வியாழன், 23 ஜனவரி, 2014

பார்த்து வியந்த காணொளிகள்- காரஞ்சன் (சேஷ்)

பார்த்து வியந்த மூன்று காணொளிகள் உங்கள் பார்வைக்கு!
 
 
 
 
 
 
 
 
 


பார்த்து தங்களின் கருத்தினைப் பதியுங்களேன்!

(மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!)

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்ந்தேன்!- காரஞ்சன்(சேஷ்)


இந்தப் புகைப்படங்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய என் நண்பருக்கு மிக்க நன்றி!

கீழேயுள்ள புகைப்படங்கள் என்னவென்று கண்டுபிடியுங்களேன்!


நம்புங்கள்! இவையனைத்தும் சோப்புகள்தானாம்!

-காரஞ்சன்(சேஷ்)

சனி, 18 ஜனவரி, 2014

படித்ததில் பிடித்தது- காரஞ்சன்(சேஷ்)


சிரிக்கவைத்த மின்னஞ்சல்!

மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!
  
 (Art of making coffee decoction) டிகாக்ஷன் போடும் கலை!

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது...மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க” என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது.  மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடி பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன் மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டி வைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டி வகையறா…

மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும் போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப் போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.
துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?
மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது…
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….
இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப் போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம்.
ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக் குடித்துவிட்டு அவளுக்கும் தர வேண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது.  சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன.  உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் அடுப்பேற்றினேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது. ”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்த பாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக் கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும் படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக் கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து ‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டு கால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள், ‘தூ தூ… என்று மனைவியின் கூப்பாடு.
”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”
”எதை?”

”என் தலையை!” மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் – வேலை முடிஞ்சிதுன்னு.

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை… ”இதனுடைய மேல் பில்ட்டர் எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன் அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப் போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போட முறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல ஷாவனிஸம்!”

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்.

திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் வாழ்த்து!- காரஞ்சன்(சேஷ்)

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)
 பொங்குக பொங்கல்!
ஏரெடுத்துப் போராடி
பாரின் பசிபோக்க
ஓயாமல் உழைக்கும்
உழவர்களின் திருநாள்!
 
தென்னகத்து உழவன்
தன்னகத்தே கொண்ட
நன்றியெனும் உணர்வை
நவிலும் நாள்-பொங்கல்!

 
கதிரால் கதிர் விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
புத்தரிசிப் பொங்கலிட்டு
புகன்றிடுவான்- நன்றி!

மெழுகிய முற்றந்தனில்

மாவிலைத் தோரணங்கள்!
மாக்கோல ஓவியங்கள்!

செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு உடன் நிற்க
பொன்மஞ்சள் கழுத்தோடு
புதுப்பானை- பொங்கலிட!

பொங்கிவரும் பாலுடனே
புத்தரிசி பானைபுக
புதுவெல்லம் உடன்சேர
 
பொங்கி வரும் வேளை
"பொங்கலோ பொங்கல்!"என
மங்கல ஒலிஎழுப்பி
மகிழ்ந்திடுவீர் அனைவருமே!

மங்கலம் பொங்கியெங்கும்
மனைநலம் சிறக்கட்டும்!

உழவர்தம் வாழ்வு
ஒளிமயமாய்த் திகழட்டும்!
 
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
 
 
மண்ணின் வளம்பெருக்க
இந்நாளில் சூளுரைப்போம்!
 
செயற்கை உரம்மிகுந்தால்
சீர்கெடுமே விளைநிலங்கள்!
 
கூர்த்தமதி  நம்மாழ்வார்
கூறிய வழிபற்றி
இயற்கை உரமிடுவீர்!
வியத்தகு பயனடைவீர்!
 
பொங்குக பொங்கல்!  பொங்கலோ பொங்கல்!
 
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                
 
  -காரஞ்சன்(சேஷ்)
        படங்கள்: உதவிக்கு கூகிளுக்கு நன்றி                     

வெள்ளி, 10 ஜனவரி, 2014

இணையத்தின் சமூகப்பயன்பாடு- பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரை!

                                            இணையத்தின் சமூகப் பயன்பாடு!

முன்னுரை:
         ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதில் வாழும் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. நம்மிடையே பற்பல பிரிவினைகள், வேறுபாடுகள் நீர்மேல் கோடாய் இருப்பினும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு தனி மனிதன் ஆற்றும் கடமையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. “தனிமரம் தோப்பாகாது”, “கூடிவாழ்ந்தால் கோடிநன்மை”,”ஊரோடு ஒத்துவாழ்” என்ற பழமொழிகளுக்கேற்ப மனிதன்  கூடிவாழ்வது சமூகமாகிறது. சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு கல்வி அறிவு, தகவல் தொடர்பு, போக்குவரத்து போன்றவை முக்கியக் காரணிகளாகின்றன. இந்த விஞ்ஞான யுகத்தில் தகவல் தொடர்பு எல்லா முன்னேற்றத்திற்கும் ஒர் ஆதார சுருதியாய் அமைந்துள்ளது. கடிதப்பரிமாற்றம், அவசரத்திற்குத் தந்தி, தொலைபேசி வழி தகவல் பரிமாற்றம் (குரல் வழி), தொலைநகல் இவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சியாய் கணினியின் வரவு அமைந்தது. அதன் பின்னர் கணினிகள் பல பிணையங்கள் மூலம் ஒன்றிணைக்கப் பட்டு இணையம் உருவானது. அகண்ட அலைவரிசையின் வரவு, பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கி உலகை ஊராய்ச் சுருக்கிவிட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பதில் இணையத்தின் வளர்ச்சி இக்காலத்தில் பெரும் பங்காற்றுகிறது. இந்திய கவுன்சில் நடத்திய பொருளாதார உறவுகள் குறித்த ஆய்வு, இணையதள இணைப்பு 10% அதிகமாகும்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 1.08 விழுக்காடு அதிகரிப்பதாகக் குறிப்பிடுகிறது. உலக வங்கியின் அறிக்கை, வளரும் நாடுகளில் அகண்ட அலைவரிசை இணைப்பு 10% அதிகரிக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.38% அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்துவதில் நம்நாடு தற்சமயம் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், ஜூன் 2014ல் இரண்டாம் இடத்தை எட்டலாம் என்றும் ஐ.எம்.எ.ஐ மற்றும் ஐ.எம்.ஆர்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிமனித, சமூக மேம்பாட்டில் இணையத்தின் பங்கு இன்றியமையாததாய் ஆகி, நம் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட  நிலை உருவாகியுள்ளது. இந் நிலையில், இணையத்தின் சமூகப் பயன்பாடு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

  
  1. விவசாயம்:
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்பது வள்ளுவரின் வாக்கு. நம் நாடு விவசாய நாடு. கிராமங்களில் மக்கள் பெருமளவில் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.  பெருகிடும் மக்கள் தொகைக்கேற்ப, உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்காக பல நவீன வேளாண் யுக்திகளைக் கையாள வேண்டியுள்ளது. மண்ணின் தரம்,தேவையான உரம், நீரின் தன்மை, பயிர்களைத் தாக்கும் நோய்களைக் குறித்த விழிப்புணர்வு, தரமான விதைகள், விளை பொருட்களின் அன்றாட விலை நிலவரம், விற்பனைச் சந்தைகள், பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண் வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறுதல் போன்றவற்றிற்கு கிராமப்புற அளவில் இணையத்தின் பங்கு இன்றியமையாததாய் உள்ளது என்பதை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்,சிலம்ப வேளாண்காடு என்ற சிற்றூரைச் சேர்ந்த விவசாயி திரு. தனபாலசிங்கம் அவர்களின் பேட்டி மூலம் உணரமுடிகிறது. கிராமப் புற மக்கள் மத்தியிலும் இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதொரு அறிகுறியாய்த் தெரிகிறது.

  1. கல்வி

“ஒருமைக்கண் தாம்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து” என வள்ளுவரால் சிறப்பிக்கப் பட்ட கற்றல்/கற்பித்தல் பணியில் இணையம் பெரும்பங்கு வகிக்கிறது.  பள்ளிகளில் வகுப்பறைகள் தற்காலத்தில் இணைய இணைப்புடன் கூடிய கணினியோடு நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.  “ஒரு படம் ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பதற்கேற்ப, பாடப் பகுதிகள் பட வடிவில் மாற்றப்பட்டு, எளிய முறையில் கற்பிக்கப் படுகின்றன. பவர்பாயிண்ட் போன்ற மென்பொருட்கள் வகுப்பறைகளிலும், கருத்தரங்குகளிலும் எளிய முறையில் விளக்க மளிக்க , ஸ்லைடுகள்(slides) தயாரிக்க பெரிதும் உதவுகின்றன.

செந்தமிழ் ஓசையை உலகமெலாம் பரப்பி பாரதியின் எண்ணத்தை ஈடேற்றுவதில் இணையம் பெரிதும் பயன்படுகிறது.  கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் “உத்தமம்” என்ற அமைப்பு உலகத் தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது. அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற 12ம் உலகத் தமிழ் இணைய மாநாட்டில், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு,”கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை” எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.

இணையவழிக் கல்வி குறித்து சிறப்புக் கருத்தரங்குகள் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. தமிழிணைய பல்கலைக்கழகம், இணைய வழி தமிழ்க்கல்வி மட்டும் அல்லாமல், மின் நூலகம், மொழி ஆய்வு, தமிழகத்தின் கலாச்சாரச் சிறப்புகள் பற்றி இணையத்தில் பதிவுகள் செய்து மரபுக் கல்வி நிறுவனமாக சேவையாற்றி வருகிறது.

இணையத்தில் ஏராளமான கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், மின் நூல்கள், மின் நூலகங்கள், மின்பள்ளிகள், ஒலிநூல்கள் காணக்கிடைக்கின்றன.மொழிபெயர்க்கும் திறன் கொண்ட மென்பொருள்கள், யாப்பிலக்கணம் கற்க மற்றும் எழுதிய பாக்களைச் செப்பம் செய்ய, பிழை நீக்க, அவலோகிதம் போன்ற மென்பொருள்கள், தட்டச்சு பயில மென்பொருட்கள், இசையைக் கற்க, இசைக்கருவிகளைப் பயன்படுத்த வகைசெய்யும் பல மென்பொருட்கள், மருத்துவப் படிப்பிற்கு உதவும் காணொளிகள், கணினிப்பயிற்சிக்கான காணொளிகள், பொறியியல் கல்வி பயில வகை செய்யும் பல காணொளிகள் நிறைந்த கருவூலமாக இணையம் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

சங்க இலக்கியங்கள், சமய நூல்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளும் மின்னூல் வடிவில்  “ப்ராஜெக்ட்மதுரை” என்ற வலைத்தளத்தில் தொகுக்கப் பட்டுள்ளன.

கட்டடக்கலை பயில்பவர்களுக்கும் வழிகாட்டியாக இணையம் விளங்குகிறது. இதில் முப்பரிமாண, இருபரிமாண வரைபடங்கள் மற்றும் கோட்டுப்படங்களையும் தயார் செய்யவும், தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து இறுதி வடிவம் கொடுப்பதற்கும் பேருதவி புரிகிறது. ஸ்வீட் ஹோம்(Sweet home)” போன்ற முப்பரிமாண மென்பொருள்கள், உள் வடிவமைப்பினை (Interior Design)  அனைவரும் செய்து பார்க்கும் வகையில் எளிமையாக்கி உள்ளது. வேண்டிய வண்ணத்தில், நம் எண்ணம்போல் இந்த மென்பொருள் மூலம் வீட்டை அமைத்துப் பார்க்க முடியும்.  
வலைவாசல் என்னும் சேவை,  குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது துறை என்று ஏதாவதொன்றை முன்னிலைப்படுத்தி அவை தொடர்புடைய தகவல்களை ஒருங்கிணைத்துத் தரவல்லதாக அமைந்துள்ளது.

3.   வர்த்தகம்.
சமீப காலங்களில் நிகழ்நிலை இணைய வணிகத்தின் (ஆன்லைன் வர்த்தகம்) தாக்கம் அதிகரித்து வருகிறது. விலைவாசி நிர்ணயத்திலும் இது பெரும்பங்கு வகிக்கிறது. பல நிறுவனங்கள் தம்முடைய பொருட்களை இணையத்தின் வாயிலாக விளம்பரம் செய்து விற்கும் நிலை அதிகரித்துள்ளது. ப்ளிப்கார்ட்(flipkart), இ-பே (e-bay) போன்ற தளங்களின் வாயிலாக நாம் வாங்கவிருக்கும் பொருட்களைத் தெரிவுசெய்து, அனுப்பிவைக்க வேண்டுகோள் விடுக்க, பெறும் நேரத்தில் உரிய தொகையைச் செலுத்தும் வசதி அமைந்துள்ளது.
கணினித் தொடர்பான மென்பொருட்கள், வன்பொருட்கள், உதிரி பாகங்கள், கைப்பேசி, மடிக்கணினி, எண்ணியல் நிழற்படக் கருவிகள்(digital camera)(காட்சிப்பேழை) மற்றும் திறன்பேசி போன்றவற்றின் விலைநிலவரங்களை அறியவும், வாங்கவும் இணையம் பேருதவி புரிகிறது.
4.   பணப் பரிமாற்றம்.
அனைத்து வங்கிகளுமே தன் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப இணையத்தின் வாயிலாக பணப்பரிமாற்றம், கடன் தவணை செலுத்தும் வசதி, பல்வேறு கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்தும் வசதியை அளிக்கின்றன.
இணையத்தின் மூலம் நடக்கும் வர்த்தகத்தில் பற்றட்டை(Credit card) மற்றும் கடன் அட்டையை (Debit card) உபயோகித்து உரிய தொகையைச் செலுத்தும் வசதியும் இருப்பதால் அந்த இடங்களுச்செல்லாமலும், அலுவலகநேரம் மற்றும் விடுமுறைநாள் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்குமிடத்தில் இருந்தே இணையத்தின் மூலம் பயனடைய முடிகிறது. காப்பீட்டுத் தவணை செலுத்துதல் மற்றும் காப்பீட்டுப் பயன் தொகை பெறுதல் போன்றவையும் இணையத்தின் மூலமே தற்போது நிகழ்கின்றன. பயணத்திற்கான முன்பதிவு, பயணச் சீட்டு பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இணையத்தால் மிக எளிதாக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்க்கு இணையச்சேவை மிக்க பயனளிக்கிறது.
  
