வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வானும் நானும்! -காரஞ்சன்(சேஷ்)

வானும் நானும்!


பல்லுருவம் காட்டும்
பனிமேகங்கள்!

விண்ணெங்கும்
பஞ்சுப் பொதியாய்
நண்பகல் வெண்மேகங்கள்!அதிகாலை, அந்திமாலை
வண்ணப் பூச்சாய்
கண்கவரும் மேகங்கள்!


எதிர்பார்ப்பை பொய்யாக்கி
காற்றின் கடத்தலில்
வேற்றிடத்தில் பொழியும்
கார்மேகங்கள்!


ஆறுதல் சொல்வாரின்றி
அழுது தீர்க்கும்
அடைமழை மேகங்கள்!


எல்லாம் கடந்ததும்
நிர்மலமான நீலவானம்
என்னிடம் உரைத்தது
எ(இ)துவும் கடந்து போகும்!
-காரஞ்சன்(சேஷ்)

படங்கள்: காரஞ்சன்(சேஷ்)
நீலவானம்:  நண்பர் இரவிஜி

வியாழன், 19 செப்டம்பர், 2013

தூய்மை! -காரஞ்சன்(சேஷ்)


                                                                 தூய்மை!

குப்பை மனங்களின்
கொடூரச் செயல்களால்
பள்ளிச் சிறுமியர்க்கும்
பாலியல் கொடுமைகள்!

மாசடைந்த மனங்களினால்
தேசமெங்கும் வன்முறைகள்!
தூய்மைப் படுத்த -நீ
துடைப்பம் ஏந்தினையோ?

தூய உள்ளங்களின்
துவளா முயற்சியில்
தீய உள்ளங்கள்
திருந்துமோ இனியேனும்?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சுழற்சி- காரஞ்சன்(சேஷ்)


                                                                சுழற்சி!
ஓடித்தேய்ந்து  உருமாறிய
சக்கரத்தின்  சட்டைகள்
ஓட்டி விளையாட
உங்களிடம் சக்கரமாய்!

பழையனவும் புதிதன்றோ
பயன்பாட்டுச் சுழற்சியிலே!

திசையைத் தேர்ந்தெடு!
விசையளி! விரைந்திடு!

இயக்குவிசை ஒன்றாலே
இயங்கும் விசை நாமன்றோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

சனி, 7 செப்டம்பர், 2013

பல்லாங்குழி! -காரஞ்சன்(சேஷ்)

                                                                    பல்லாங்குழி!


                                                                 
பாட்டியுடன் பெயர்த்தி
பல்லாங்குழி விளையாட
கடந்த காலங்கள் நம்
கண்முன் விரிகிறதே!

ஐந்து விரல்களுக்கும்
அதனாலே பலனுண்டு!
பசுவென்றும் கஞ்சியென்றும்
பலநிலைகள் அதிலுண்டு!

அந்நாளில்..

ஊடகங்கள் அதிகமில்லை
உறவுகள் அதிகமுண்டு!
கூடிக் களித்திருக்க
குழுமிய சிறார்களுண்டு!

விளையாடிக் களித்து
விரும்பிக் கதைகேட்டு
களைப்பின் மிகுதியில்
கண்வளர்ந்த காலமது!

முதிய தலைமுறைக்கு
கணினி விளையாட்டை
கற்பிக்கும் இந்நாளில்
இளைய தலைமுறை
இவற்றையும் விரும்பிடுமா?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!