திங்கள், 31 ஆகஸ்ட், 2020

யானை!

 


யானை!

ஆனை!ஆனை!அழகர் ஆனையென 

மழலைப் பருவத்தில் மனதில் பதிந்தாய்நீ!

அப்பாவும் தாத்தாவும்  ஆனையென தாம்மாறி  

அம்பாரி விளையாட எனைஅமர்த்திடுவார் தம்முதுகில்!


காட்டு விலங்காம் களிறினைக் காணும்

வேட்கை என்னுள் விளைந்தது அன்று!

விழைவை அறிந்ததோ  வேழம் ஒன்று?

கழுத்துமணி யொலிக்க கைம்மா(ன்) வந்தது!

 

தூணெனக் கால்களும், தூக்கியத் துதிக்கையும்

சேம்பின் இலைபோல் செவிகள் அசைய

பெருத்த உருவம் பெற்ற அக்கரிமுகம்

பாகனின் சொல்லுக்கு பணிந்து நடந்தது!


அரிசியொடு வெல்லம் அளித்தனர் பெற்றோர்!

வாரி உண்டு வாழ்த்தியது என்னை!

ஏற்றி அமர்த்தினர் என்னை அதன்மேல்

கதறிநான் பயந்தது காலமெலாம் நினைவில்!

 

இலக்கியங்கள் பலவற்றில் இடமுண்டு யானைக்கும்

சிலவற்றை  மட்டுமிங்கே செப்பிட விழைகின்றேன்!

காற்றில் அலையும் கார்முகில்  கூட்டத்தைக்

களிறுகளின் விளையாட்டாய்க் கண்டனன் காளிதாசன்!

 

 முழக்கம் எழுப்பும்  முகில்களின் மோதலை

வேழங்களின்  போரெனவே விளம்பினான் வால்மீகி!

நிலவின் பிறையென நீண்ட மருப்பால்

புலியையும் வீழ்த்திடும் பலமிகு வேழமும்!

 

உருவில் பெருத்தோர்க்கு உவமையும் யானையே!

பெரும்பசிக்கு  இட்ட பெயரிலும் யானையே!

செருவினில் வெற்றிகளைச் சேர்த்தது யானையே!

முருகனுக்கு மூத்தவனின் முகவடிவும் யானையே!

 

உணர்ச்சிகளில் மனிதனுக்கு ஒத்ததது  யானை!

வாழிடம் செல்லும் வழிமறவாது யானை!

பெருமையும் புனிதமும் நிறைந்த இவ்விலங்கினை

அருகிடாமல் காப்பது அனைவரின்  கடமையன்றோ?


                                                                                                    -காரஞ்சன்(சேஷ்)

6 கருத்துகள்: