ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து தீபாவளித் திருநாளை ஒட்டி நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்(2014 ) வெளியாகி உள்ளன. இதில் என் மனைவிக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
என் மனைவியின் கவிதைகள் இதோ:
ஓவியக் கவிதை:
வண்ண
மலர்ச்சரத்தை
வாடுமுன்னே சூட்டிவிடு!
புத்தாடை உடுத்தி
புன்முறுவல் பூத்து
மன்னவன் பார்த்திடவே
மலர்ந்திங்கு நின்றாயோ?
ஓவியமாய் உனைப்பார்த்துக்
காவியங்கள் படைப்பானோ?
பிடியிடையில் மலர்க்கூடை
உடைக்கேற்ற பூச்சரங்கள்!
காந்தக் கண்ணாலே
கவர்ந்தாயோ மன்னவனை!
சார்ந்து நிற்பவளின்
சஞ்சலங்கள் அறியானோ?
கஞ்சிக்குள் உப்பாக
கலந்திட்ட அவன்நினைவால்
வஞ்சியவள் நெஞ்சத்தில்
கொஞ்சமல்ல கற்பனைகள்!
பூத்த புன்னகையும்
பூவிதழ் தேன்சுவையும்
மேவிய காதலினால்
மென்மேலும் வளராதோ?
நித்திரையில் முத்திரையாய்
நின்றிருக்கும்
மன்னவனே!
வண்ண மலர்ச்சரத்தை
வாடுமுன்னே சூட்டிவிடு!
இரண்டாவது கவிதை:
தழைக்காதோ
தாயகமே!
நாட்டின் உயர்வுக்கு
நாளுமொரு திட்டம்!
வீணர்கள் சிலராலே
விழலுக்கு நீராக!
எங்கே பிழை என்று
ஏங்கிநாம் தவிக்கின்றோம்!
தாங்கிவரும் செய்திகளோ
தலைக்குனிவைத்
தந்திடுதே!
சிறுமியர்க்குக்
கொடுமைகள்!
வறுமையால் தற்கொலைகள்!
கற்பழிப்பு, கொலைகளெலாம்
ஏற்புடைத்தா? எண்ணிடுவோம்!
மதுவுக்கு அடிமையென
மயங்கிக் கிடப்போரின்
குடும்பங்கள் சீரழிந்து
படுந்துயரம் பரிதாபம்!
ஒருதலைக் காதலுக்கு
உடன்படவில்லையெனில்
தெருவழி வரும்போது
திராவகத்தை வீசுவதா?
உள்ளத்தில் தெளிவுடனே
ஒழுக்கமாய் வாழ்ந்திட்டால்
விழுமிய நிலையடைந்து
தழைக்காதோ தாயகமே!-
-----முனைவர். இரா.எழிலி புதுச்சேரி
போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
போட்டியை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு.ரூபன் மற்றும் யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகள். போட்டி சிறப்பாக நடைபெற உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நடுவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
-காரஞ்சன் (சேஷ்)
போட்டியில் பரிசுபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
போட்டியை அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்த திரு.ரூபன் மற்றும் யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகள். போட்டி சிறப்பாக நடைபெற உதவிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நடுவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
-காரஞ்சன் (சேஷ்)
