திங்கள், 14 ஏப்ரல், 2014

"நாவினாற் சுட்ட வடு"- சிறுகதை விமர்சனத்திற்கு முதற்பரிசு! - காரஞ்சன்(சேஷ்)

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு முதல்  பரிசினைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு மீண்டும்  ஒருமுறை கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


நாவினாற் சுட்டவடு கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-01-03-first-prize-winners.html

என்னுடைய விமர்சனம் இதோ:

மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது  பேச்சும், நகைச்சுவை உணர்வும்தான்.  எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறரோடு பேச்சின் மூலம் பகிர்ந்துகொள்ள  உறுதுணையாக இருக்கும் நாவிற்கு, வள்ளுவர் தனி அதிகாரம் அமைத்து முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்தே அதை அடக்கி ஆள வேண்டியதன் அவசியம் வெளிப்படுகிறது. தலைப்பைப் பார்த்தவுடன்  கதை நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.

இன்றும் கூட கிராமங்களில் “வார்த்தையைக் கொட்டிவிட்டால் வாரமுடியாது” என்ற பழமொழி வழக்கில் உள்ளது. எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இவற்றைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும். நாவடக்கம் எந்தச் சூழலிலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைக்கு  “நாவினால் சுட்ட வடு” என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 
வாழ்வின் பேரின்பம் மழலைச் செல்வங்கள்தான். அது இல்லாத இடங்களில் ஆயிரம் செல்வமிருப்பினும் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது.  தன் கல்லூரித் தோழியான ரேவதி தன் நாத்தனார் குழந்தைகளுடன் தன் வீட்டிற்கு வரும்போதெல்லாம், அந்தக் குழந்தைகளின் சேட்டையால், ஒரு சலிப்பும், பயமும் அடைந்தாலும்,   குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என எண்ணும் பாங்கும், அவர்களுக்குப் பிரியமான உணவுகளைத் தயார் செய்து வைத்துவிட்டுக் காத்திருப்பதிலும்  குழந்தைகள் மீது கதாநாயகிக்கு ஒரு அக்கறை இருப்பதை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளது. குழந்தைகளின் குறும்புகளை விவரிக்கும்போது ஆசிரியர் அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அவர்களுக்குப் பிடித்தமான உணவுவகைகளையும் பட்டியலிட்டவிதம் அருமை!
குழந்தைகள் மிகவும் இயல்பானவர்கள். தாம் செல்லும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் உடனே ஒன்றாய்க் கலந்து விளையாட ஆரம்பிக்கும் இயல்புடையவர்கள். அவர்கள் தனித்து விடப்படும்போது, பிறர் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காக கையாளும் வழிமுறைகள் தர்மசங்கடமாக சிலருக்குத் தோன்றுகின்றன. தோழியின் வருகையால் தான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது தடைபடுமோ என்று எண்ணி வெளிப்படையாகவே அது முடிந்ததும் வரச் சொல்வதும், அன்றைய தினம் மதிய உறக்கம் கெட்டுவிடும் என நினைப்பதும் ஒரு சராசரிப்பெண்ணின் சின்ன சின்ன ஆசைகள் கதாநாயகிக்குள் இருப்பதை அழகாக வெளிக்கொணரும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
தான் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டிய, தான் இந்த இடத்தில் வாழ்க்கைப்பட உதவிய தன் தோழி ரேவதிக்கும் குழந்தை பாக்கியம் இதுவரை இல்லாதிருப்பதை எண்ணி  தானும் அவளும் ஒரே நிலையில் இருப்பதை நினைத்து அல்ப சந்தோஷம் அடைவதும், தனக்கு ஒன்றுக்கே வழி இல்லாதபோது சிலருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தையாகப் பிறப்பதை எண்ணி ஆதங்கப் படுவதிலிருந்தும், மழலைச் செல்வம் இல்லாததால் மனதில் குடிகொண்ட ஏக்கத்தையும், பெற்றவர்களைப் பார்த்து பெருமூச்செறியும் சராசரிப் பெண்ணாகிவிடுவதை வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு தொட்டில் இடும்போது, குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்கள், அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம்  செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று, கூடியிருந்த வயதான பெண்மணிகள் கூற, மறுமனை என்ற பெயரில்  பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, இவர்களுக்கும், மாலையிட்டு, கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விடுகின்றனர். பலமுறை இப்படி நிகழும்போது அதனால் அந்தப் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை கதாநாயகி   தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துவதாய் அமைத்து  அத்தகைய செயல்களைத் தவிர்க்கலாமே என சமுதாயத்திற்கும் ஒரு சாட்டையடி கொடுத்துள்ளார்.
குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொருவர் வெவ்வேறுவிதமான ஆலோசனைகளையும், சம்ப்பிரதாயமான  தீர்வுகளையும் சொல்லும்போதும், பிறர் பார்வையில் அவர்கள் ஒரு காட்சிப்பொருளாக ஆகநேர்கையில்  அவர்களின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதை தனக்கே  உரித்தான பாணியில் எடுத்துரைத்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அயர்ந்து  உறங்கிய குழந்தையால் நேரம்போவது தெரியாமல் அளவளாவிய தோழிகள், சத்தம் கேட்டவுடன் படுக்கையறையில் இருந்த மடிக்கணினியை கீழே இழுத்துத் தள்ளியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாலும், ரேவதி நான் வருகிறேன் என்று கூறி அசட்டையாக அகல்வதும், அதனால் கதாநாயகி எரிச்சல் அடைவதும் சராசரிப் பெண்களின் வாழ்வில் நிகழ்வதுதான். கணவரின் மடிக்கணினியை இயக்கத் தெரியாது அப்படியே முயற்சித்து ஏதாவது பழுதாகிவிட்டாலென்னசெய்வது என எண்ணும் இடத்தில் கதாநாயகியுடைய தாழ்வு மனப்பான்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
கணவரிடம் அந்நிகழ்வை உரைப்பதற்கு கதாநாயகி பீடிகை போடுவதும் அருமை! அவர் மனம் நோகாத வகையில் அதை வெளிப்படுத்த நினைத்ததும் அருமை.   வீட்டிற்குச் சென்றபின் ரேவதி தன் தோழியிடம் மடிக்கணினிக்கு ஏதாவது சேதம் விளைந்ததா என வினவியிருக்கலாம்.  இதுபோன்ற நிகழ்வுகள் யாருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்காக தோழியின் செயல்பாடு  அமைக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அசட்டையாய் அகன்ற ரேவதிக்கு, தன் கணவர் தொலைபேசியில்,  தன் மடிக்கணினிக்கு எள்ளளவும் சேதமில்லை என உரைப்பதைக் கேட்டு மனதிற்குள் தனக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவளிடம் கனிவுடன் தன் கணவர் பேசுவதாக ஆதங்கப் படுவதாய் அமைத்தது நியாயமான நிகழ்வுதான்.
”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான் .....  விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே”   என்று கணவர் கூறும்போது, தன்னில் பாதியான தன் மனைவியின் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்  என உணரத் தவறி விட்டார்.
 ஒருவேளை மடிக்கண்ணிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இதே வார்த்தைகள் வெளிப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும் குழந்தையில்லாமல் போனதற்கு மனைவி மட்டுமே காரணம் என அவர் எண்ணுகிறாரா? அவரிடமும் குறைகள் இருக்கலாம் அல்லவா?
மடிக்கணினி உடையாததைப்பற்றி மகிழ்வடைந்த கணவர் தன் மனைவியின் மனம் உடைந்ததை உணராதது கொடுமை!
மொத்தத்தில் இந்தக் கதையில்  குழந்தைகளின் குறும்புகள், குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தைகளை வரவேற்கக் காத்திருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்றவை மிகவும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.
நாம் சொல்லும் சொற்கள், சொல்லும் சுழ்நிலைகள் மற்றும்  சொல்லும் விதத்தைப் பொறுத்து பிறர் மனத்தை எப்படி பாதிக்கும் என்பதை அருமையாக விளக்கி “நா காக்க” என அறிவுறுத்துகிறார் கதாசிரியர். குழந்தையில்லாதவர்களுக்கு, சில சடங்குகளில் அவர்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்துவதால் அவற்றின் மீது அவர்கள் நம்பிக்கை இழப்பதும், செய்யச் சொல்பவர்களின் மீது வெறுப்புணர்ச்சி கொள்வதும் நிகழும் என்பதை அழகாக விளக்கி அவற்றைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார்.
அருமையான  இந்தக் கதையைப் படைத்த ஆசிரியருக்கு என் பாராட்டுகள்!
- காரஞ்சன்(சேஷ்)

என்னுடன் பரிசு பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள்! நன்றி!

சித்திரைத் திருநாள் வாழ்த்து! - காரஞ்சன்(சேஷ்)


                                             சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

அழுக்ககற்றி, அகம் துடைத்து
விழித்தெழும் வேளையிலே
விண்ணிலோர் நல்லுதயம்!

ஈத்துவக்கும் இன்பம்
இல்லமெங்கும் பரவிடவே
நலங்கள் பல்கவழி
நல்கிடுவாய் சித்திரையே!

முக்கனிகள் சுவைகூட்ட
முழுநிலவு தாலாட்ட
எழுகின்ற மகிழ்வலைகள்
எந்நாளும் தொடரட்டும்!

விழிக்கட்டும் உலகம் இனி
விடியலைக் கண்டிடவே!
விழிப்புடனே செயல்பட்டால்
வெற்றிதரும் இவ்வாண்டு!

-காரஞ்சன் (சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நினைவேட்டிலிருந்து! -------காரஞ்சன்(சேஷ்)


                                                    நினைவேட்டிலிருந்து!

தொண்ணூறுகளின்
தொடக்கம் வரை
ஊற்று நீரை உவந்தளித்த
தோட்டத்துக் கிணறு இது!

கோடையிலோ இது
குளிர்ந்த நீர்ப்பானை!
எப்போதும் ஈரத்தால்
செங்கல் தரையெங்கும்
தங்கிடும் பாசியினம்!

கணக்காசிரியரின்
பிரம்படி தவிர்த்திட
பெருக்கலையும் வகுத்தலையும்
துணிதுவைத்த அம்மாவைத்
தொந்தரவு செய்து
நான்காம் வகுப்பில்
நான் கற்றது இங்குதான்!

அடிவரை சுரண்டி
அள்ளினர்- மணலினை!
வறண்ட மடியாயின
வளமான ஆறுகள்!

ஊற்றுக்கண் அடைபட
ஈரக்கயிற்றுடன் இராட்டினமும்
குறுக்கு மரக்கட்டையும்
காலமாற்றத்தில்
காணாமற்போயின!

புதுப்பித்த சுவர்களுடன்
புது நடைபாதையுடன்
நீரில்லாக் கிணறு
நினைவுச் சின்னமாய்!

என் நினைவேட்டில்
இன்றளவும்
ஈரக்கிணற்றடிதான்
நீங்கா இடம்பிடித்து
நிரந்தரமாய் நிற்கிறது!

எட்டிப் பார்க்கிறேன்!
வறண்ட கிணற்றினுள்
வழிந்து மறைந்தன
கண்களில் திரண்ட
கண்ணீர்த் துளிகள்!

-காரஞ்சன்(சேஷ்)

புதன், 9 ஏப்ரல், 2014

எல்லைக்கோடு! -காரஞ்சன்(சேஷ்)

                                                   
                                                             எல்லைக்கோடு!

வாழ்க்கைப் பயணத்தில்
வறுமைக் கோட்டைத்
தாண்ட முயன்று
தளர்ந்து போனீரோ?

 வளைந்த சாலையில்
வரைந்த கோட்டின்மேல்
கடக்கும் இடம்தேடி
நடந்து செல்கின்றீர்!

 விரைபவர்களுக்குள்
விபத்தினைத் தடுக்க
வெள்ளைக்கோடுகள்
எல்லைக்கோடுகள்!
 
கடக்க முயல்பவர்க்கு
எல்லைக்கோடுகள்
என்றைக்குமே
தொல்லைக்கோடுகள்தான்! 
                                                      -காரஞ்சன்( சேஷ்)
 பட உதவி: மாயவரத்தான் எம்.ஜி.ஆர் அவர்களின் வலைப்பூ!

திங்கள், 7 ஏப்ரல், 2014

திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதற்பரிசு!


மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டிக்கான விமர்சனத்திற்கு எனக்கு முதன் முறையாக
முதல்  பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


கதைக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-01-04-first-prize-winners.html
என் விமர்சனம் இதோ!

கதாசிரியரே கதாநாயகனோ?. முன்கதைச் சுருக்கத்தை கண்முன்னே நிறுத்திய அருமையான நடை  அந்நாளில் இது திரைக்கதையாக வடிவமைக்கப்பெற்று, மறைந்த காதல் மன்னன் ஜெமினி அவர்களோ (அ) நடிகர் திலகம் சிவாஜி அவர்களோ நடித்து திரைப்படமாக வெளிவந்திருந்தால் நிச்சயம் வசூலைக் குவித்து, இன்றும் பேசப்படும் படங்களில் ஒன்றாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
 
ஆயிரம் ஆசைகளை உள்ளடக்கி  இருந்தாலும், அந்தக்காலத்து  இளைஞர்களின் அடக்கமான நடைமுறைகள், உயர்ந்ததோர் சுயக் கட்டுப்பாடு, அவர்தம் பொழுதுபோக்கு, மன ஓட்டம் முதலியவற்றைத் தெள்ளிய முறையில் எடுத்துக்காட்டும் இடங்கள் இனிமை.
 
அந்தக்கால திருச்சி வாழ்க்கையினை விளக்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த திரைப் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாய் காட்சிகளின் வர்ணனைகள் அமைந்துள்ளன. அந்தக் கால ஓட்டு வீடுகள்,ஒற்றுமையான வாழ்க்கை, திருட்டுப் பயமற்ற நிலை, கட்டுப்பாட்டுடன் கூடிய கண்ணியமான நடைமுறைகள், காலை விடியலின் அன்றாட நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு முதலியன தேர்ந்தெடுத்த சொற்களால் விவரிக்கப் பட்டுள்ளன.
 
இன்றைய தலைமுறை  இழந்த விஷயங்களாகிவிட்டன. தன்னைச் சுற்றி வந்தவள், இலை மறை காய் போல் இதயத்தில் இவர்மீது இருந்த காதலை வெளிப்படுத்தியதாய் விவரிக்கும் வரிகள் பழைய கால திரைப்படக் காட்சிகளைப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன.
 
தன் மனம் விரும்பியவளை விவரித்த விதம், அவளது அழகுருவை அருமையாய் ரசித்த ஒழுங்கு அவர்தம் வீட்டுவாயிலில் நின்று, பின் அவர்களால் அழைக்கப்பட்டு உபசரிப்புக்குள்ளான போதும் உண்மையான உள்ளக்கிடக்கையை விவரிக்க இயலாமல் இருந்த விதம், ஆசீர்வாதம் பெறும்போது தமது அவாவை அசைபோட்டது என்று எல்லாமே ஆற்றொழுக்கோடு அருமையாய் அமைக்கப்பட்டு அன்றைய இளைய தலைமுறை வளர்ந்த விதத்தை  நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.
 
படிப்பு முடிந்தபின் கிடைத்த வேலையில் சேர்ந்து, பின் தன் தகுதிக்கேற்ற வேலையைத் தேட முயலும் நிகழ்வு இன்றைய இளைஞர்களிலிருந்து வேறுபட்டு, அவர்களை நிதர்சனத்திற்குத் தயாராக்கும் நோக்கில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
 
வேலையில் சேர்ந்ததும்,  பெற்றோர்கள் ஏற்ற வயதில் இல்லறத்துணையைத் தேடி மணமுடித்தபோது, அதை மனமுவந்து ஏற்று தமக்கெனப் பிறந்தவள் இவள்தான் எனும் மனப்பக்குவத்தை அடைந்து சீரிய முறையில் இல்லறம் நடத்துவதாய் அமைத்தது மிகச் சிறப்பு.
 
தன்னை விரும்பியவளை, பல வருடங்களுக்குப்பின் சந்திக்க நேர்கையில் அவள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவர் மீது கொண்டிருந்த ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்த விதமும், ஆத்ம திருப்திக்காக அன்றொருநாள் மட்டும் அவள் விரும்பிய சிற்சில பொருட்களை உரிமையோடு தானே வாங்கிக் கொண்டதும், இவர் மனமுவந்து அளித்த முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்ததும், இவரிடத்தில் அவள் கொண்டிருந்த கண்ணியமான காதலை வெளிப்படுத்துவதாய் அமைந்ததும் முதல் தரமானது.
 
தனது மகனின் தேர்வான மருமகளைப்  பார்த்தபோது மனதில் விரிந்த காட்சிப் பிரதிபலிப்பு அற்புதம். அவர்கள் வீட்டிற்குச் சென்றதும், பெண்ணுடைய அம்மாவைப் பார்க்க நேர்கையில் அவள் தன்னால் விரும்பப் பட்டவள் என்று அறிந்தபோது, தான் விரும்பியவள் தன்னையே மறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து   ....... மனம் வருந்தி தாங்கொணாத் துயருற்றதையும், தலை திருப்பி நின்றதையும் தத்ரூபமாய் விளக்கியது தரமானதொரு நடை.
 
தன் மகன் செல்வந்தரான கோபிநாத் அவர்களின் மகளை தான் விரும்புவதையும், ஆனால் அவளின் அம்மாவின் தற்போதைய நிலையை நீக்கி நோக்கினால் ஏற்றுக் கொள்ளவதில் எந்தவொரு தடையும் இருக்கமுடியாதென நியாயப் படுத்தும் விதமாய் உரைக்கும் போது “அவளும் ஒரு காலத்தில் அழகாய் இருந்தவள்தானே!” என தன் மனத்தினுள் இவர் உரைப்பதாய் அமைத்தது மிக அற்புதம்.
 
தான் விரும்பியவளுக்கு தன் மகனை மருமகனாக்கியதில் “இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்ற கூற்றை இரண்டாம் முறையாய் உணர்ந்த விதம் இனிமை. ஈரோட்டுப் பெண்ணையும், சென்னை வாசியையும் தமது இல்லத்தரசியுடன் ஒப்பிட்டு இன்றும் தனது பெற்றோரின் தேர்வு மிகச் சரியாய் அமைந்ததை சிலாகித்த விதம் சிறப்பு.
 
இளைஞனாய் இருந்தபோது தன்னம்பிக்கையுடனும், விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பி ஏற்று இனிய முறையில் இல்லறம் நடத்தியதிலும், தன்னை விரும்பியவளைச் சந்திக்க நேர்ந்தபோது, கண்ணியமாய் நடந்து கொண்ட விதத்திலும், தான் விரும்பியவள் தன்னிலை மறந்த நிலையில் இருப்பினும் அவள் பெண்ணை விரும்பிய  தன் பிள்ளையின் காதலை ஏற்று அதற்குச் சம்மதம் சொல்லும் தந்தையாய் விளங்கும் இடத்திலும் கதாநாயகன் நம் நெஞ்சங்களில் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துவிடுகிறார்.
 
இந்தக் கதை இன்றைய இளைஞர்களிடம் நற்சிந்தனையைத் தூண்டி, தன்னம்பிக்கை, கண்ணியம், காருண்யம், மன உறுதி ஆகியவற்றை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
 
-காரஞ்சன்(சேஷ்)

சனி, 5 ஏப்ரல், 2014

கட்டுரைப்போட்டியில் முதற்பரிசு!



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

திரு ரூபன் அவர்களும் திரு. பாண்டியன் அவர்களும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு


பரிசுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள வலைப்பூ முகவரி:

  
 போட்டியினை ஏற்படு செய்த நல்லிதயங்களுக்கும், நடுவராக சீரிய பணியாற்றிய

1. கவிஞர் திரு. முத்துநிலவன் அவர்களுக்கும்,

வலைப்பக்கம்: வளரும் கவிதை


2.கவிஞர் திரு. இராய. செல்லப்பா அவர்களுக்கும்

வலைப்பக்கம்: http://imayathalaivan.blogspot.in


3. கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கும்

வலைப்பக்கம்: http://vithyasagar.com

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

1. திரு. ரமணி ஐயா அவர்களுக்கும்
வலைப்பக்கம்: http://yaathoramani.blogspot.com

2. திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
வலைப்பக்கம்: http://dindiguldhanabalan.blogspot.com


என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! மிக்க நன்றி!

பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

களிப்பூட்டும் காட்சிப்பிழை! -காரஞ்சன்(சேஷ்)


                                                         களிப்பூட்டும் காட்சிப்பிழை!


உலகில் நிழற்படத்தை

உண்டாக்குபவன் நீ!

அந்தி வேளைகளில்

அலைகடலில் மட்டுமல்ல
அன்புமகளின் கைகளிலும் பந்தாய்!

உன்னை நிழற்படமாக்கி

உள்ளங்கையில் வைத்தது

களிப்பூட்டும் காட்சிப்பிழையோ?

-காரஞ்சன்(சேஷ்)
படம்: காரஞ்சன்(சேஷ்)