செவ்வாய், 1 ஜனவரி, 2013

இருளும் ஒளியும்-காரஞ்சன்(சேஷ்)


இருள்  விலக்கும் ஆண்டாய் இருந்திடு புத்தாண்டே!

ஒருபுறம் ஒளியும்
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!
ஒளிவெள்ளம் பெருகிவர
ஒளியாத இருளுண்டோ?

எத்தகைய தடைவரினும்
ஏற்றுநீ எதிர்கொள்வாய்!
 எண்ணையும் திரியும்
இணைந்தெரிந்து இருள்நீக்க
காலத்தே ஏற்றிடு நீ
கல்வியெனும் நல்விளக்கை!

  
உன்போல் அறிவொளிகள்
உலகெங்கும் உதித்திட்டால்
கல்லாமை இருளெங்கும்
சொல்லாமல் அகலாதோ?
-காரஞ்சன்(சேஷ்)    

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை! 

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வருக புத்தாண்டே! வருக! வருக! -காரஞ்சன் (சேஷ்)


அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வருக புத்தாண்டே! வருக! வருக!
 
ஈராறுடன்  இன்னும் ஒன்றிணைந்திட

வருக புத்தாண்டே! வருக! வருக!

மைதி நல்கிடும் ஆண்டென வருக!

ற்றொணாத் துயர்களை அகற்றிட வருக!

ன்சொல் எங்கும் எதிரொலித்திடுக!
 

கைக்குணம் எங்கும் நிறைந்திட

ழவும் தொழிலும் உலகினில் ஓங்கிட

ற்றாய் எங்கும் உவகை பொங்கிட

ங்கும் மங்கலம் என்றும் தங்கிட

ற்றம் அளிக்கும் ஆண்டென வருக!
 

யம் போக்கி அறங்கள் தழைத்திட

ற்றுமை உணர்வு உலகெலாம் உதித்திட

ரணி நின்று வன்முறை ஒழித்திட

ஒளடதம் பெருகி உறுபிணி அகற்றிட

உறுதியும் திறனும் அருள்க புத்தாண்டே!

                                                            - காரஞ்சன் (சேஷ்)

சனி, 29 டிசம்பர், 2012

எச்சம்!-காரஞ்சன்(சேஷ்)


எச்சம்!


காட்டிக் கொடுக்கும்
கறுப்பு ஆடல்ல இது!

காலார ஓய்வெடுக்கும்
கருப்பு ஆடு!

எங்கிருந்தோ பறந்துவந்து

இதன்மேல் ஏன் அமர்ந்தாய்?

சிலையென நினைத்து நீ
சென்றமர்ந்தாயோ?
 
இடங்கொடுத்தவர்மேல்
எச்சமிடாமல்
எழுந்துபற காகமே!

                 -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி:கூகிளுக்கு நன்றி!

வியாழன், 27 டிசம்பர், 2012

அணைத்திட வருவாயோ?- காரஞ்சன்(சேஷ்)


                                                                     அணைத்திட வருவாயோ?

ஆற்றின் கரையினிலே
அந்திப் பொழுதினிலே
சந்தித்த பொழுதுகளென்
சிந்தையில் தோன்றுதடி!
 
வளைந்தோடும் நீர்காட்டும்
வண்ணமிகு வான்நிறத்தை!
கண்ணிரண்டின் நீர்காட்டும்
கவலையுறும் என்னுளத்தை!

சுழித்தோடும் நீர்போல
சுற்றுதடி உன்நினைவு!
பகையாச்சு பொழுதெல்லாம்
பாவை உன் பிரிவாலே!

கழித்திட்ட காலமெலாம்
கனவென வரும்வேளை
விழிக்கிறதே விழியிரண்டும்
விழிக்கையில் நீயின்றி!
 
கோடையில் மழையொருநாள்
குடைக்குள் இருவருமாய்
பிடித்த கதைகளெலாம்
பேசியே நடந்திட்டோம்!
நனைந்தன உடைகளொடு
நம்மிருவர் இதயமுமே!

கூடிடத் துணைதேடி
கூவிடும் குயிலொன்று
இழையோடும் சோகத்தை
இன்னிசையாய் மீட்டுதடி!

மதிற்மேல் படர்ந்தகொடி
மனதினை வாட்டுதடி!
ஏக்கம் எனும்தீயை
என்னுள்ளே மூட்டுதடி!

ஏக்கப் பெருந்தீயை
என்றணைக்க வருவாயோ?

                       -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த கவிதை
 

புதன், 26 டிசம்பர், 2012

இடம்பிடித்தாய்!-காரஞ்சன்(சேஷ்)




      
                                                          இடம்பிடித்தாய்!
வாலாட்டி நன்றிகாட்டும்
வளர்ப்புப் பிராணிக்கு
இடத்தோளில் இடமளித்தாள்!

உள்ளத்தில் இடமுண்டு
உந்தனுக்கு என்றாளோ?

இடம்பிடித்த களிப்பு
இருக்கிறதே அதன்முகத்தில்! 
 
இடமளித்து வலம்வரும் நீ
இடம்பிடித்தாய் என்னுள்ளும்!

-காரஞ்சன்(சேஷ்)
          
பட உதவி: கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு!

வணக்கம் நண்பர்களே!


வலைச்சரத்தில் வரும் 17-12-2012 ( நாளை முதல்) 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க திரு சீனா ஐயா அவர்களின் அழைப்பினை ஏற்று இசைந்துள்ளேன்! என்னைத் தொடர்ந்து இதுநாள் வரையில் பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்தி வரும் உங்கள் அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி தெரிவித்து இந்த வாரத்தில் என் பொறுப்பை சிறப்பாகச் செய்து முடிக்க தங்களின் நல்லாதரவை நல்கிட வேண்டுகிறேன்!
நன்றி!
வலைச்சரத்தில் நாளை முதல் சந்திப்போம்!
வருக!
என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 6 டிசம்பர், 2012

பிடிப்பு!-காரஞ்சன்(சேஷ்)


பிடிப்பு!


பிடித்தார்…
பிடித்ததனால் பிடிக்கின்றார்!
பிடிப்பதனால்
பிடித்தவர்க்கும்
பிடிக்காதவர் ஆகின்றார்!
பிடிப்பவரைப் பிடித்திட்டால்
பிடித்திடுவாரோ இனி?
பிடிப்பதனால்
பீடிக்கும் பிணிகள் பல!
பிடிக்காதீர்- புகை!
 
 




-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!