வெள்ளி, 20 ஜனவரி, 2012

"தானே"...உன்னால்தானே!- காரஞ்சன்(சேஷ்)

நண்பர்களே!
புதுவையும், கடலூர் மாவட்டமும் "தானே" புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப் பட்டவர்களின் வேதனையின் வெளிப்பாடே இக்கவிதை.

வருஷ முடிவினிலே
வந்தடிச்ச புயக்காத்தால்
பச்சைப் பசும்போர்வை
பாழாகப் போயிடுச்சே!

வாழ்விலும் புயலாகி
வளங்களை அழிச்சிடுச்சே!

இராவிலே வந்தடிச்ச 
இராட்சச புயலாலே
குடிசைகளில் கூரையில்ல!
குந்த இடமுமில்ல!


ஒட்டி ஒட்டி சேர்த்து
ஓட்டு வீடாக்கிவச்சா
எட்டி உதைச்சு அதை
ஏன் நொறுக்கிப் போட்டிருச்சோ?

காத்து நின்னுபோனா- மனுசன்
கதைமுடிவு எம்பாங்க!
காத்தே வந்து எங்க
கதைமுடிச்ச தென்னசொல்ல!

பல தலைமுறைகள்
பார்த்த மரங்களெல்லாம்
ஆணி வேரறுந்து
அடியோடு சாய்ந்திடுச்சே!

முன்னோர்கள்வச்ச தென்னை
முன்னேற வைத்ததென்னை!
தானேவின் தாண்டவத்தால்
தரைமீது வீழ்ந்ததென்ன!

தப்பிய மரங்களின்
தலையெல்லாம் தென்மேற்காய்
திருப்பி விட்ட புயல்
திசைகாட்ட செய்ததுவோ?

முப்பது வருஷத்துக்கு
முந்திரி பலனளிக்கும்!
முந்திரிக்கொட்டை புயல்
அத்தனை மரங்களையும்
அடியோடு அழிச்சுடுச்சே!
எந்திரிக்க விடாமல்
எங்களை அடிச்சுடிச்சே!

அழிந்த மரங்களை
அப்புறப் படுத்திடவே
ஆயிடும் பல இலட்சம்!

இப்பவே மரம் வச்சும்
எங்களுக்கு பலனில்லே!
அடுத்த தலைமுறைதான்
அதனால பயனடையும்!

பணப்பயிர்கள் பாழாகி
மணவாழ்வும் தடையாச்சு!
மரங்களை மட்டுமல்ல
மனசொடிச்சும் போட்டுடுச்சி!

முக்கனி மரங்களெல்லாம்
முழுவதும் வளர்த்து
எக்காலத்துல இனி
எம்மூர் புகழ்பெறுமோ?

ஊற்று நீராலே
ஊர்க்கிணறு நிறைஞ்சகதை
பார்த்து மகிழ்ந்தே
பல வருஷம் ஆயிடுச்சி!

 நிலத்தடி நீர்மட்டம்
நெடுந்தொலைவு போனதனால்
நீர்மூழ்கி மோட்டரினால்
நீரெடுத்து குடிக்கும்நிலை!

மின்சாரத் தேவைகளும்
மிகவாச்சி இல்வாழ்வில்!
அரை இலட்சம் கம்பங்கள்
அடியோடு சாய்ஞ்சதனால்
தடையாச்சு மின்சாரம்

குடிக்க நீர் தேடி
பட்ட துன்பம் பலமடங்கு!

சாலை வழிகளையும்
சாய்ந்தமரம் அடைச்சிருச்சி!
இப்படியொரு புயல்காத்த
இதுவரைக்கும் பாத்ததில்லை!

வாழ்க்கைமுறை மாறி
சூழல் கெடுவதினால்
கண்டிக்க இயற்கை
காட்டியதில் ஒருமுகமோ
ஆட்டிவைத்த பேய்க்காத்து?

இயற்கையே உன்முனனே
எள்ளளவு நாங்களெலாம்!
அடிக்கடி நீ அடித்தால்
ஆரிடம் போய் அழுவோம்?
மாறிவிட்டோம் மனதளவில்
மன்னித்து அருளிவிடு!

அள்ளி அரவணத்து
ஆறுதலைத் தந்துவிடு!
வளங்களை அளித்து -இனி
வாழவகை செய்துவிடு!
     
                                                  -காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி

15 கருத்துகள்:

 1. //முன்னோர்கள்வச்ச தென்னை
  முன்னேற வைத்ததென்னை!
  தானேவின் தாண்டவத்தால்
  தரைமீது வீழ்ந்ததென்ன!//

  அருமையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ள, வேதனைகளும்
  வலிகளும் நிறைந்த கவிதை.

  பதிலளிநீக்கு
 2. //இயற்கையே உன்முனனே
  எள்ளளவு நாங்களெலாம்!
  அடிக்கடி நீ அடித்தால்
  ஆரிடம் போய் அழுவோம்?
  மாறிவிட்டோம் மனதளவில்
  மன்னித்து அருளிவிடு!//

  மனம் கனக்க வைத்த கவிதை.

  பதிலளிநீக்கு
 3. படித்து விட்டு மனம் நெகிழ்ந்தது சார்! பாராட்டுக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. காத்து வந்தாலும் , நின்னாலும்
  கதை முடியுது. . .
  வலியை சற்றே உணர வைத்த வரிகள்.

  பதிலளிநீக்கு
 5. பாராட்ட வார்த்தைகள் இல்லை.keep on posting like this sir.

  பதிலளிநீக்கு
 6. Anthuvan wrote: "niraya kavithaigal padaika vaxthukkal"

  பதிலளிநீக்கு
 7. அன்பின் காரஞ்சன் - தானே புயல் - இயற்கையின் சீற்றம் - கவிதை நன்று - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. அன்பின் காரஞ்சன் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - ஏற்கனவே என் மறுமொழி இங்கிருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. "தானே"...உன்னால்தானே!

  வேதனையுடன் புலம்பத்தானே முடிகிறது ......

  பதிலளிநீக்கு