5.   பொழுதுபோக்கு
உழைத்துக் களைத்தவர்க்கும், பணிச்சுமை மிக்கவர்க்கும் புத்துணர்வூட்டும் களமாக இணையம் திகழ்கிறது. பொழுதுபோக்கு நிகழ்வுகள், விளையாட்டுகள், பாடல்கள், காணொளிகள், திரைப்படங்கள், நாடகங்கள், பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான, நாம் காணத் தவறிய நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. பண்பாட்டுத் தாக்கத்தையும் இவற்றின் மூலம் ஏற்படுத்துகிறது. கூகிள், முகநூல்(face book) போன்றவை தம் வெற்றிக்கு மிகை படைப்பாக்கச் சிந்தனையை அதிகம் சார்ந்துள்ளன. இவற்றில் உள்ள விளையாட்டுகளால் பலர் ஈர்க்கப்படுவது உண்மை. யூ-ட்யூப் போன்ற தளங்கள் பாடல்கள், காணொளிகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், கண்டுகளிக்கவும், தரவேற்றம் மற்றும் தரவிறக்கம்  செய்துகொள்ளவும் வசதியளிக்கின்றன. எனவே இணையம் ஒரு இணையற்ற பொழுதுபோக்குச் சாதனமாய் அமைந்துள்ளது.

இணைய இதழ்களும் தற்காலத்தில் இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. வாசகர்களின் பின்னூட்டம் இணைய இதழ்களுக்கு ஒரு முக்கிய உயிரோட்டம் அளிக்கிறது. பிரபலமான நாளிதழ்கள் கூட தற்காலத்தில் இணைய இதழ்களாகவும் உருமாற்றம் செய்யப்படுகின்றன. இணைய இதழ்களில் வெளியிடப்படும் தகவல்கள் அவற்றுக்கான சுட்டிகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

6.   அரசுத்துறைகளில் பயன்பாடு (மின் ஆளுமை)
எல்லா அரசுத்துறைகளிலுமே கணினியின் பயன்பாடு மிகுந்துள்ளது. அலுவலர்களின் பணிச்சுமையை வெகுவாகக் குறைப்பதில் கணினி பெரும்பங்காற்றுகிறது. தலைமையகத்துடன் மாவட்டங்கள் இணையத்தின் மூலம் இணைக்கப் படுவதால் தகவல் பரிமாற்றம் எளிதாகவும் உடனுக்குடனும் நடைபெறுகிறது. விரைவாக பல சேவைகளை மக்களுக்கு வழங்கிட முடிகிறது. தேர்வு முடிவுகள், தேர்தல் முடிவுகள் அறிவதிலும் இணையத்தின் பங்கு ஈடு இணையற்றது.
மதுரை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பயன்பாட்டுக்கு வந்த “தொடுவானம்” என்ற இணைய சேவை மூலம் பொதுமக்கள் அரசுக்குத் தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கும், நிவாரணம் பெற்று பயனடையவும் ஏதுவாக அமைந்துள்ளது. நேரமும், செலவும், அலைச்சலும்  இதன் மூலம் தவிர்க்கப் படுகிறது.

இன்று அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாகிறது. தற்காலிக ஆதார் அட்டையை இணையம் மூலம் பெறும் வசதி உள்ளது. பிறப்புச் சன்றிதழ், இறப்புச் சான்றிதழ் ஆகியன இணையம் மூலம் பெறும் வசதி பெருநகரங்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளது. வருமானவரி விவரங்களை சமர்ப்பிக்கவும் இணையம் பயன்படுகிறது.

சுற்றுலாத்துறையில், முக்கிய சுற்றுலாத்தலங்கள் குறித்த விவரங்கள் கண்கவர் படங்களுடனும், விரிவான விவரங்களுடனும் இணையதளங்களில் இடம்பெறச் செய்வதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் வரவு அதிகரிக்கிறது. அதிக அளவில் வெளிநாட்டவர்கள் வருவதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரிக்கிறது.

7.   முகநூல்-வலைப்பூக்கள்-ட்விட்டர்-ஆர்குட் (உலகம் இதிலே அடங்குது!)
(சமூக வலைத்தளங்கள்)
முகநூல்:
             அரிய நிகழ்வுகள், படித்ததில் பிடித்த பயனுள்ள செய்திகள், புகைப்படங்கள், நிகழ்வுகளின் நிழற்படங்கள் இப்படிப் பலவற்றைப் பகிர்ந்துகொள்ளவும்  விருப்பங்கள், தேவைகள் முதலியவற்றை வெளிப்படுத்தவும்
உலகெங்கும் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் வகை செய்கிறது. குழுக்கள் அமைக்கவும் இதில் வசதி உள்ளது. நட்பு வட்டத்தைப் பெருக்க முனையும்போது வள்ளுவரின் வழிகாட்டலின் படி தெரிவு செய்ய, வீணான மன உளைச்சல் மற்றும் இழப்புகளைத் தவிர்க்கலாம். எச்சரிக்கையுடன் கையாள, இது ஒரு  பயனளிக்கும் சேவை என்பதில் ஐயமில்லை!

          அண்மையில், பல ஆண்டுகளுக்கு முன் பிரிந்த அண்ணன் தம்பிகள் முகநூல் வழியாகத் தேடலில் ஈடுபட்டு இணைந்த நிகழ்வினை செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டோம். என்னே ஒரு பயனுள்ள இணைய சேவை இது!

 வலைப்பூ:
நம் ஆக்கங்களை நம் விருப்பப்படி வெளியிடலாம். நாட்தாள், வார, மாத இதழ்களுக்கு அனுப்பினால் அவர்கள் விருப்பப்படி குறைத்தோ, மாற்றியோ, நீக்கியோ வெளியிடுவர். படைப்புகள் வெளியாகாமலும் போகலாம். நம் வெளிப்பாடுகளைச் சிதைவின்றி பகிர்ந்துகொள்ள, பிடித்த படைப்பாளர்களின் வலைப்பூக்களைத் தொடர்ந்திட ,புதியவர்களின் அறிமுகம் கிட்டிட வலைப்பூ வழிவகுக்கிறது. இது அச்சு வாகனத்தால் வெளியாகும் நூல் வடிவில் கிட்ட முடியாததாகும்.
          
           டிவிட்டர்:
                            நாட்டு நடப்பு, உலக நிகழ்வுகள் ஆகியவற்றை அறிய இது ஒரு முக்கிய  
          சாதனமாய்த் திகழ்கிறது. தனிப்பட்ட கணக்குகளை நம் விருப்பப்படி பின்
          தொடரலாம்.  இன்றைய போக்கை அறிந்து கொள்ள ஹேஷ்டேக் வசதி இதில்
           உள்ளது.

          ஆர்குட்:  
               ஜனவரி 22, 2004ல் கூகிளினால் துவங்கப்பட்ட ஆன்லைன் நெட்வொர்க் இது.
               இதைப் பயன்படுத்துவதில் ப்ரேசில் முதலிடம் வகிக்கிறது.
சமூக நிகழ்வுகளையும் அது குறித்த தனிமனிதனின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் களமாகத் திகழ்வதால், அரசியல் மாற்றம் நிகழவும் காரணமாய்த் திகழ்கிறது. ஆட்சியாளர்களும் மக்களின் மனநிலையை அவ்வப்போது அறிந்து தங்களின் சேவையை மேம்படுத்தவும் வகை செய்கிறது.

8. வேலைவாய்ப்பு
     இணைய சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதன் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெற ஏதுவாகிறது.  பொதுமக்கள் பயன்படுத்தும் இணைய சேவை மையங்கள், இணைய விளையாட்டு மையங்கள் போன்றவை இதில் அடங்கும். இம்மையங்களில் பாடல்கள், காணொளிகள் போன்றவற்றைத் தரவிறக்கம் செய்து குறுந்தகடுகளில் பதிவு செய்து கொடுக்கும் பணியினையும் மேற்கொள்கின்றனர். மருத்துவத் துறையில் medical transcriptionன் போன்ற சேவைகளின் மூலமும், கால்சென்ட்டர்களின் மூலமும் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.

9. தன்விவரக் குறிப்புகள் தயாரிக்க
    வேலைதேடும் இளைஞர்களுக்கு தன் விவரக் குறிப்பை தயார் செய்வதென்பது மிக முக்கியமானதாகும். அதற்கு உதவும் பல வலைத்தளங்கள் இணையத்தில் உள்ளன. பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு தன்விவரக் குறிப்பைத் தயார் செய்ய அவை பெரிதும் உதவுகின்றன. முகநூல் வாயிலாகவும் தன்விவரக்குறிப்பினைப் பகிர்ந்து பயனடைவோர் பலர்.
   
10. மின்னஞ்சல் சேவை.
      விரைவான தகவல் பரிமாற்றத்தில் மின்னஞ்சல் மிகப்பெரும் பங்காற்றுகிறது. முக்கியமான கோப்புகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்கிறது. திறன் பேசி மூலம் இணைய இணைப்பின் வழி “வாட்ஸப்” போன்ற வசதிகளோடு புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.

11. தொலைவில் இருந்தும் அருகிலிருப்போம்! (காணொளி உரையாடல்)
                           
    பணிநிமித்தமாக வெளியூரில் இருப்பவர்கள், பொருளீட்ட அயல்நாடு சென்றவர்கள், மேற்படிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கும் மாணவ மாணவியர்கள், தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் காணொளியுடன் உரையாட இணையம் வகை செய்கிறது. யாஹூ மெசஞ்சர், கூகிள் டாக், ஸ்கைப் போன்ற மென்பொருட்கள் இலவசப் பயன்பாட்டை அளிக்கின்றன. திரையில் தோன்றும் உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர்கள், குடும்பத்தாருடன் நினைத்த நேரத்தில் உரையாடுவது நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி  பிரிவுத்துயரைக் குறைக்க வழி செய்கிறது.

பல அரசு விழாக்களில் பல சேவைகள், அடிக்கல் நாட்டல், பாலங்கள் திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகள் காணொளி மூலம் நடைபெறுகின்றன. உயர் அதிகாரிகள் பலர் இந்தச் சேவை மூலம் கிளை அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகளுடன் உரையாடவும், தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் இச்சேவை இணையத்தின் மூலம் வகை செய்கிறது.

கொடிய குற்றங்களைப் புரிந்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் பாதுகாப்பு கருதி சிறைவளாகத்திலேயே நீதிமன்ற விசாரணை நடத்த இந்தச் சேவை பெரிதும் துணைபுரிகிறது.

12. யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா? (வாழ்க்கைத் துணை தேடல்)

இணையம் வழங்கும் இன்னொரு மகத்தான சேவை இது. வாழ்க்கைத் துணையைத் தேட மற்றும் தெரிவு செய்யும் வசதியை பல இணையதளங்கள் அளிக்கின்றன. எங்கே தேடுவேன்? எங்கெலாம் தேடுவதோ? என உளம் வாடுபவர்கள் தங்களின் விவரம், வாழ்க்கைத் துணையாக அமையவேண்டியவர் குறித்த எதிர்பார்ப்பு போன்றவற்றை பதிவு செய்து கொள்வதன் மூலம் பலனடைகின்றனர்.

13. வாழ்விணையவர்க்கான முகநூல் (couplestreet.com)
 இரண்டுபேர்களுக்கான வலைப்பின்னல் என்று இதைக் கூறுவார்கள். முகநூல் பாணியில் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். குடும்பச் செலவுகளைத் திட்டமிடவும் இதில் வசதிகள் உண்டு.  அவசர உலகில் மனம்விட்டு நிறை குறைகளைப் பரிமாறிக் கொள்ளும் நிலை அருகுவதால் இந்நாளில் புரிதல் குறைந்து விவாகரத்து பெறும் சூழல் ஏற்படுகிறது.
வேடிக்கையாகச் சொல்வதுண்டு. இணையத்தின் வழி ஏற்பட்ட முகமறியா நட்பில், கருத்துப் பரிமாற்றத்தில் ஒன்றுபட்டு வாழ முடிவெடுத்து இருவர் சந்தித்தபோது அவ்விருவரும் கணவன் மனைவியாய் வாழ்ந்து விவாகரத்து பெற்றவர்கள் என அறியநேர்ந்தது. பின்னர் அவர்கள் மனம் திருந்தி இணைந்து வாழ முற்பட்டதாகக் கூறுவார்கள். மனம் விட்டு எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணையம் வழிவகை செய்கிறது.

14. மருத்துவம்.

பல மருத்துவமனைகள் நாட்டின் பல பகுதிகளிலும் தத்தம் கிளைகளை அமைத்துள்ளன. சிக்கலான அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை போன்ற தருணங்களில் காணொளி வாயிலாக வேறிடத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற இணையம் வழிவகை செய்கிறது. நவீன மருந்துகள், அவற்றின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்தும் அறிய முடிகிறது. நோயின் அறிகுறிகள், தன்மைகள், தடுக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றி இணையத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

15. தகவல் சேமிப்பு / மீட்பு /பகிர்வு
 நம் கணினியில் உள்ள வன் தட்டு மட்டுமின்றி இணையத்தின் வாயிலாக நம் தகவல்களைச் சேமிக்கும் வசதியை சில இணைய தளங்கள் வழங்குகின்றன. கூகிள் டிரைவ் இதற்கொரு உதாரணமாகும். அடிக்கடி தேவைப்படும் நம் தனிப்பட்ட தகவல்கள், கோப்புகளை இதுபோன்று சேமிப்பதன் மூலம் தேவையான தருணங்களில் எங்கிருந்தபோதும் எடுத்துக்கொள்ள வகை செய்கிறது. நம் கணினியில் இவை ஏதாவது காரணங்களினால் அழிக்கப்பட்டுவிட்டாலும் மீட்பதற்கு வழி செய்கிறது. சேமித்த தகவல்களை நமக்கு வேண்டியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது.

பெரிய நிறுவனங்கள் பலவும் முக்கியமான தகவல்கள், வாடிக்கையாளர் குறித்த விவரங்கள், கோப்புகள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இணையத்தின் மூலம் சேமித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளன. பேரிடர் மேலாண்மை வகையில் இயற்கைச் சீற்றங்கள் அல்லது தீவிபத்து போன்ற காரணங்களால் ஓரிடத்தில் தகவல்கள் அழிந்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கு இந்த முறை பெரிதும் பயனளிப்பதாய் உள்ளது.

க்ளவுட் சேவைகள் (cloud computing) (கோப்புகளை மேகத்தில் சேமிக்க)

ட்ராப் பாக்ஸ் போன்ற க்ளவுட் சேவைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. நம் கோப்புகளைச் சேமிக்க இலவசமான சேமிப்பு இடத்தைத் தருகிறது. நமக்கென ஒரு கணக்கைத் துவக்கி, கடவுச்சொல்  அமைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய கோப்புகளை பாதுகாப்பாக சேமிக்க முடிகிறது. திறன் பேசிகளிலும் பயன்படுத்தும் வண்ணம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவாரி வழங்கும் இலவச மென்பொருட்கள்:
இணையமும் ஒரு வள்ளலே! கட்டணமில்லாமல் தரவிறக்கம் செய்து நம் தேவைக்கேற்ப மென்பொருட்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் அமைந்த திறந்தமூல (open source) மென்பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான கட்டற்ற மென்பொருட்களையும் இணையம் நமக்கு வாரி வழங்குகிறது. உதாரணத்திற்குச் சில:
பிட்கின், தண்டர்பேர்டு-மின்னஞ்சல்களைக் கையாள, ஓப்பன் ஆபீஸ்- அலுவலகப் பணிகளான, கடிதத் தயாரிப்பு,  விரிதாள்கள், அதனைச் சார்ந்த வரைபடங்கள் தயாரிக்க பெருமளவில் உதவும் மென்பொருள், VLC MEDIA PLAYER- ஒளி, ஒலி கோப்புகளைக் கையாள, ஜிம்ப்-உருவப்படங்கள் உருவாக்கம் மற்றும் வடிவமைத்தல்,  ஜிப்- கோப்புகளைச் சுருக்கிட  பயன்படும் மென்பொருள்.  இதுதவிர நம் கணினியைக் காக்கும் இலவச ஆன்டிவைரஸ், மால்வேர், ஸ்பைவேர் தடுப்பு மென்பொருட்களும் இணையத்தில் கிடைக்கின்றன.

கூகிள் வழங்கும் டூர் பில்டர், கூகிள் எர்த், ஸ்ட்ரீட் வியூ வசதிகள்
 உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் எந்த இடத்தையும் பார்க்கமுடியும்.  கூகிள் எர்த் சேவை பூமிப்ப்ந்தின் தோற்றத்தை, விண்ணிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.  டூர் பில்டர் என்ற வசதி மூலம் தங்கள் கதையை ஈணைய வாசிகள் பகிர்ந்து கொள்ளலாம்.  சென்ற இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி, வரைபடமாக்கிக்கொள்ளவும் இந்தச் சேவை பயன்படுகிறது.  செல்ல வேண்டிய இடங்களுக்கு வழிகாட்டும் வசதியையும் இணையம் நமக்கு வழங்குகிறது.

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் சுவையிருக்கும்! (தேடு பொறிகள்):
தகவல் பெட்டமாகத் திகழும் இணையத்தில் எங்கே எது கிடைக்கும் என்றெல்லாம் அறிந்துவைத்து, நாம் தேடும் நேரத்தில் நமக்குதவும் தேடு பொறிகள் ஏராளம்! மிகப் பிரபலமான கூகிள் இதில் குறிப்பிடத்தக்கது. எந்த தலைப்பிலோ, சொல்லைக் கொண்டோ, அது குறித்த செய்திகள், படங்கள், காணொளிகள், மின் நூல்கள் போன்றவற்றைத் தரவிறக்கம் செய்து பயனடைய பெரிதும் துணை புரிகிறது.

இணையம் சந்திக்கும் சவால்கள்.

ஊடுருவல், ஒற்றாடல், போரிடல் என்பன நாடுகளுக்கிடையில் மட்டுமல்லாது, இணையத்திலும் நடைபெறுகிறது. தகவல்களைத் திருடும் விதமாக, மின்வெளி ஒற்றாடல் தாக்குதல்கள் (cyber espionage attacks)நடத்தப் படுகின்றன. இதற்காகத் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் நுட்பமாகவும், சிக்கலாகவும் வடிவமைக்கப் படுகின்றன. ஈரான் நாட்டின் அணுத்திட்டங்கள் சீர்குலைக்கப் பட்ட கதை நாடறியும். இதற்காக ஸ்டெக்ஸ் நெட், டீக்யூ ஆகிய இரண்டும் பாதுகாப்புத் துறையை அதிர்ச்சி அடைய வைத்த நச்சு நிரல்களாகும்.

குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். சைபர் குற்றவாளிகளும் பெருகி வருகிறார்கள். வங்கிக் கணக்குகளில் மோசடி, போட்டி மற்றும் எதிரி நிறுவனங்களுக்குத் தகவல்களை விற்று பணம் ஈட்டும் வர்த்தகக் கயவர்கள், நச்சு நிரல்களைப் பரப்பி அடுத்த நாட்டின் தகவல்களைத் திருடி, கணினிகளை முடக்கும் சைபர் போராளிகள், அரசியல்,மதம், பொருளாதாரம் என ஏதாவது ஒன்றில் நம் கருத்துகளைக்  கேட்டு, அதனை இணையத்தில் பரப்பி நம்மைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் தகவல் கயவர்கள் பெருகிவரும் நிலை சற்றே கவலையளிக்கிறது.

ஆனால் உலகெங்கும் உள்ள கணினி வல்லுநர்களும் இதற்கான தற்காப்பு வழிகளைக் கண்டறிந்து அவ்வப்போது பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.

தகவல் என்க்ரிப்ஷன் போன்ற தக்க பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வழிமுறைகளுடன் இணையத்தை தகவல் பரிமாற்றம், கல்வி  மற்றும் வர்த்தகத்திற்குக்  கையாண்டால் அது ஒரு பலன் தரும் கற்பக விருட்சமாய்த் திகழும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை:

எங்கெங்குக் காணினும் சக்தியடா! எனப் பாடிய பாரதி இன்றிருந்தால் எங்கெங்குக் காணினும் கணினியடா என்றும், காணி நிலம் வேண்டும் என வேண்டியவர், இணையத்தில் இணைந்த கணினி வேண்டும் என்றும் பாடியிருப்பார்.  வரப்புயர என வாழ்த்திய ஒளவை இன்றிருந்தால் இணையம் விரவுக என வாழ்த்தியிருப்பார். நன்மையும் தீமையும் நிறைந்திருந்தாலும், கனியிருப்பக் காய்கவர்ந்தற்று என்ற நிலை கொள்ளாமல், பயனுள்ள விதத்தில் இணையத்தைப் பயன்படுத்த, நாம் உயர்ந்து நாட்டையும் உயர்த்தலாம் என்பது திண்ணம்.


(தைப்பொங்கல் தினத்தையொட்டி நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான என்னுடைய கட்டுரை இது)- -காரஞ்சன்(சேஷ்)

திங்கள், 6 ஜனவரி, 2014

ஓவியக்கவிதை- எழிலி சேஷாத்ரி


திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் பகிர்ந்த ஓவியத்திற்கு என் மனைவி எழுதிய கவிதை இது!இறையனார் கவிதையிலே
இடம்பெற்ற வண்டினமே!
கடிமலர்ச் சோலையிலே
காளையவன் வரவுக்காய்
காத்திருந்து பூத்தவிழி
காண வந்தீரோ?
 
பிரிவுத்துயர் போக்க
பரிவுடனே வருடலுடன்
நறுமண மலர்ச்சரத்தை
நங்கைக்கு அவன் சூட்ட
மலர்ந்த முகங்கண்டு
 மயங்கிச் சூழ்ந்தீரோ?
 
நாணித் தலைசாய்த்து
நங்கையவள் புன்னகைக்க
புன்னகையைப் பூவென்று
எண்ணி விட்டீரோ?
 
எத்தனையோ மலரிருக்க
என்னவளை ஏன்சூழ்ந்தீர்?
மதுவின் மயக்கத்தில்
ஏதும் செய்வீரோ
என்றவனும் விரட்டுகிறான்!

 வண்ண ஓவியத்தை
வார்த்தையில் உரைத்திட
எண்ணத்தில் எழுந்தவற்றை
எழுதிவிட்டேன் கவிதையிலே!
                        -          எழிலி சேஷாத்ரி        

கவிதையை ஏற்று அவர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட                          திரு. வெங்கட்நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!