செவ்வாய், 22 ஜூலை, 2014

படக்கவிதைகள்!- காரஞ்சன்(சேஷ்)

 
புன்னகைதேசத்துப்
பூக்களோ இவர்கள்!
 
அரும்புகளின் புன்னகையில்
ஆயிரம் மலரழகு!
 
சிந்திடும் புன்னகை
எந்நாளும் நிலைக்கட்டும்!
 
 
இசைந்து இசைத்தாயோ?
உனைச்சுற்றி ஓர் ஓளிவட்டம்!
உன் இசையில் மயங்கியதோ இளவட்டம்?


ஆற்றங்கரையோரம்
அமர்ந்தவளின் மனத்துள்ளே
நீரோட்டம்போல
நினைவலைகள் ஓடிடுதோ?
 
நாளையவர் வருவாரோ?
நங்கையவள் துயர்போக்க!
வேளை பிறந்திட்டால்
விலகாதோ துயரெல்லாம்!


சின்னவனின் குழலோசை
உன்னையும் மயக்கியதோ?
 
பஞ்சொடு பறக்கும்
பாராசூட் பயணமோ?
 

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
 

புதன், 16 ஜூலை, 2014

வரம் வேண்டி! -காரஞ்சன்(சேஷ்)

!


வரம் வேண்டி!

என்னைப்போல் குழந்தைகள்
எல்லோர்க்கும் கல்வி வேண்டும்!
புத்தகச் சுமைகுறைக்கும்
புதுக்கல்வி முறை வேண்டும்!
இளமையில் வறுமை
இல்லாத நிலை வேண்டும்!
குழந்தைத் தொழிலாளர்முறை
வி(ரை)ழைந்தொழிக்க வழிவேண்டும்!
இத்தனையும் நீ அருள
எத்தனை வலம் வரவேண்டும்?
                                                             -காரஞ்சன்(சேஷ்)
                                                                                                                  பட உதவி: கூகிளுக்கு நன்றி!

செவ்வாய், 15 ஜூலை, 2014

கயல்-விழி! -காரஞ்சன்(சேஷ்)



கயல்-விழி!

விழிகளின் பிம்பங்கள்
விழுந்தனவோ கயலெனவே!
வியந்த மீன்களெலாம்
விரைந்தனவோ அதைக்காண!
நீந்திய வேகத்தில்
நின்பிம்பம் கலைந்திடவும்
ஏமாற்ற மனமின்றி
இறைத்தாயோ பொரிகளையே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

வெள்ளி, 11 ஜூலை, 2014

ஒளிப்படக்கவிதை!-காரஞ்சன்(சேஷ்)
















இந்த ஒளிப்படத்திற்கு இரு கவிதைகள் எழுதியுள்ளேன். 

தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து செல்ல வேண்டுகிறேன்.

கவிதை-1
 
ஒன்றிய உள்ளங்கள்
ஒன்றாய் அருகருகே!
பற்பல நினைவுகளை
பார்வைகள் பரிமாற
விழிகளின் மொழிதனையே
விளக்க ஒருமொழி எதற்கு?
அகத்தின் முகவுரையாய்
அரும்பிடுதோ புன்னகையும்!

கவிதை 2

நகையரும்பும் முகங்களிலே
நம்பிக்கை ஒளிக்கீற்று!
அகங்களின் நினைவுகளை
அவ்விருவர் விழிபேச
விழிமொழி அறிந்திடவே
விழையுதம்மா செம்மொழியும்!
அகத்தின் மகிழ்வாலே
முகத்தில் புன்னகையோ?

                                                     -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவிக்கு நன்றி: நம் உரத்த சிந்தனை மாத இதழ்.

திங்கள், 7 ஜூலை, 2014

எண்ணியிருந்தது ஈடேற! - காரஞ்சன்(சேஷ்)


தொடராய்க் குதித்தாலும்
தொடும் இடங்கள் வெவ்வேறோ?
அலைமோதும் கடல்கூட
ஆழமில்லை துணிந்தோர்க்கு!

திண்ணிய மனதுடன்
திட்டமிடல் இருந்துவிட்டால்
இன்னல்கள் ஏதுமின்றி
எண்ணியது ஈடேறும்!

-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி
 

ஞாயிறு, 6 ஜூலை, 2014

யாதும் ஊரே! யாவையும் கேளிர்- சிறுகதை விமர்சனத்திற்குப் பரிசு!

மதிப்பிற்குரிய திரு  வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் நடத்திவரும் சிறுகதைப் போட்டியில் "யாதும் ஊரே, யாவையும் கேளிர்"" சிறுகதையின் விமர்சனத்திற்கு எனக்கும் என் மனைவிக்கும் பரிசு கிடைத்துள்ளது. 
 
 
"யாதும் ஊரே, யாவையும் கேளிர்" கதைக்கான இணைப்பு இதோ:


முதற்பரிசுக்குத் தெரிவான என் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-01-03-first-prize-winners.html.


இரண்டாம் பரிசுக்குத் தெரிவாகியுள்ள என் மனைவியின் விமர்சனத்திற்கான இணைப்பு இதோ:

http://gopu1949.blogspot.in/2014/07/vgk-23-02-03-second-prize-winners.html.

வாய்ப்பளித்த திரு வை.கோ அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)