செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பல்லுயிர் பாமாலை!


வலைப்பூ அன்பர்களுக்கு வணக்கம்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் என்னுடைய வலைப்பக்கத்தின் மூலம் உங்களை சந்திக்க வருவதில் மகிழ்வடைகிறேன்! என் படைப்புகளைப் பகிர விழைகிறேன்.
படைப்புகள் குறித்து தங்களின் கருத்துரைகளை அறிய ஆவல் கொண்டுள்ளேன்!

புதுவை அரசின் சுற்றுச் சூழல் துறை  நடத்திய கவிதைப் போட்டியில் 
மூன்றாம் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்ட என்னுடைய கவிதையினைப் பகிர்ந்துள்ளேன்.                   

                         பல்லுயிர் பாமாலை!

 

உயிர்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தநிலை

சுழலும் இப்புவியில் சுழற்சியென நிலைப்பதுவே!

 

சுற்றுச் சூழலிலே சுயநலத்தால் மனிதனவன்

மாற்றம் விளைவித்தால் மன்னுயிர்கள் என்னாகும்?

 

நெகிழிப் பயன்பாட்டால் நிலமகளின் நெஞ்சடைத்தோம்!

வான்நீரை அவள்பருக வழியின்றிப் போனதுவே!

 

அடுக்குமாடி குடியிருப்பால் ஆக்கிரமிப்பில் நீர்நிலைகள்!

நீர்வாழ் உயிரினங்கள் வேறெங்கு போய்வாழும்?

 

வனங்களை அழிப்பதனால் வாழிடமின்றி காட்டுயிர்கள்

ஊருக்குள் புகுந்து உண்டாக்கும் பெருஞ்சேதம்!

 

இயற்கைஉரம் தவிர்த்து இடுகின்றார் நஞ்சதனை!

விளைநிலங்கள் கெடுவதுடன் விரைந்தழியும் நல்லுயிர்கள்!

 

மின்மினியும், பொன்வண்டும், கருடனும் பருந்தினமும்

காணக் கிடைக்காத காரணம் இவையன்றோ?

 

வாகனப் பெருக்கத்தால் வான்முட்டும் பேரிரைச்சல்!

கரும்புகை கலப்பதினால் காற்றுவெளி மாசாகும்!

 

ஆலைக் கழிவுகள் நீர்நிலை சேர்வதனால்

ஆழியும் நஞ்சாகி அருகிடுதே கடலுயிர்கள்!

 

உறைந்திருந்த பனிப்பாறை உருகத் தொடங்குவது

காலநிலை மாற்றத்தால் கவலைதரும் நிலையன்றோ?

 

உறைநிலையில் ஒளிந்திருந்த கிருமிகளால் நோய்பலவும்

உருவாக சாத்தியங்கள் உண்டெனெவே அஞ்சிடுவோம்!

 

இயற்கையின் முன்னே எள்ளளவு மனிதரெலாம்!

இயைந்து வாழ்ந்தால் இன்பமுண்டு எந்நாளும்!

 

பல்லுயிர் ஓம்புதலில் பங்கெடுப்போம் மகிழ்வுடனே!

அடுத்தடுத்த தலைமுறைக்கு அளித்திடுவோம் நற்புவியை!

 

                                        -காரஞ்சன்(சேஷ்)


8 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வரியும் சிறப்பு

  மீண்டும் வலைப்பூ வரவிற்கு பாராட்டுகள்...

  பரிசு பெற்றமைக்கும், தொடரவும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிக்கின்றது! மிகவும் நன்றி ஐயா!

   நீக்கு
 2. அற்புதம்...நற்புவியைக் காக்க எழுதிய நற்கவிதை அருமையிலும் அருமை...வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிக்கின்றது! மிகவும் நன்றி

   நீக்கு
 3. ஆஹா... நல்லதொரு கவிதை. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  வலைப்பூவில் மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்ச்சி அளித்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. பரிசுக்கு வாழ்த்துகள். சிறப்பான கவிதை. வலைப்பூவில் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிக்கின்றது! மிகவும் நன்றி

   நீக்கு