"தானே" வும் தாத்தாவும் - சிறுகதை
தொலைக்காட்சியும் வானொலியும் தானே புயலின் வருகை பற்றி மாலை முதலே செய்தி வெளியிட்ட வண்ணம் இருந்தன. கடந்த இரு நாட்களாகக் குளிர்க் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த என் தாத்தா தனக்குத் தானே ஏதோ கூறிய வண்ணம் பேண்ட்டை எடுத்து அணிந்துகொண்டார். குளிரின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, பனியன் அதன்மேல் ஒரு டி-ஷர்ட், அதன்மேல் ஒரு முழுக்கை சட்டை என அணிந்து கொண்டார். மப்ளர் ஒன்றை எடுத்து முண்டாசுக் கவியை நினைவு படுத்தும் விதமாகத் தலையில் கட்டிக் கொண்டார். எத்தனையோ கூட்டங்களில் போர்த்திய சால்வைகள் இப்போதாவது பயன் தருகின்றனவே என்றெண்ணியபடியே ஒன்றை எடுத்து தோளைச் சுற்றிப் போர்த்திக்கொண்டார்.
புயற்காற்று புறப்பட்டு வருவதற்குள் யாராவது ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்துகள் வாங்கிவரவே இத்தனை ஏற்பாடு. பழகிய ஆட்டோக்காரரை வரவழைத்து தாத்தாவும் நானும் கிளம்பினோம். பெரும்பாலான கடைகளும், கிளினிக்குகளும் அடைமழைக்கு அடைபட்டுப்போயிருந்தன. திறந்திருந்த கிளினிக் ஒன்றின் வாசலில் ஆட்டோ நின்றது. பத்துப் பதினைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். உதவியாளரிடம் , "தாத்தாவிற்கு குளிர் ஜுரம் அதிகமாக உள்ளது. டாக்டரைப் பார்க்க வேண்டும். டோக்கன் ஏதாவது வாங்கவேண்டுமா? " எனக் கேட்டேன். உதவியாளரோ, பத்து நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களே காத்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்து முடித்தவுடன்தான் நீங்கள் பார்க்கமுடியும் என்றார். தாத்தாவோ "சரிதான் குளிர் ஜுரம் என்ன நாள் குறித்துவிட்டா நம்மை வந்து தாக்குகிறது? தானே புயலுக்காவது வானிலை அறிக்கை வருகையை அறிவிக்கிறது" என வருத்தத்துடன் வரிசையில் அமர்ந்தார்.
ஒரு மணிநேரத்திற்குப் பிறகு டாக்டரைப் பார்த்து தன் உபாதைகளை வரிசைப் படுத்தினார் தாத்தா. ஒவ்வொரு உபாதைக்கு ஒரு மாத்திரை வீதம் எழுதி முடித்தவுடன் தும்மல், இருமல் இருக்கிறதா? எனக் கேட்டார் டாக்டர். இல்லை என்றவுடன் பட்டியல் நிறைவுற்றது. மருந்துகள், பிரட்பாக்கெட்களை வாங்கிக் கொண்டு,வந்த ஆட்டோவிலேயே திரும்பினோம். மழை வலுத்திருந்தது. காற்றின் வேகம் சற்றே கூடியிருந்தது. பாதாள சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளங்களில் ஏறி இறங்கி எல்லாவித நடனங்களையும் ஆடியபடி வழியில் செல்வோர் மீது சந்தனமாய் செம்மண் குழம்பைத் தெளித்தவண்ணம் வந்தது எங்கள் ஆட்டோ. இறங்கி வீட்டிற்குள் நுழைய விரித்த குடையைப் பறிக்க முயன்றது காற்று. ஆட்டோக்காரருக்கு நன்றி கூறி வீட்டிற்குள் நுழைந்தோம். ரொட்டித் துண்டுகளை உண்டு மாத்திரைகளை எடுத்துக்கொண்ட தாத்தா அதன் தாக்கத்தில், தூக்கத்தில் மூழ்கினார். வேகம் காட்டிய காற்றால் விடைபெற்றது மின்சாரம். நானும் சற்றுக் கண்ணயர்ந்தேன்.
நள்ளிரவு ஒருமணிக்குமேல் திகிலான காட்சிகள் அரங்கேறின.பாறைகளின் மீது கடலலைகள் வேகமாக மோதுவதுபோல் காற்றோடு மழையின் சத்தம் பயமுறுத்தியது. தாத்தாவும் கண்விழித்தார். பத்து வீட்டுப் பால் குக்கர்கள் ஒரே நேரத்தில் ஒலியெழுப்புவதுபோல் "உஷ்" என்றொரு பெரும் சத்தம். பல கதவுகள் தாழிடப்பட்ட போதிலும் தட் தட் என அடித்துக்கொண்டிருந்தன. ஜன்னல் கதவுகளிலும் பற்கள் கிட்டுவதுபோல் பட் பட் என்றொரு ஒலி!. படுக்கை அறை கடிகாரம் டிக் டிக் என்று ஒலிப்பதற்கு பதில் திக், திக் என ஒலிப்பது போலிருந்தது. தாழிட்ட ஜன்னல் ஒன்று "தானே"வின் தயவால் தானே திறந்து கொண்டது. மூச்சு விடாமல் கபடி விளையாடிய காற்று, மழையை வேகமாக வீட்டிற்குள் விரட்டியது. சன்னல் ஓரத்தில் உலர்த்தியிருந்த குடை வேகமாக மேலெழும்பி வாமன அவதாரம் பாராசூட்டில் பறந்து வ்ந்திறங்குவதுபோல் ஏறி ஏறி இறங்கி வீட்டின் உயரத்தை அளக்க முயன்றது. கதவைச் சாத்து- காற்று வந்துவிட்டதே எனக் கத்தினார் தாத்தா. காற்றுக்கும் எனக்கும் கதவிழுக்கும் போட்டியில் ஒருவழியாக ஜெயித்து கதவை இழுத்துக் கயிற்றால் கட்டினேன். இந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீட்டிலிருந்த பொருட்கள் சில மார்கழியில் எங்கள் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாடி நின்றன.
காற்றின் வேகம் மேலும் கூடி கதவிடுக்குகள், உமிழ்நீரை உமிழ்வதுபோல் மழைநீரை உமிழ்ந்து வீட்டிற்குள் வழிந்தோடச் செய்தன. பழந்துணிகள் கொண்டு கதவிடுக்குகளை அடைக்க பழந்த்துணிகளைக் கட்டி வைத்த மூட்டையைக் கண்டெடுத்துப் பிரித்தோம். பிரித்தவுடன், "விடுதலை, விடுதலை" என விரைந்த கரப்பான் பூச்சிகள் நள்ளிரவில் தாம் பெற்ற சுதந்திரத்தை எங்கள் மீது ஏறி விளையாடி எழுச்சியுடன் கொண்டாடியதில்
திண்டாடி விட்டோம். ஒருவழியாக கதவிடுக்குகளை அடைத்து வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்த மழை நீருக்கு துணிப் போர்வைகள் போர்த்தி மேலும் ஈரமாக்காமல் காத்தோம்.
தாத்தா இயற்கை உந்துதலைச் சமாளிக்க கழிப்பறைக்குள் சென்றதும் காற்று அதற்குள்ளேயே அவரை சிறைபிடிக்க முயன்றது. மீண்டும் ஒரு கதவைத் திறக்கும் போராட்டம். ஜெயிலில் மாடடியவரை பெயிலில் எடுப்பது போல் ஒருவாறாய்த் தாத்தாவை மீட்ட திருப்தி.
இனியும் உறக்கமோ? ஈதென்ன பேரிரைச்சல்?
என்ன தாத்தா இது? இப்படிச் சுழன்றடிக்கிறதே காற்று எனக் கேட்டேன். இதுவரை இவ்வளவு வேகத்துடன் நீண்டநேரம் சுழன்றடிக்கும் காற்றை நான் பார்த்ததில்லை எனக் கூறிவிட்டு மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்க விடுவதில்லை என எப்போதோ படித்த தத்துவத்தை நினைவூட்டினார்.
பக்கத்திலேயே பல மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுகின்ற ