தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான முதற்கவிதை- ஓவியத்திற்கு!
பூத்தமலர் காத்திருக்க!..
நெஞ்சத் திரையினிலே நிறைந்தவளின் ஓவியத்தைக்
கொஞ்சும் எழிலுடனே குறையின்றி வரைந்தாரோ?
பிறைநிலவோ புருவங்கள்! கருவண்டோ இருவிழிகள்!
அரும்பிடுதே புன்னகையும் அழகான பூவிதழில்!
அலைபாயும் மனதுடனே கலையழகுச் சிலைஅவளும்
வலைவீசிச் சென்றவனின் வரவுக்குக் காத்திருப்போ?
நிலைவாசல் படிமீது அடிவைத்து நிற்குமவள்
பலகவிகள் படைத்திடவே அடியெடுத்துக் கொடுக்கின்றாள்!
கொடியிடை தாங்கிடுதே கூடையிலே மலர்ச்சரங்கள்!
விடைதேடிக் காத்திருப்போ? விழிமலர்கள் பூத்திருப்போ?
கொடிமலரில் தேனருந்த கூப்பிட்டா வண்டு வரும்?
வடிவழகாய் மலரொன்று வண்டிற்காய் காத்திருப்போ?
நீங்காத நினைவுகளால் நெஞ்சம் நிறைத்தவனால்
தூங்காது இரவுகளில் துடித்திருப்ப தறியானோ?
எங்கும் அவனுருவே! எந்நாளும் அவன் நினைவே!
ஏங்கும் அவள்துயரை அன்னவனும் அறியானோ?
தென்றலே! தீந்தமிழே! தேன்நிலவே! நீங்களெலாம்
மங்கையவள் துயர்தனையே மன்னவனுக் குரைப்பீரா?
நங்கையை மணமுடித்து நல்லின்பம் நல்கிடவே
செங்கமலக் கண்ணனிடம் சென்றுரைக்க மாட்டீரோ?
புன்னகை அழகினிலே பொன்நகையும் தோற்குதிங்கே!
கன்னியை மணமுடிக்க காளையவன் தேதிசொன்னால்
அரும்பிய புன்னகையின் அர்த்த’மது’ புரிந்துவிடும்!
நறுமண மலர்மஞ்சம் நாளுமின்பம் சேர்த்துவிடும்!