ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா?
டிசம்பர் 26- 2004
கடல்சூழ் நம்நாடு -துயரக்
கடலில் ஆழ்ந்த தினம்!
உலகமெலாம் கண்ணீரோடு
ஒலித்த வார்த்தை- சுனாமி!
அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
எங்கோ ஓரிடத்தில்
எரிமலையாய் வெடிக்கிறதே!
நடுங்கிப் பிளந்து
நாட்டையும் அழிக்கிறதே!
அன்றோ.....
சுமத்ராவின் கடலடியில்
சூல்கொண்ட நிலநடுக்கம்
அதிரப் பெயர்த்த ஆழிநீரோ
ஆற்றல் அழியா
அலைத்தொடர் ஆனதே!
பாயப் பதுங்கிய புலியாய்
ஓரிரு மணித்துளிகள்
உள்வாங்கிய கடல்!
நூறடிச் சுவர்போல்
ஆயிரம் கைகொண்டு
தீராப் பசியுடன்
எட்டிய மட்டில்
ஊரினுட் புகுந்து
உட்கொண்டது அனைத்தையும்!
ஓட வழியுமில்லை!
ஒளிய இடமுமில்லை!
வறியோர் முதியோர்
சிறியோர், சீமான்
பிணியில் வாடினோர்
பணிமேற் சென்றோர்,-உடற்
பயிற்சி மேற்கொண்டொர்
அனைவரும் மாண்டனர்!
உலக வரைபடம் சில
ஊர்களை இழந்தது!
என்ன நடந்தது?
என்றறி யுமுன்னே
எல்லாம் முடிந்தது!
பெற்றோர் இருந்தனர்
பிள்ளைகள் இல்லை!
பிள்ளைகள் இருந்தனர்
பெற்றோர் இல்லை!
துயரே உருவாய்
உறவைத் தேடிய
உறவுகள் அனைத்தும்
ஓர் உறவாயின!
நொடியில் மடிந்து
ஒதுங்கிய கூடுகள்
எத்தனை கோடி!
இந்த நூற்றாண்டில்
இது பேரழிவு!
உறவை இழந்தோர்க்கு
உறவெனப் பலபேர்
உதவிட விரைந்தனர்!
மானிடர் அழிந்தும்
மானுடம் வாழ்ந்தது!
எத்தனை பேரிடர்
எதிர் வந்தாலும்
உற்ற துணையாய்
உதவிடப் பலரை
பெற்றுளதை எண்ணி
பெருமிதம் கொண்டு
மீண்டெழுந்து மிளிர்கிறாள்
எங்கள் பாரதத்தாய்!
-காரஞ்சன் (சேஷ்)
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி
பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி