ஞாயிறு, 1 ஜூன், 2014

ஏமாற்றாதே! ஏமாறாதே சிறுகதைக்கு என் மனைவியின் விமர்சனம்!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு  எனக்கும் என் மனவிக்கும் முதற் பரிசு கிடைத்துள்ளது. 
 
 

"ஏமாற்றாதே! ஏமாறாதே" கதைக்கான இணைப்பு இதோ:


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


என் மனைவியின் விமர்சனம்!

தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது நம் ஆசிரியரின் தனித்துவம். ஒரு சினிமாப் பாடலை நினைவுறுத்தும் இந்தக் கதையின் தலைப்பு “ஏமாற்றாதே.. ஏமாறாதே”.

தாரணமாக ஒரு சிறிய நடைபாதைக் கடை. ஒரு கிழவி கடைவிரிக்கும் விதம், அவளுடைய மன ஓட்டம், தளர்வான வயோதிக நிலை, அதனால் முன்பு போல் அதிக தேங்காய்களைக் கொண்டுவர இயலாமை, அதனால் வருமானக் குறைவு, ஆனாலும் அத்தகு சூழலிலும் “தன் கையே தனக்குதவி” என்று தன்னால் இயன்றதை உழைத்துப் பெறும் உறுதியான மனநிலை இத்தனையையும் கண்முன்னே நிறுத்தி வேலையில்லா வாலிப நெஞ்சங்களுக்கு ஓர் படிப்பினையை அறிவுறுத்தும் முதல் படி முதல் பகுதி. உழைப்பே உயர்வு என்பது உண்மையன்றோ? அது நன்மையன்றோ?

தேங்காய் விலை கேட்பவரிடம் விலையைச் சொல்லி, எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, தான் சற்று விலையைக் குறைத்துக் கொடுப்பதாகவும், இன்முகத்துடன் உரைத்து, பின் அடிமாட்டு விலைக்குப் பேரம் கேட்கப் படும்போது, கட்டுப்படி ஆகாது எனக் கூறுவதும், அழகாய் அந்த மூதாட்டியின் உள்ளக்கிடக்கையை, நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணர்த்துகிறது.

எப்படித்தான் ஆசிரியரின் ஒரு சாதாரண மனிதனின் ஒவ்வொரு செயலையும், உணர்வையும் தனிமனித நியாயங்களையும் அருகிருந்து பார்த்தது போல் அழகாய்க் கோர்வையாய் படம்பிடித்துக் காட்டமுடிகிறதோ? வியப்பில் விரிகின்றன விழிகள்.

ஒரு பெரிய ஷாப்பிங் மாலிலோ அல்லது நிறுவனங்களிலோ பொருள் வாங்க நேர்கையில், தம்மைக் கவுரவக் குறைவாய் மதிப்பிட்டு விடுவார்களோ என்ற போலியான முகத்திரை கிழிபடாமல் இருக்கும்படி, அவர்கள் சொன்ன விலைகொடுத்து, ஒரு பைசா கூட பேரம் பேச முடியாமல் பொருட்களை வாங்கி வரும் நபர்கள் குறித்து வருணித்த விதம் அற்புதம் என்று சிலாகிக்க வைக்கிறது.

அதேசமயம், நடைபாதைக் கடை வயோதிக வியாபாரிகளோ அல்லது வாலிப வயதினரோ, யாராய் இருந்தாலும் அவர்களிடம் பேரம் பேசத் துணிவதும், என்னதான் அவர்களின் வறுமையும் வாழ்வியலும், இந்த வியாபாரம் ஒன்றே அவர்களின் வாழ்வாதாரம் என்ற நிதர்சன உண்மை தெரிந்திருந்தாலும், நமது கதாநாயகன் போன்றவர்களின் அல்பத்தனமான சிந்தனை நம்மைத் தலைகுனிய வைக்கிறது.

 ஓரிரண்டு ரூபாய் அதிகமாய்க் கொடுத்து, நடைபாதைக் கடையினரிடம் பொருள் வாங்கும்போது அவர்கள் அடையும் ஆனந்தமே அலாதி! அவர்கள் பரிவாய், பாசமாய் அள்ளித் தரும் காயோ அல்லது பொருளோ நமக்குக் கண்டிப்பாய் ஒரு உன்னதமான செயலைச் செய்த உணர்வை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்த ஆனந்தத்தை (அணில் அணை கட்ட உதவிய விதமாய்) அளிக்கும் என்ற உண்மையை உணர்த்த முயன்ற ஆசிரியரின் முயற்சி மிகுந்த பலனளிக்கும் என்பதும், அவரது ஆதங்கத்தின் வெளிப்பாடு, இனி நடைபாதைக் கடையில் பொருள் வாங்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நிமிடமாவது யோசித்துச் செயல்படக்கூடிய ஒரு படிப்பினையை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆசிரியரின் ஒவ்வொரு கதையும் அவரைப்பற்றி அவரது சுருக்கமான விமர்சனமான “சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன்” என்பது உண்மைதான் என்பதை ஆணித்தரமாய் நிரூபிக்கிறது.

ஒருவழியாய்த் தேங்காய்களைத் தட்டிப் பார்த்து, முற்றியதாய் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்து கொள்முதல் செய்பவரின் செயல்களைப் படம் பிடித்துக் காட்டியது அருமை. தேங்காய் வாங்குவதிலும் விலையைக் குறைத்ததோடு, ஒரு தேங்காயை லவட்டிக்கொண்டு ஆனந்தப்பட்டதும் ஏனோ மனதைப் பிசையும்படி அமைக்கப்பட்டுள்ளது. “To top it all off”  என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடைபோல் முதலிலேயே (15 ஆண்டுகளுக்கு முன்பே) இந்தப் பிரார்த்தனைக்கான தேங்காயை வாங்கி, நிறைவேறியிருந்தால் 12 ரூபாயில் அடங்கிவிட்டிருக்குமே என்று கதாநாயகன் எண்ணிய விதம் அவரது அற்பமான மனநிலையை வெளிக்காடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் “போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே! அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து இந்த பூமியைக் கெடுத்தானே ” என்ற பாடல் வரிகளும், “மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது” என்ற பாடல்வரிகளை நினைவூட்ட சிந்தனை விரிந்ததுவோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒரு வழியாக, கிழவியை ஏமாற்றிய வெற்றிக்களிப்போடு வீறு நடை போட்டு, எல்லாப் பிள்ளையார்களுக்கும் விக்னமின்றி சூரைக்காய் விட்டபின் மகிழ்வுடன் இல்லத்திற்குச் சென்று நிம்மதிப் பெருமூச்சும், பூரிப்புமாய் நிற்கும்போது, உணவு பரிமாறத் தயாராய் இருந்த மனைவி, திருடிய தேங்காயை ( அது திருடியது என அறியாமல்) அவரிடமிருந்து வாங்கி, இலேசாகப் பிளந்து, இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அவரிடம் அருந்தக் கொடுத்துவிட்டு, தேங்காயை உடைத்தவுடன் அது அழுகியிருப்பதைக் கண்டு, பார்த்து வாங்கியிருக்கக் கூடாதா? மற்ற தேங்காய்கள் எல்லாம் நன்றாக இருந்ததா? என வினா எழுப்பிய வினாடியில் தன் வாயில் ஊற்றிய இளநீரை வாஷ்பேசினுக்கு ஓடிச்சென்று துப்பியதும், உடைத்த தேங்காய் மூடியை உற்று நோக்கும்போது அதில் அந்த கிழவியின் முகம் தெரிவதாகக் காட்டியதும் மிகவும் பிரமாதம் என எண்ண வைக்கிறது.
“தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் வாக்கு எத்தனை உண்மை! “தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்” என்ற வரிகள் நம் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.

தான் பிரார்த்தனை நிறைவேற்றிய அத்தனை பிள்ளையார்களும் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியது போல் கதையை அமைத்ததும், “நமக்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த இறைவனடா” என்ற பாடல் வரிகளை நினைவூட்டுகிறது.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது முதுமொழி. நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அறிவியல் வழிநின்று பார்த்தால் “ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை ஒன்று உண்டு” என்பது உண்மை எனப் புலப்படும். எனவே “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று வள்ளுவம் விளித்த பொயா மொழிகள் எத்தனை உண்மை!.

இத்தனை சிறிய கதையில் இரண்டு மூன்று கதாபாத்திர படைப்புக்குள்ளேயே இன்றைய சூழல், மனிதர்களின் மனப்பாங்கு, சூழ்நிலைகளில் அவர்களின் மனக்கணக்குகள் அத்தனையும் அடிக்கோடிட்டுக் காட்டி, தீய எண்ணங்களைக் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அவ்வாறு செய்யின், ஒவ்வொருவரும் பேருவகையை அடையலாம் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளார். ஆசிரியரின் அவா இனியாவது விளையட்டும்.

இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம். ஏழை எளிய வியாபாரிகளுக்கு இயன்றவரை வியாபாரத்தில் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாய் நிற்போம். ஆசிரியரின் எளிமையான, வலிமையான கதைக்கு எளியவளின் விமர்சனத்தை ஏற்றிடுவீர்!  நன்றி! 

-இரா. எழிலி


சிறுகதை விமர்சனப் போட்டியில் முதற்பரிசு! -காரஞ்சன்(சேஷ்)

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு  எனக்கும் என் மனவிக்கும் முதற் பரிசு கிடைத்துள்ளது. 
 
 

"ஏமாற்றாதே! ஏமாறாதே" கதைக்கான இணைப்பு இதோ:


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


கதையின் தலைப்பே யாரோ ஒருவர், யாரையோ ஏமாற்றியதால் ஏமாந்து போனாரோ? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி, வாசிக்க ஈர்க்கிறது.


என்னுடைய விமர்சனம்!

கதாசிரியர், தான் வலியுறுத்த எண்ணிய கருத்தை, நீதியை எளிய கதாபாத்திரங்களின் துணையோடு, மிகவும் வலிமையாகவும், உறுதியாகவும் வாசகர் அனைவரின் உள்ளத்திலும் “பசுமரத்து ஆணியாய்”ப் பதிய வைப்பதில் வெற்றி கண்டு விடுகிறார்.

இந்தக் கதையை, படக்கதையாக்கி, தொடக்கக் கல்வி மாணாக்கர்களுக்குப் பாடமாக வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.


பிஞ்சுக் குழந்தைகளின் கையில் கிடைக்கக் கூடாத பொருட்களை அவர்கள் எடுக்க முற்படும்போது,  பெற்றோர்கள் அதை மறைத்து வைத்துவிட்டு, “எங்கே காணோம், காக்கா தூக்கிக் கொண்டு சென்றுவிட்டது” என  உரைப்பதில் ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுதல்.

 
நாம் சிறுவர்களாக இருந்த நாட்களில் காக்காய் நரியிடம் வடை இழந்த கதையிலும், பாட்டி சுட்ட வடையை காக்காய் தூக்கிச் செல்வதும், நரி காக்காயை ஏமாற்றி வடையை எடுத்துக் கொள்வதாகவும் படித்துள்ளோம். ஏமாற்றுவது எப்படி என்பதும் சிறுவயதில் நம்மையறியாமலேயே நம்முள் விதைக்கப்பட்டதோ? எனும் எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

 
“உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல் “ –இது வள்ளுவர் வாக்கு.


திருட்டு என்பது பிறருடைய பொருளை அவருக்குத் தெரியாமல் மற்றொருவர் எடுத்துக் கொள்வது ஆகும். ஊழல், பிறர் சொத்தை அபகரித்தல், ஏமாற்றுதல், வஞ்சகம், திருட்டு இவையெல்லாம் தீய செயல்கள். இவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

இதையே வள்ளுவர்

“தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்..” என்று எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த உண்மைகளை, நீதியை, நம் உள்ளங்களில் பதிய வைக்க எழுதிய படைப்பு இது!

இன்றைய உலகில்   பலராலும் பலர் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி விடுகிறது.   மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை ஏமாற்று வேலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் எடுத்துரைக்கத்  தவறவில்லை.


பாத்திரப் படைப்பில் வெற்றி!

1.தேங்காய் விற்கும் கிழவி.

எளியவளாக, உழைத்துப் பிழைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, தள்ளாத வயதிலும், தளரா மனத்துடன் இயன்ற அளவு உழைத்து உண்பவராக, காலையில், சாலையோரத்தில் கடை விரிக்கும் பாட்டி நம் கண்முன் விரிகிறாள்.. தேங்காய் வியாபாரம் செய்யும் கிழவியின் வயோதிகத் தோற்றம், நீண்ட நாட்களாக அவள் உழைத்துப் பிழைப்பவள் என உணர்த்தும்  வகையில் 150 காய்களைச் சுமந்தவளால் தற்போது 50 காய்களை மட்டுமே சுமக்க முடிவதாகக் கூறியதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத் தக்கது.  சைஸ் வாரியாகத் தேங்காய்களை அடுக்கி அதற்கேற்றாற்போல் விற்பனை செய்யும் விலையை நிர்ணயிப்பது வரை அழகான படத்துடன், அருமையாக அருகிலிருந்து பார்த்தது போல் விளக்குகிறார்.


மேலும் அவள் மீது அனுதாபத்தைத் தூண்டும் விதமாக, அவள் வியாபாரத்தில் மனக்கணக்குப் போட முடியாமல் தடுமாறுவதும், பார்வைக் குறைபாட்டால் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கிடையில் வேறுபாட்டை அறிய முடியாமல் தவிப்பதாகவும் கண்பித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.

ஒரு தேங்காயை விற்றால் அவளுக்குக் கிடைப்பது மிகவும் சொற்பமான இலாபமே. அதுவும் பேரம் பேசுபவர்களின் திறமையைப் பொறுத்து மாறுபடும். இதில் தவறாகக் கணக்கு போட்டுவிட்டாலோ அல்லது தவறாகச் சில்லரை கொடுக்க நேர்ந்தாலோ பாட்டிக்கு மிகவும் நஷ்டம்தானே?

 
இந்த இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், சென்னையில் நடைபாதைக் கடையில் பூவியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர் ஒரு வார இதழுக்கு அளித்திருந்த பேட்டி நினைவுக்கு வருகிறது. இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் அறியாமல் அவசரத்தில் கொடுத்துவிடுவதால் நஷ்டமடைய நேர்வதாக அந்த மூதாட்டி சாடியிருந்தார். இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அழுக்கு நோட்டுகள், செல்லாத நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நோட்டுகளாகப் பார்த்து, இது போன்றவரிடம் ஏமாற்றித் தள்ளிவிட்டு ஏதோ உலக சாதனை ஒன்றைச் செய்து முடித்தது போல் எண்ணி அல்ப சந்தோஷம் அடைவார்கள்.

கிழவி வாங்கி வரும் காய்கள் அனைத்துமே நல்ல காய்களாக இருந்துவிட்டால் நன்று. இல்லாவிட்டால் அதன் மூலம் அவளுக்குச் சற்று நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.

இப்படி ஒரு கிழவியைக் கண்முன் நிறுத்தி, அவர்படும் துயரம்தனை விளக்கி, அந்நிலையிலும் உழைத்துப் பிழைப்பதில் உறுதியானவர் என்பதை வலியுறுத்தி அந்தப் பாத்திரத்திற்கு அனைவரின் நெஞ்சிலும் ஓர் உயர்வான எண்ணத்தையும், அனுதாபத்தையும் உண்டாக்குவதில் வெற்றி பெற்று விடுகிறார்.  

 
அடுத்த பாத்திரமாக

தேங்காய் வாங்க வரும் நம் கதையின் நாயகன், 15 வருடங்களுக்கு முன் வேண்டிக்கொண்ட, தன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தேங்காய்க் கடை விரித்துள்ள கிழவியிடம் வருவதும், தட்டிப் பார்த்து, நல்ல காய்களாகப் பார்த்து 12 காய்களாகத் தேர்ந்தெடுத்து, அல்பத்தனமாக ஒன்றைக் கிழவி அறியாமல் சுட்டுக்கொண்டு, அடிமாட்டு விலைக்குப் பேரம் பேசி, 78 ரூபாயைக் கொடுத்துச் செல்வதில் நம் அனைவரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார்.

குமரகுருபரரின் நீதிநெறிவிளக்கத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல்,

 ““தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று” இவர் அகமகிழ்ந்து, கிழவியிடம் அடிமாட்டு விலைக்கு பேரம் பேசாமல், பொருளுக்கேற்ற உரிய விலையைக் கொடுத்து வாங்கி அவரின் உழைப்புக்கு மதிப்பளித்திருக்க வேண்டாமா?

எல்லாவற்றிற்கும் மேலாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை அப்போதே நிறைவேற்றியிருந்தால் எவ்வளவு மிச்சமாகி இருக்கும்? இப்போது இவ்வளவு செலவு செய்ய நேர்ந்ததே (அதுவும் சுட்டுக் கொண்ட காயின் மதிப்பைக் கழித்து) என கணக்குப் பார்ப்பதில் அவரது அற்பமான மனநிலை வெளிப்படுத்தப் படுகிறது.

 
உண்மையான, தூய்மையான பக்தியுடன், ஒரு சிறிய பூவை அர்ப்பணித்தாலும் இறைவன் அதை அகமகிழ்ந்து ஏற்கும் இயல்புடையவன் அல்லவா?. இதுபோன்று பிறரை ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்படுபவர்கள், நிறைவேற்றும் பிரார்த்தனை எப்படி உகந்ததாக அமையும் என்ற கருத்தை நம் அனைவருள்ளும் பதிய வைப்பதிலும், கதாநாயகன் மீது எரிச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதிலும் கதாசிரியர் அடுத்த வெற்றியை அடைந்துவிடுகிறார்.

 
சமுதாயத்தில் இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களைச் சாடும் விதமாக இவர் எடுத்துவைக்கும் கருத்துகள் அத்தனையும் நன்முத்துக்கள்.

 
இதுபோன்ற டிப்டாப் ஆசாமிகள்

  Ø மலிவான விலையில் தரமான பொருளை நேர்மையாக விற்கும் இது போன்ற ஏழை வியாபாரிகளிடம்தான் இவர்களின் பாச்சா பலிக்கும். அதுமட்டுமின்றி அல்பத்தனமாக, ஏதாவது ஒன்றைக் கடத்தி வந்து விடுவார்கள்.

   Ø பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் நாம் வாங்கும் காய்கறிகளையோ, பழங்களையோ பொன்போல் நிறுத்து, ஒவ்வொரு கிராமுக்கும் உரிய விலையுடன், விற்பனைவரி, சேவை வரி முதலியவற்றைச் சேர்த்து வாங்கும் இடங்களில் தப்பித்தவறி பேரம் பேச நினைத்தாலும் பட்டிக்காட்டான் என்ற பரிகாசத்திற்கு ஆளாக நேருமே என்ற எண்ணத்தால், பயத்தால் வாய்மூடி மெளனியாக இருந்துவிடுகிறார்கள்.

  Ø “கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்” என்றுணர்ந்த காலத்தில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களிலும் இவர்கள் செய்கை எடுபடாமல் போய்விடுகின்றது.


மேற்கண்ட நிகழ்வுகளைச் சாடி, அதற்கான தீர்வைத் தருவதிலும் தனித்து நிற்கிறார் கதாசிரியர்.

ü பார்க்க மனதிற்கு நிறைவாகவும், காய்கறிகள் பச்சைப்பசேல் என்று ஃப்ரெஷ் ஆகவும் இருந்து, சரியான எடையும் போட்டுக் கொடுக்கும் வியாபாரிகளிடம், அவர்கள் சொல்லும் விலை ஓரளவு நியாயமாக இருப்பின், அநாவஸ்யமாக பேரம் பேசுவதில் அர்த்தமே இல்லை. 

ü அப்படிப்பட்ட வியாபாரிகள் கூட இப்போதெல்லாம் தங்களுக்குள் சங்கம் அமைத்துக்கொண்டு ’ஒரே விலை - கறார் விலை’ என்று சொல்லி மிகவும் உஷாராகி வருகின்றார்கள்.  (இதில் ஆசிரியரின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது)

ü ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் முன்னபின்ன சொன்னால் தான் என்ன; நாமும் கொடுத்தால் தான் என்ன; குறைஞ்சாப்போய் விடுவோம்? பிறர் வயிற்றில் அடிக்காமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி வந்தால் அதன் ருசியே தனியாக இருக்குமே! பேரம் பேசி விலையைக் குறைக்காமல், அவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்த நமக்கு காய்கறிகளை, மனதார வாழ்த்தியல்லவா கொடுத்திருப்பார் .... அந்த வியாபாரியும். 

டிப்டாப் ஆசாமிகளுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து அறிவுரைகளையும் வழங்கிய கதாசிரியருக்கு ஒரு “ஓஹோ” போடலாம்.


 
 தன் தவறை உணர்ந்து வருந்தும் நாயகன்!

சதிர் தேங்காய் பொறுக்கும் சிறுவர்களுடன் சென்று 12 காய்களையும் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு , திருடிக்கொண்டு வந்த 13வது காயுடன் வீடு திரும்பிய கணவனுக்கு, அவர் மனைவி அந்தத் தேங்காயை நன்றாக அலம்பி விட்டு, நாரையும் உரித்து விட்டு, அரிவாளால் லேஸாக ஒரு போடு போட்டு, தேங்காயின் இளநீரை கீழே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய பாத்திரத்தில் பொறுமையாகப் பிடித்து, வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்துள்ளாரே எனக் குடிக்கக் கொடுத்து விட்டு, சமையல் அறைக்கு வந்து தேங்காயை அரிவாளால் மீண்டும் ஒரு போடு ஓங்கிப் போட்டு உடைக்கையில் ”என்னங்க இது; இந்தத்தேங்காய் அழுகலாக உள்ளதே! பார்த்து வாங்கியிருக்கக்கூடாது! ஸ்வாமிக்கு உடைத்ததெல்லாமாவது நன்றாக இருந்ததா?” என்று கேட்டவாறே அந்த அழுகின தேங்காயைத் தன் கணவனிடம் காண்பிக்கிறாள்.

மனைவி உரைத்தது உறைத்ததோ நாயகனுக்கு?

நம் கதாநாயகன் “மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாத நிலையடைந்து வாயிலிருந்த இளநீரை வாஷ்பேஸினில் துப்பிவிட்டு, சாமிக்கு உடைத்த காய்கள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று கூறி திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையை அடைகிறார். அழுகிய தேங்காய் மூடியில் அந்தக் கிழவியின் முகம் தெரிவதாகச் சித்தரித்தது மிக அருமை. தன்நெஞ்சே தன்னைச் சுட்டிருக்கும் அல்லவா. ஏளனமாகச் சிரித்தது அனைத்துப் பிள்ளையார்கள் மட்டும் அல்ல. நாமும் தான்.

இப்படி முடித்ததில் ஆசிரியர் தன் படைப்புத் திறனை  மீண்டும் நிலைநாட்டுகிறார்.

 இப்படி முடித்திருந்தால்…(என் தாழ்வான கருத்து)

அழுகிய தேங்காயில் அந்தக் கிழவி முகம் தெரிந்ததும், நம் கதாநாயகன் அந்தக் கிழவியிடம் அன்றோ அல்லது மறுநாளோ சென்று தான் செய்த களவுக்குப் பரிகாரமாக, “பாட்டி நேற்று என் வேண்டுதலை நிறைவேற்ற வாங்கிச் சென்ற 12 காய்களும் அருமை. சற்று விலைகுறைத்து வாங்கி விட்டேன் . அதற்காக வருந்துகிறேன் என்று கூறிவிட்டு, ஒரு 10 ரூபாயாவது வைத்துக்கொள்ளுமாறு அளித்திருந்தால் கதாநாயகருக்கு மன ஆறுதல் கிடைத்திருக்கும். நமக்கும் அவர்மீது எரிச்சல் சற்றுக் குறைந்திருக்கும்.

அல்லது

ஒருவேளை அந்தக்கிழவி அதை ஏற்க மறுத்து, தேடி வந்து பாராட்டியதற்கு நன்றி கூறி ஆசீர்வதிப்பதாக அமைத்திருந்தால், நம் அனைவரின் உள்ளத்திலும், இன்னும் உயர்வான நிலையில் நீங்கா இடம்பிடித்த பாத்திரமாக மாறியிருப்பார் என்பது என் தாழ்வான கருத்து.

மொத்தத்தில், கதைக்கான கரு, அதற்கேற்ற பாத்திரப் படைப்புகள், கோர்வையான நடை, இடையிடையே தவறான செயல்களுக்குத் தீர்வுகள் என அனைத்தும் நிறைந்த தரமான ஒரு சிறுகதையைப் படைத்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

வெள்ளி, 30 மே, 2014

களிப்பூட்டும் விளையாட்டு! -காரஞ்சன்(சேஷ்)




களிப்பூட்டும் விளையாட்டில் கவலை மறந்திடலாம்!
வெளிப்படும் உன் திறத்தால் விண்முட்டும் புகழ்பெறலாம்!              
உளிபட்ட கல்லில்தான் உயிர்சிற்பம் உருவாகும்!
தோல்வி அடைந்தாலும் துவளாமல் முயன்றிடு!              
தாளாத் துயரினை தாங்கிடும் திறன் வரும்!
ஒளிந்து விளையாடு! ஒளிக்காதே பிறர்பொருளை!
அளித்து மகிழ்தலில் ஆனந்தம் என்றுணர்வாய்!
பள்ளிப்படிப்போடு வாழ்க்கைப் பாடமும் கற்றிடுவாய்!

  --காரஞ்சன்  (சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!          

புதன், 28 மே, 2014

ஓடிவிளையாடு! -காரஞ்சன்(சேஷ்)

 
        ஓடிவிளையாடு!


புத்தகச் சுமைக்குள்ளே 
புதைந்து மூழ்காமல்,
ஒத்த சிறுவருடன் 
ஓடியாடி விளையாடு!

கத்தும் கடலையும், 
கால்வருடும் அலைகளையும்,
வித்திட்டு விளைகின்ற 
வெவ்வேறு பயிர்களையும்,  
            
எத்தனையோ வண்ணத்தில் 
எழில்கொஞ்சும் மலர்களையும்,
உதிக்கின்ற கதிரையும், 
உவந்து பாடும் குயிலையும்,

சத்தமின்றி தேன் உறிஞ்சும், 
வண்டினங்கள் வாழ்வினையும்,
நித்தமும் பார்த்து மகிழ்! 
நீ கற்பாய் ஏராளம்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 25 மே, 2014

ஜாதிப்பூ- சிறுகதைக்கான விமர்சனத்திற்குப் பரிசு!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஜாதிப்பூ" கதையின் விமர்சனத்திற்கு எனக்கும்
என் மனவிக்கும் பரிசு கிடைத்துள்ளது. 
 
சரிசமமாகப் பரிசு பெறும் ஆறு பேர்களில் நாங்கள்இருவரும் இடம்பெற்றுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

 
வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


"ஜாதிப்பூ" கதைக்கான இணைப்பு:

பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-3-of-3.html



என் மனைவி எழிலியின் விமர்சனம் இதோ ....


கோயில் வாசலில் கதை தொடங்குகிறது. பூ வியாபரம் செய்யும் பாட்டி, அவளுக்குப் போட்டியாக ஒரு பருவவயதுப் பெண் புதுவரவு என அருமையான காட்சி கண்முன் விரிகிறது. “பூக்களை விட அந்த பூக்காரி நல்ல அழகு” என்று  உரைப்பதிலேயே அவள் அழகைக் கண்முன் நிறுத்தி விடுகிறார். அதற்கேற்ப படங்களும் மிக அழகு!. கடைக்கண் பார்வைக்குக் காத்திருக்கும் இளைஞர்கள் பாழும் நெற்றியில் திருநீற்றுப் பட்டை அணிவதாகக் காட்டியது அருமை! யதார்த்தமும் கூட!

பருவமங்கையோ படு சுட்டி. வியாபாரத்தில் கெட்டி! அவளின் சாதுர்யத்தால் பூக்களை சீக்கிரம் விற்றுத் தீர்ப்பதும், பாட்டியின் வியாபாரம் படுத்துப் போவதாகக் காண்பித்ததும் போட்டியான புதுவரவு யார்? ஏன்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பிச் செல்கிறது. என் பிழைப்பைக் கெடுக்க வந்தது போல் இருக்கிறது என பாட்டி சொல்வது நம் எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.

பூக்களை விற்றுத்தீர்த்ததும், பாட்டியைப் பார்த்து கண்சிமிட்டி “வரட்டுமா பாட்டி?”எனக் கூறி அந்தப் பெண் செல்வதாய்ச் சித்தரிக்கும்போதும், பார்த்து ஜாக்கிரதையாய்ச் செல்லும்படி பாட்டி சொல்வதாகக் குறிப்பிடும்போதும் கதையில் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருக்குமோ என்ற எண்ண மாற்றம் ஏற்படுகிறது.
இனி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்தான் அவள் வருவாள் என பாட்டி கூறியதும், அவளை இனிமேல் செவ்வாய், வெள்ளிகளில் கூட வரவேண்டாம் எனக் கூறிவிடுமாறு ஒரு இளைஞன் (நம் கதையின் நாயகன் உரிமையுடன் குறிப்பிடுவதாக) அறிமுகமாகிறார். நாயகனுக்கு அவளைப் பலரும் மொய்ப்பது போல் சூழ்வது பிடிக்கவில்லை என்று காண்பித்து அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்த்திவிடுகிரார்.,
பாட்டிக்கும் அவனுக்கும் என்ன உறவு? எனும் கேள்வியை நம்முள் எழுப்பி, அதற்கான விடையைத் தந்தது இன்னும் சிறப்பு. பாட்டி அவனைப் “பேராண்டி” என உரிமையாக அழைப்பதும், அவ்விளைஞன் தன் சிறுவயது முதல், படிப்பை முடித்து வேலையில் சேர்ந்துள்ளவரை, அனைத்து நிகழ்வுகளையும் பாட்டியிடம் ஒளிவு மறைவின்றிப் பகிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஒரு ஒட்டுறவு இருப்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.
  
சிறுவயதில் அவனுக்கு அனைத்துப் பூக்களையும் அறிமுகம் செய்து வைத்த பாட்டியிடம், “பூக்களிலுமா ஜாதிப்பூ என்று ஒரு ஜாதி தனியாக இருக்காப்பாட்டி?” என்று கேட்பதாக அமைத்து, அதன் மூலம், அவன் மிகவும் புத்திசாலி, விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ற பண்பாளன் எனப் பாத்திரத்தை மெருகேற்றிவிடுகிறார்.

மேலும் உடல்நலம் குன்றியிருந்த பாட்டியை ஒருநாள் மழையில் நனையாமல் காத்து, அவளது உறைவிடத்தில் கொண்டு சேர்த்ததாக அமைத்து அவன் இரக்ககுணமும், முதியோரிடத்தில் பற்றும், பொறுப்புணர்வும் கொண்டவன் என்பதை உணர்த்திவிடுகிறார்.

புத்தம்புது வரவான அந்த ஜாதிப்பூவை விரும்பி மாலையிட்டு மணமுடிக்க எண்ணி, பாட்டியிடம் அந்த எண்ணத்தைப் பக்குவமாய்ப் பகிர்ந்துகொண்டவிதம் அருமை. அவ்வேளையில் ஆலய மணி ஒலித்திட, அதை நல்ல சகுனமாய் பாட்டியும் அவனும் நினைத்து மகிழ்வதிலிருந்து, இறைநம்பிக்கை மிகுந்த அவர்கள் இருவரும் நிச்சயம் அவ்வெண்ணம் ஈடேறும் என நம்பிக்கை கொண்டதில் வியப்பில்லை.

பாட்டியிடம் ஆசிர்வாதம் கேட்கும்போது, கதையின் திருப்பம் விளைகிறது. வெளியூரிலிருந்து வந்த தன் பேத்தி ஒருவாரத்திற்கு அவளுடனேயே பூ வியாபாரம் செய்யப் போவதாகவும், ஆனால் தான் யார் என்பதை யாருக்கும் சொல்லிவிடக்கூடாது என வாக்குறுதி பெற்றுக்கொண்டதால் தன் பேத்திதான் அவள் என்பதை அவனிடம் கூற இயலாமல் தவிக்கையில் அவள் கொடுக்கும் வாக்கை நிச்சயம் காப்பாற்றுவாள் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என ஆசீர்வதிக்கையில் பாட்டியின் மனதில் பேராண்டியை மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு செய்தது வெளிப்படுகிறது. கோயிலில் மங்கல் இசை முழங்குவதாகக் காட்டி கதைக்கு சுபமான முடிவுதான் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அதற்கேற்ப மணமாலை படங்களையும் இணைத்து அருமையாக முடித்துள்ளார்.

மொத்தத்தில் “ஜாதிப்பூ” நறுமணம் கமழும் பூ தான். ஜாதிப்பூவை கையோடு கைசேர்த்து சூடிப்பார்க்கும் நேரம் விரைவில் நெருங்கட்டும். பூமாலைகள் அவர்களின் தோள்சேரட்டும்!. நல்லுளங்கள் இணைந்து பாட்டிக்கு தம் நன்றிகளைச் செலுத்தட்டும்!
எளிய குடும்பத்தில் ஏற்படும் காதலை சித்தரிக்கும் விதம் அருமை! பருவப்பெண், பாட்டிக்குப் பழக்கமான இளைஞன், பூ விற்கும் பாட்டி  என எளிமையான, எதார்த்தமான பாத்திரங்களைத் தெரிவு செய்து, நல்லுளங்களாய் அவர்களைக் காட்டி, நல்ல முடிவைத் தந்த கதாசிரியருக்கு ஒரு சபாஷ் சொல்லத் தோன்றுகிறது. நன்றி!


என்னுடைய விமர்சனம்:

ஆலய வாசலில் அறிமுகம் ஒரு பருவப்பூ!
பருவமங்கையின் தோற்றத்தில் வனப்பு!
அமர்க்களமாய் ஆசிரியரின்  வர்ணிப்பு!
அதற்கேற்ப அனைத்துப் படங்களும் சிறப்பு!
 
இளைஞர்க்கு அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு!
பலாப்பழம் நாடும் ஈக்கள்போல் மொய்ப்பு!
கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரிப்பு!
பூக்காரப் பாட்டியின் வியாபாரம் குறைப்பு!
பாழும் நெற்றிகளில் திருநீறும் அதன் பாதிப்பு!
 
மங்கையின் திறனால், பூக்கள் விரைவில்விற்றுத்தீர்ப்பு!
பாட்டிக்குப் பொறாமை இல்லாதது கதையில் பிடிப்பு!
பலர் வந்து அப்பெண்பற்றி பாட்டியிடம் விசாரிப்பு!
யாரென்று அறியேனென பாட்டியின் பதிலிறுப்பு!
செவ்வாய் வெள்ளி இனி வருவாள் என உரைப்பு!
கேட்டதும் ஓர் இளைஞனின் பதைப்பு!
அவளைப் பலரும் சூழ்வதில்  வெறுப்பு!
அவளை  வாராதிருக்க பாட்டி மூலம் கண்டிப்பு!
 
 அறியாப் பருவம் முதல் அவனைஅறிந்ததால்
“பேராண்டி” என அன்புடன்அழைப்பு!
பக்தியில் அவனுக்கோ மிகவும் விருப்பு!
அன்றாடம் ஆலயம் வருவதில் லயிப்பு!
உழைத்துப் பிழைப்பதில் பாட்டியின் பிடிப்பு
உண்டாக்கியது நாயகனுக்கு அவள்மேல் விருப்பு!
பாட்டியின் நலனில் அவனுக்குப் பொறுப்பு!
மழையில் நனையாமல் காத்தது சிறப்பு!
பட்டியல் நீளும் பூக்களின் தொகுப்பு
சிறுவயதில் அவனுள்ளே பாட்டியின் விதைப்பு!
பூக்களிலும் ஜாதியுண்டோ? கேள்வியின் தொடுப்பு!
கேட்டதும் பாட்டி அடைந்தாள் மலைப்பு!
பாட்டிக்கு அவன் திறனில் மதிப்பு!

வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் உரைப்பு!
ஏதும்  அதிலில்லை ஒளிப்பு, மறைப்பு!
இருவருக்கும் இது அன்றாட நடப்பு!

 
ஜாதிப்பூவை மணந்திட விருப்பு!
பாட்டியிடம் அதை உரைப்பதும் சிறப்பு!
ஆலய மணியும் அவ்வேளையில் ஒலிப்பு!
அதனால் அவனுள் விளைந்தது களிப்பு!
 
சேதியை அறிந்ததும் பாட்டிக்கும் வியப்பு!
பேத்திக்கு ஏற்ற வரனென நினைப்பு!
அவளும் அடைந்தாள் அளவிலாப் பூரிப்பு!
பேத்திதான் அவளென உரைத்திடத் துடிப்பு!
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவிப்பு!
அப்படியே நடக்கும் என ஆசீர்வதிப்பு!
அவ்வேளை மங்கல இசையும் ஒலிப்பு!
இருவரைச் சேர்ப்பது இனி பாட்டியின் பொறுப்பு!
அன்புளம் இணைவது அனைவரின் எதிர்பார்ப்பு!
யாருக்கும் இல்லையதில் எதிர்ப்பு!

விடுப்பரோ அனைவருக்கும் அழைப்பு!
இதுவன்றோ கதையின் உயிர்ப்பு!
ஜாதிப்பூ ஒரு அருமையான படைப்பு!
 
சிறுகதைகளின் அணிவகுப்பு!
சிந்திக்க வைக்கும் முனைப்பு!
சமுதாயச் சூழல்கள் சித்தரிப்பு!
சிறந்த நடையில் படைப்பு!
கோர்வையாய் எடுத்துரைப்பு!
அத்தனையும் தித்திப்பு!
இவையே கதாசிரியரின் சிறப்பு!
எல்லோர் மனங்களிலும் இடம்பிடிப்பு!
வைகோ அவர்களுக்கு வழங்கிடுவோம் இனிப்பு!
நல்ல தீர்ப்பு  இனி நடுவரின் பொறுப்பு!
---------------------------------------------------------------
-காரஞ்சன்(சேஷ்)

சனி, 17 மே, 2014

நீர் அறிய!- காரஞ்சன்(சேஷ்)


கல்லிடையே தேங்கியநீர்
கவலைமுகம் காட்டுதிங்கே!
கடல்கடந்து சென்றவர்தான்
காலத்தில் திரும்பாரோ?

பொருளின்றி வாழ்வில்லை!
பொருளொன்றே வாழ்வில்லை!
ஏக்கத்தின் தாக்கத்தை
எப்போது அறிவாரோ?

ஆறுதல் மொழிசொல்லி
அணைப்பாரோ கரங்கொண்டு?
இணைந்தமர்ந்த காட்சியுமே
இந்நீரில் தெரியாதோ?

காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 14 மே, 2014

உன்னிலும் நான்மேல்தான் -காரஞ்சன்(சேஷ்)

                                   
                                              உன்னிலும் நான்மேல்தான்!
மண்டபத்தைக் கட்டிவைத்த
மன்னவன் யாரோ?
என்நிலையில் இருப்பவர்க்கு
இதுதான் வீடோ?
                      
இறுகிய கருங்கல்லும்
இடம்விடுதே செடிவளர!
இடம்பிடித்தேன் இவைகளுடன்
நானுமிங்கு நடைதளர!
                                 
எலிகளும் கொசுக்களுமே
என்னுடன் வாசம்!             
இரக்கப்படும் தென்றல்வந்து
என்மேல் வீசும்!
                      
வளர்ந்து தேய்ந்தவர்க்கு
வாழ்வில் துயருண்டு!
தேய்ந்து வளர்ந்தவர்க்கோர்
திருப்தியும் அதிலுண்டு!
                      
இரண்டு நிலைகளுக்கும்
என்வாழ்வில் இடமில்லை!
இருப்பதுபோதுமென்றால்
எந்நாளும் துயரில்லை!

வெளிச்சமிட்டு எந்நிலையை
வெளிக்காட்டும் வெண்ணிலவே!
உன்னைவிட நான்மேல்தான்
உடுத்தியுள்ளேன் கந்தையினை! 
-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!