட்டாலே
பனிவிலகல் போலெந்தன்
பாபங்கள் விலகாதோ?
சங்கொடு சக்கரமும்
என்றுமிடர் அகற்றாதோ?
 
மன்னுபுகழ் மாயவனின்
மனங்குளிரச் செய்பவளே!
உலகளந்த திருவடியின்
உயர்மடியில் அமர்ந்தவளே!
செங்கமலக் கண்களினால்
சினம்தணியச் செய்பவளின்
அருட்பார்வை பட்டாலே
அகலாத துயருமுண்டோ?
 
அகிலத்தைக் காத்திட
ஆராய்ந்து அருள்பவனே!
படைப்புகள் அனைத்துள்ளும்
படைத்தநீ உறைகின்றாய்!
பிறவித்துயர் களைய-நின்
அருட்பார்வை அருளாயோ?
 
நரசிங்கா நின்நாமம்
நாவால் துதிப்பவர்தம்
எண்ணத்தில் உறைந்து
ஏற்றம் அருள்பவனே!
வாடி வருவோர்க்கு
ஈடில்லா பெருமகிழ்வை
என்றும் அருள்வாயே! 

தேரேறும் நின்னருளால்
நீரேறி நெல்விளையும்
பூவரசங் குப்பமுறை
புண்ணியன் நின்நாமத்தை
எண்ணித் துதிப்போர்க்கு
என்றுமினி துயருமிலை!

-காரஞ்சன்(சேஷ்)

 

வியாழன், 8 நவம்பர், 2012

அந்த மஞ்சள் நிறத்தவள்!....


இந்தச் சிறுவீட்டில்
இனிநனைய இடமுமில்லை.!
எவ்வளவு நேரம்தான்
அடுப்படியில் நான்
அடைந்து கிடப்பது?

அடுப்படியில் இருந்தால்
அடிவயிறு பசிக்காதா?
கடித்த துணி கிடக்க-எலி
காணாமற் போனதெங்கே?
கிடைத்தால் ஒரேஅடிதான்!
 
கிளியை வளர்த்தா
என் கையில் கொடுப்பார்கள்
என வெறுத்து வெளிவந்து
மரத்தடியில் பதுங்கிற்று-அந்த
 மஞ்சள் நிறப் பூனை!
          


-காரஞ்சன்(சேஷ்)

புதன், 7 நவம்பர், 2012

மாற்றம் தரும் மருந்தாவோம்! -காரஞ்சன்(சேஷ்)
மாற்றம் தரும் மருந்தாவோம்!


வாழ்விக்கும் மருந்திற்கும்
வாழ்நாள் வரையறுத்தோம்!

காலனின் ஓய்வினில்
கழிகிறது நம்வாழ்வு!

நற்சிந்தனைகளை
நாளும் விதைத்து
ஏற்றம் பெருக்கிட-மன
மாற்றம் தரும்
மருந்தாய் விளங்கிடுவோம்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

திங்கள், 5 நவம்பர், 2012

முதியோர் இல்லம்!-காரஞ்சன்(சேஷ்)

 
முதியோர் இல்லம்!

முதியோர் இருக்கும்
இல்லங்கள் பெருகட்டும்
முதியோர் இல்லங்கள்
பெருகாமலிருக்க!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 4 நவம்பர், 2012

வாரீரோ குருவிகளே!=காரஞ்சன்(சேஷ்)


வாரீரோ குருவிகளே! 
 
ஓலைகளில் கூடுகட்டி
ஒலியெழுப்பும் குருவிகளே!
எட்டாத பனைமரத்தில்
கட்டிவைத்தீர் பலகூடு!
 
வறுமையின் வரவுக்கு
வாசல்கள் திறந்திருக்கும்
வட்டக் குழாயொன்றே
வசித்திடும் எம்வீடு!
 
சிறகடிக்கும் பருவத்தில்
வறுமையெனும் சுமையை
வைத்திட்டார் எந்தலையில்
உந்தலையில் பனங்காய்போல்!
 
பள்ளிச்  சீருடைதான்
பண்டிகைக்கு உடையென்பார்!
ஆடையுடன் பிறந்தநீர்
அறிவீரோ எம்துயரை?
 
இருந்தவை இல்லையெனில்
இருப்போர்க்குப் பெருந்துயரம்!
இல்லை யென்பதொன்றே
இல்லாதார் படும்துயரம்!
 
வாழ்க்கை வரைபடத்தில்
வறுமைக்கும் கோடு உண்டு!
இல்லாதோர்க்கு- அது
எட்டிடா உயரத்தில்!
 
இருப்பவர் கண்களுக்கோ
இ(ர)றக்கக் கோணத்திலும்-அது
எட்டாத தூரத்தில்!
 
வறுமைத் தளையறுந்து-எம்
வாழ்வுநிலை உயர்ந்திடவே
வாழ்த்திப் பாடிட இங்கு
வாரீரோ குருவிகளே!
 
-காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 


வெள்ளி, 2 நவம்பர், 2012

விட்டுப் பிரியாதே சிட்டுக்குருவியே!-காரஞ்சன்(சேஷ்)

விட்டுப் பிரியாதே சிட்டுக்குருவியே!             

கதவினைத் திறந்துவைத்து
காத்திருப்பேன் அனுதினமும்
உதிக்கின்ற கதிரவனொடு
உன்னையும் காண்பதற்காய்! 

காத்திருந்தாயோ?- நீயும்
கதவுகள் திறந்திடவே!
விரைந்து நுழைகிறாய்
வீட்டிற்குள் துணிவுடனே!
  
 
தரையில் இரைத்துவைத்தேன் 
தானியங்கள் சிலவற்றை!
தத்திநடந்தே அவற்றைக்
கொத்தித் தின்கிறாய்! 
 
              ஓரமாய் நான்
              உட்கார்ந்திருந்தாலும்
             விர்ரென்று எனைச்சுற்றி
              விரைந்து பறக்கின்றாய்!

மின்விசிறி ஓரமாய்
               மேலேநீ பறப்பதனால்
புழுக்கத்தையும் உனக்காகப்
பொறுத்துக் கொள்கிறேன்!

கண்ணாடியில் உன்முகத்தைக்
கண்டுஏன் கொத்துகின்றாய்!
துணையைக் கவர்ந்ததாய்
தோன்றியதோ உந்தனுக்கு! 
                
                 சுற்றும் உன்னுடனே
சுற்றவைத்தாய் என்மனதை!
அலைபேசி கதிர்வீச்சால்
அருகிடுதாம் உந்தன் இனம்!          
                                                                                
விழிப்புணர்வு ஏற்படுத்த      
விழைந்த சிறுவர்கள்             
ஒருங்கிணைந்து நின்று
உண்டாக்கினர் உன்னுருவம்!
 
வாழையடி வாழையாய்
வாழ வகைசெய்வோம்!
உன்குரல் ஒலிப்பினிலே--நாளும்
உலகம் விழிக்கட்டும்  !     
                                     -காரஞ்சன்(சேஷ்)
 
படங்கள்: காரஞ்சன்(சேஷ்) மற்றும்தினமலர்

வியாழன், 1 நவம்பர், 2012

ஆதலின் மழையே!-காரஞ்சன்(சேஷ்) 
ஆதலின் மழையே!


பெய்யாமல் பொய்த்த
பருவழை-இவ்வாண்டு
பொய்க்காமல் பெய்ய
புயலொடு வந்ததுவோ?

நீலமெனும் பெயர்பெற்று
நிலைகொண்டது புயலொன்று!

 “நீலம்” தீண்டியதால்
நிறம் மாறிய வானம்
ஓயாமல் மழையென
உகுத்தது கண்ணீரை!

 கார்மேகம் முழுவதையும்
கடத்தியது சுழற்காற்று!
உடைந்தழுத மேகத்தால்
உண்டாச்சு அடைமழையும்!

சூழ்ந்த மழைநீரால்
பாழாகும் பயிர்கள்பல!
வீழ்ந்த கம்பங்களால்
விடைபெற்றது மின்சாரம்!

சாலைகளை அடைத்தன
சாய்ந்த பெருமரங்கள்!
அல்லலுடன் மக்கள்
அடைந்தனர் வீட்டிற்குள்!
 
"தானே" அளவிற்குத்-துயர்
தரவில்லை என்றாலும்
கரைகடக்கும் வரையில்
கலக்கமுற வைத்த புயல்!

மண்ணுக்கு அமுதம்
மழைத்துளி யாகும்!
விண்பொய்த்தாலோ
வியனுல கில்லை!
அளவில் மிகுந்திடின்
அமுதமும் நஞ்சே!
 
ஆதலின் மழையே....
அளவுடன் நல்கி-புவி
வளம்பெறச் செய்வாய்!
                                            -காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 30 அக்டோபர், 2012

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!-காரஞ்சன்(சேஷ்)


 

தளர்ந்த வயதில் மலர்ந்த நினைவுகள்!

சிறுவயதுப் பருவங்கள் 
சிந்தையில் மலர்ந்தனவோ?

விடுமுறை நாட்களில்
விளையாடி மகிழ்ந்தகதை
நீங்காது இன்னும்
நினைவலையில் இருக்குதடி!

பூவரச இலைசுருட்டி
ப்பூ .ப்பூ ஊதிநின்றோம்!
முதிர்ந்தநுணாக் காய்களிலே
முக்கோணம் சதுரமென
தென்னங் குச்சிகளை
தேர்செய்யக் கோர்த்திட்டோம்!

உண்டாக்கிய தேரை
உவகையுடன் இழுத்திட்டோம்!
 
கல்லா? மண்ணா?வொடு
கண்ணாமூச்சி, பாண்டியென
களிப்புடன் விளையாடிக்
களைத்துத் திரும்பிடுவோம்!

 மணலில் வீடுகட்டி
மாளிகை என்றுரைத்தோம்!
எண்ணம்போல் கிறுக்கலுக்கு
ஏதேதோ பேர்வைத்தோம்!
 
காய்ந்த பனைஓலையிலே
கருவேல முள்ளிணைத்து
காற்றாடி சுற்றிடவே
கால்வலிக்க ஓடிநிற்போம்!

 பல்லாங்குழி, பரமபதம்
தாயம் இவையெல்லாம்
வெயில் மிகும்வேளை
வீட்டிற்குள் விளையாட்டு!

 திருவிழா நாட்களில்
தின்பண்டம் மட்டுமன்றி
வண்ணக் கண்ணாடியும்
வாங்கிட அடம்பிடிப்போம்!

வெள்ளரிப் பழத்தினிலே
வெல்லமும் சேர்த்துண்போம்!
வெண்ணிற நுங்குகளை
விரல்வழி உறிஞ்சிடுவோம்!

 கலந்த சோற்றிற்கு
கைநீட்டிக் காத்திருப்போம்!
வழங்கிடுவாள் அன்னை
வரிசையில் அமரவைத்து!

தும்பைப் பூத்தொடுத்து
துவளும் முறுக்குசெய்தோம்!
இந்தத் தலைமுறையில்
இவையனைத்தும் இல்லையடி!     
 
 -காரஞ்சன்(சேஷ்)
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி