புதன், 14 ஜனவரி, 2015

"பொங்கலோ பொங்கல்!" -காரஞ்சன்(சேஷ்)


"பொங்கலோ பொங்கல்!"


நாட்டினில் பசிப்பிணியை
ஓட்டிட உழைப்பவர்கள்
கூடிக் களித்துக்
கொண்டாடும்  பொங்கல்!

உறுதுணையாய் நிற்கின்ற
கறவைக்கும் கதிருக்கும்
மறவாமல் நன்றிசொல்லி
மகிழும்நாள் பொங்கல்!

நோக்குங்கால் மகிழ்விக்கும்
மாக்கோலம் பூவோடு!
மணநாள் வரவிற்கு
கன்னியர்கள் கனவோடு!

விளைந்த செந்நெல்லால்
வீடெங்கும் புத்தரிசி!
மஞ்சள் கழுத்துடனே
பொங்கலிடப் புதுப்பானை!
  
செங்கரும்பின் சுவையுடனே
பொங்கட்டும் தைப்பொங்கல்!
எங்கெங்கும் மகிழ்வலைகள்
எந்நாளும் தங்கட்டும்!

உழைப்பின் பயன்பெற்று
உழவர்கள் உயரட்டும்!
தழைத்தோங்கி நம்நாடு
தரணியிலே உயரட்டும்!

பொங்கட்டும் நல்லன்பு !
தங்கட்டும் மகிழ்வலைகள்!
நகைதவழும் முகங்களொடு
பகையுணர்வு மறையட்டும்!

பொங்கலோ பொங்கலென
பொங்கிவரும் மகிழ்வோடு
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம் இந்நாளில்!
                                               -காரஞ்சன்(சேஷ்)
படங்கள்:கூகிளுக்கு நன்றி!

வியாழன், 1 ஜனவரி, 2015

புத்தாண்டே வருக! வருக!-புத்தாண்டு நல்வாழ்த்துகள்!-காரஞ்சன்(சேஷ்)


வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஊற்றுநீர் உயர்ந்து ஊர்கள் தழைத்திடவே
சேற்று வயல்களெலாம் செந்நெல் விளைந்திடவே
வேற்று கிரகங்களுக்கு விண்கலன்கள் விரைந்திடவே
குற்றங்கள் குறைந்து நல் மாற்றம் விளைந்திடவே
காற்றின் மாசகற்றி கடும்பிணி ஒழிந்திடவே
மாற்றங்கள் விளைவித்து ஏற்றங்கள் சேர்த்திடும்
ஈற்றினிலே மூவைந்தை ஏந்திவரும் புத்தாண்டே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!