ஞாயிறு, 17 நவம்பர், 2013

தீபத்திருநாள் வாழ்த்து! -காரஞ்சன் (சேஷ்)




ஆகினாய் ஒளிவடிவாய்!
ஏகிஎன்  மனத்துள்ளே
என்னாளும் உறைபவனே!
அகலாத நினைவுடனே
அகல் விளக்கேற்றி வைத்தோம்!
அகல் விளக்கின் ஆவளியில்
அகலட்டும் இருளனைத்தும்!
புகலிடம் நின் பொற்பாதம்!
புகல்நாவே அவன்நாமம்!
இகல் வெல்லும்! இடரகற்றும்!
பாபங்கள் அகலட்டும்                                              
தீபஒளி தரிசனத்தில்!
                                                           -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 12 நவம்பர், 2013

நீங்காத எண்ணம் ஒன்று.... -காரஞ்சன்(சேஷ்)





நீங்காத எண்ணம் ஒன்று......

பிறந்த இடமும்
வளர்ந்த வீடும்
நீங்கா நினைவுகளில்
நிச்சயம் இடம்பிடிக்கும்!

சுட்ட கல்லொடு
சுண்ணாம்பு மட்டுமின்றி
நினைவில் வாழ்வோரின்
எண்ணக் கலவைகளை
தன்னுள் கொ(க)ண்ட வீடு!

பணியின் பொருட்டு
பல இடங்கள் சென்றாலும்
நிலையாய் என்னுள்
நிறைந்திருக்கும் வீடு இது!

வளர்ந்த வீட்டின்
வாசலில் நுழைகையில்
இனம்புரியா மகிழ்வு
என்றென்றும் என்னுள்!

நிழற் கடிகாரமாய்
நின்றிருந்த தூண்கள்!
துள்ளி விளையாடிய
தோட்டத்தின் பாதைகள்!
சிட்டுக் குருவியென
சிறகடிக்கும் எந்தன்மனம்!

எண்ணத்தைக் கவரும்
வண்ண மலரனைத்தும்

எங்கள் சொந்தமென
எப்போதும் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சிகள்!

நாங்கள் மட்டுமல்ல!
தோட்டத்துப் பயிர்களும்
ஊட்டமாய் வளர
ஊற்றுநீரை உவந்தளித்த
தோட்டத்துக் கிணறு!

பெருமழைக்காலத்தில்
வறுத்த பயறு வகை
வாய் நிறைத்திருக்க
துப்பறியும் நாவல்களில்
தொலைந்து போன தருணங்கள்!

உறைவிடம் இன்னும்
மறைந்தவரின் பெருமைகளை
உரைக்கும் இடமாகவே
உணரச் செய்கிறது!
கடந்தகால நினைவுகளில்
கரைந்து போகச்செய்கிற்து!

எண்ணத்தில் நிறைந்து
எப்போதும் என்னை
புதுப்பித்துக் கொள்ளும்
புகலிடமாய்த் திகழ்கிறது!

-காரஞ்சன் (சேஷ்)

படங்கள்: காரஞ்சன்(சேஷ்)
எங்கள் வீட்டுத் தோட்ட மலர்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!- காரஞ்சன்(சேஷ்)








வலைப்பூ அன்பர்கள் அனைவருக்கும்

எங்களது உளங்கனிந்த

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!








-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!