ஞாயிறு, 1 ஜூன், 2014

ஏமாற்றாதே! ஏமாறாதே சிறுகதைக்கு என் மனைவியின் விமர்சனம்!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு  எனக்கும் என் மனவிக்கும் முதற் பரிசு கிடைத்துள்ளது. 
 
 

"ஏமாற்றாதே! ஏமாறாதே" கதைக்கான இணைப்பு இதோ:


பரிசுபெற்றதற்கான அறிவிப்புக்கு இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-18-01-03-first-prize-winners.html

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி!


என் மனைவியின் விமர்சனம்!

தலைப்பிலேயே தொடங்கிவிடுகிறது நம் ஆசிரியரின் தனித்துவம். ஒரு சினிமாப் பாடலை நினைவுறுத்தும் இந்தக் கதையின் தலைப்பு “ஏமாற்றாதே.. ஏமாறாதே”.

தாரணமாக ஒரு சிறிய நடைபாதைக் கடை. ஒரு கிழவி கடைவிரிக்கும் விதம், அவளுடைய மன ஓட்டம், தளர்வான வயோதிக நிலை, அதனால் முன்பு போல் அதிக தேங்காய்களைக் கொண்டுவர இயலாமை, அதனால் வருமானக் குறைவு, ஆனாலும் அத்தகு சூழலிலும் “தன் கையே தனக்குதவி” என்று தன்னால் இயன்றதை உழைத்துப் பெறும் உறுதியான மனநிலை இத்தனையையும் கண்முன்னே நிறுத்தி வேலையில்லா வாலிப நெஞ்சங்களுக்கு ஓர் படிப்பினையை அறிவுறுத்தும் முதல் படி முதல் பகுதி. உழைப்பே உயர்வு என்பது உண்மையன்றோ? அது நன்மையன்றோ?

தேங்காய் விலை கேட்பவரிடம் விலையைச் சொல்லி, எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, தான் சற்று விலையைக் குறைத்துக் கொடுப்பதாகவும், இன்முகத்துடன் உரைத்து, பின் அடிமாட்டு விலைக்குப் பேரம் கேட்கப் படும்போது, கட்டுப்படி ஆகாது எனக் கூறுவதும், அழகாய் அந்த மூதாட்டியின் உள்ளக்கிடக்கையை, நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாய் உணர்த்துகிறது.

எப்படித்தான் ஆசிரியரின் ஒரு சாதாரண மனிதனின் ஒவ்வொரு செயலையும், உணர்வையும் தனிமனித நியாயங்களையும் அருகிருந்து பார்த்தது போல் அழகாய்க் கோர்வையாய் படம்பிடித்துக் காட்டமுடிகிறதோ? வியப்பில் விரிகின்றன விழிகள்.

ஒரு பெரிய ஷாப்பிங் மாலிலோ அல்லது நிறுவனங்களிலோ பொருள் வாங்க நேர்கையில், தம்மைக் கவுரவக் குறைவாய் மதிப்பிட்டு விடுவார்களோ என்ற போலியான முகத்திரை கிழிபடாமல் இருக்கும்படி, அவர்கள் சொன்ன விலைகொடுத்து, ஒரு பைசா கூட பேரம் பேச முடியாமல் பொருட்களை வாங்கி வரும் நபர்கள் குறித்து வருணித்த விதம் அற்புதம் என்று சிலாகிக்க வைக்கிறது.

அதேசமயம், நடைபாதைக் கடை வயோதிக வியாபாரிகளோ அல்லது வாலிப வயதினரோ, யாராய் இருந்தாலும் அவர்களிடம் பேரம் பேசத் துணிவதும், என்னதான் அவர்களின் வறுமையும் வாழ்வியலும், இந்த வியாபாரம் ஒன்றே அவர்களின் வாழ்வாதாரம் என்ற நிதர்சன உண்மை தெரிந்திருந்தாலும், நமது கதாநாயகன் போன்றவர்களின் அல்பத்தனமான சிந்தனை நம்மைத் தலைகுனிய வைக்கிறது.

 ஓரிரண்டு ரூபாய் அதிகமாய்க் கொடுத்து, நடைபாதைக் கடையினரிடம் பொருள் வாங்கும்போது அவர்கள் அடையும் ஆனந்தமே அலாதி! அவர்கள் பரிவாய், பாசமாய் அள்ளித் தரும் காயோ அல்லது பொருளோ நமக்குக் கண்டிப்பாய் ஒரு உன்னதமான செயலைச் செய்த உணர்வை, அவர்களுடைய வாழ்க்கைக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்த ஆனந்தத்தை (அணில் அணை கட்ட உதவிய விதமாய்) அளிக்கும் என்ற உண்மையை உணர்த்த முயன்ற ஆசிரியரின் முயற்சி மிகுந்த பலனளிக்கும் என்பதும், அவரது ஆதங்கத்தின் வெளிப்பாடு, இனி நடைபாதைக் கடையில் பொருள் வாங்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நிமிடமாவது யோசித்துச் செயல்படக்கூடிய ஒரு படிப்பினையை உண்டாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆசிரியரின் ஒவ்வொரு கதையும் அவரைப்பற்றி அவரது சுருக்கமான விமர்சனமான “சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன்” என்பது உண்மைதான் என்பதை ஆணித்தரமாய் நிரூபிக்கிறது.

ஒருவழியாய்த் தேங்காய்களைத் தட்டிப் பார்த்து, முற்றியதாய் இருக்கிறதா என்று ஆட்டிப் பார்த்து கொள்முதல் செய்பவரின் செயல்களைப் படம் பிடித்துக் காட்டியது அருமை. தேங்காய் வாங்குவதிலும் விலையைக் குறைத்ததோடு, ஒரு தேங்காயை லவட்டிக்கொண்டு ஆனந்தப்பட்டதும் ஏனோ மனதைப் பிசையும்படி அமைக்கப்பட்டுள்ளது. “To top it all off”  என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடைபோல் முதலிலேயே (15 ஆண்டுகளுக்கு முன்பே) இந்தப் பிரார்த்தனைக்கான தேங்காயை வாங்கி, நிறைவேறியிருந்தால் 12 ரூபாயில் அடங்கிவிட்டிருக்குமே என்று கதாநாயகன் எண்ணிய விதம் அவரது அற்பமான மனநிலையை வெளிக்காடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் “போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே! அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து இந்த பூமியைக் கெடுத்தானே ” என்ற பாடல் வரிகளும், “மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது” என்ற பாடல்வரிகளை நினைவூட்ட சிந்தனை விரிந்ததுவோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒரு வழியாக, கிழவியை ஏமாற்றிய வெற்றிக்களிப்போடு வீறு நடை போட்டு, எல்லாப் பிள்ளையார்களுக்கும் விக்னமின்றி சூரைக்காய் விட்டபின் மகிழ்வுடன் இல்லத்திற்குச் சென்று நிம்மதிப் பெருமூச்சும், பூரிப்புமாய் நிற்கும்போது, உணவு பரிமாறத் தயாராய் இருந்த மனைவி, திருடிய தேங்காயை ( அது திருடியது என அறியாமல்) அவரிடமிருந்து வாங்கி, இலேசாகப் பிளந்து, இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து அவரிடம் அருந்தக் கொடுத்துவிட்டு, தேங்காயை உடைத்தவுடன் அது அழுகியிருப்பதைக் கண்டு, பார்த்து வாங்கியிருக்கக் கூடாதா? மற்ற தேங்காய்கள் எல்லாம் நன்றாக இருந்ததா? என வினா எழுப்பிய வினாடியில் தன் வாயில் ஊற்றிய இளநீரை வாஷ்பேசினுக்கு ஓடிச்சென்று துப்பியதும், உடைத்த தேங்காய் மூடியை உற்று நோக்கும்போது அதில் அந்த கிழவியின் முகம் தெரிவதாகக் காட்டியதும் மிகவும் பிரமாதம் என எண்ண வைக்கிறது.
“தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் வாக்கு எத்தனை உண்மை! “தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்” என்ற வரிகள் நம் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.

தான் பிரார்த்தனை நிறைவேற்றிய அத்தனை பிள்ளையார்களும் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியது போல் கதையை அமைத்ததும், “நமக்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த இறைவனடா” என்ற பாடல் வரிகளை நினைவூட்டுகிறது.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது முதுமொழி. நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அறிவியல் வழிநின்று பார்த்தால் “ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர் விசை ஒன்று உண்டு” என்பது உண்மை எனப் புலப்படும். எனவே “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று” என்று வள்ளுவம் விளித்த பொயா மொழிகள் எத்தனை உண்மை!.

இத்தனை சிறிய கதையில் இரண்டு மூன்று கதாபாத்திர படைப்புக்குள்ளேயே இன்றைய சூழல், மனிதர்களின் மனப்பாங்கு, சூழ்நிலைகளில் அவர்களின் மனக்கணக்குகள் அத்தனையும் அடிக்கோடிட்டுக் காட்டி, தீய எண்ணங்களைக் களைந்தெறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அவ்வாறு செய்யின், ஒவ்வொருவரும் பேருவகையை அடையலாம் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளார். ஆசிரியரின் அவா இனியாவது விளையட்டும்.

இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் என்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம். ஏழை எளிய வியாபாரிகளுக்கு இயன்றவரை வியாபாரத்தில் ஒத்துழைப்பு நல்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உறுதுணையாய் நிற்போம். ஆசிரியரின் எளிமையான, வலிமையான கதைக்கு எளியவளின் விமர்சனத்தை ஏற்றிடுவீர்!  நன்றி! 

-இரா. எழிலி


20 கருத்துகள்:

  1. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  2. இரட்டிப்பு சந்தோசம் ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. மனமார்ந்த பாராட்டுகள் தங்கள் இருவருக்கும். தொடர்ந்து பல பரிசுகளை வெல்ல இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. மதிப்பிற்குரிய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "ஏமாற்றாதே! ஏமாறாதே" சிறுகதையின் விமர்சனத்திற்கு தம்பதி சமேதராக முதற் பரிசு கிடைத்துள்ளதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சிறுகதை விமர்சனப் போட்டியில் தங்கள் துணைவியார் அவர்கள் முதல் பரிசினை முதன்முதலாகப் பெற்றமைக்கு, உயர்திரு நடுவர் அவர்கள் சார்பிலும், என் சார்பிலும் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    மேன்மேலும் பல பரிசுகள் பெறவும் நல்வாழ்த்துகள்.

    இதனைத் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு [ VGK ]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  8. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு