நண்பர்களே!
கூட்டுக் குடும்பங்கள் இருந்த நிலை மாறி
முதியோர் இல்லங்களை நாடி
முதுமைப் பருவத்தில் வாடும் பலர்
செல்லும் நிலை உள்ளது.
குடும்பப் பைகளின்
உறவு நூல் அறுந்து
உதிர்ந்த நன்மணிகளாய்ச் சிலர்.
தோட்டத்துச் செடிகளாய் இருந்தவர்கள்
தொட்டிச் செடிகளாய்!
இந் நிலையில் வேர்களை மறவா விழுதுகளாய் நாம் இருக்க வேண்டுகோளாய் இப்பாடல்!
(இளமை கொலுவிருக்கும் ... பாடல் மெட்டில்)..
உடலில் வலுவிருக்கும் உளத்தில் தெளிவிருக்கும்
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே!
உடலில் வலுவிருக்கும், உளத்தில் தெளிவிருக்கும்,
எதற்கும் துணிவிருக்கும் இதயத்திலே- இவை
இல்லாமல் பயனில்லை பருவத்திலே
உயிரைச் சுமந்தவளும் தாயல்லவோ?
ஊட்டி வளர்த்தவளும் அவளல்லவோ?
பெற்று வளர்ப்பவர்கள் கண்ணல்லவோ?
பேணிக்காப்பது நம் கடனல்லவோ?
பொறுப்பைச் சுமந்து நமை போற்றி தினம் வளர்த்து
ஏற்றம் அளித்தவர்கள் இவரல்லவோ?-பெற்றோர்
போற்றி வணங்க வந்த உறவல்லவோ?
இயற்கை தந்த வரம் மூப்பல்லவா? இது
நமக்கும் நாளை வரும் நிலையல்லவா?
குழந்தை மனதைக் கொள்ளும் முதிய்வர்க்கே- நாம்
விழைந்து சேவை செய்ய ஒரு வாய்ப்பல்லவா?
இளமை ஓடி விடும் முதுமை கூடிவிடும்
பிணிகள் நாடிவரும் வேளையிலே அவர்
வாட்டம் போக்குவது பெரும் சுகமல்லவோ? நாம்
வேர்களை மறவா விழுதல்லவோ?
-காரஞ்சன்(சேஷ்)