செவ்வாய், 26 ஜூன், 2012

பயன் தரும் பயணம் !



பயன் தரும் பயணம் !

காரிருள் களைகிறது
கதிரவன் பயணம்!

பாய்ந்தோடும்
பாதையெங்கும்
பயன் விளைவிக்கும்
நதியின் பயணம்!

நிற்காமல் சுழலும்
நீள்புவியால்
பகலிரவும்
பருவங்களும்!

மனிதனே!

தோன்றியவுடன்
துவங்கிடுதே
நம் பயணம்!

இடைப்பட்ட நாட்களே
இருப்பாய் நம் கையில்!

 கடந்த காலங்கள்
காட்டிய அனுபவத்தால்
தடைகளைத் தகர்த்து
எதிர்வரும் காலத்தில்
நன்மை பயப்பதாய்
நம்பயணம் அமையட்டும்!

-காரஞ்சன்(சேஷ்)
(பட உதவி: கூகிள்)

சனி, 23 ஜூன், 2012

சுவாரசியமான தகவல்கள்;


கருத்துள்ள சிரிப்பலைகள்!



பெல்ட்

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்

பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காதசாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

இயல்புதானே?

பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர்அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார்மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே? அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.

திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?

பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர்கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்குகிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.

வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால்இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.


பிடித்த மின் அஞ்சல் பகிர்வு-2
(நண்பருக்கு நன்றி)
-காரஞ்சன்(சேஷ்)

வியாழன், 21 ஜூன், 2012

பிடித்த மின் அஞ்சல்!

 
நண்பர் எனக்கனுப்பிய மின் அஞ்சலைப் பகிர்ந்துள்ளேன்!
-காரஞ்சன்(சேஷ்)
 
இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்
இழந்த எவை என இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்
வயதாக ஆக உடல் நலமிழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

கல்வி கற்றதால் அறியாமை
இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.


திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்

(நண்பருக்கு நன்றி!)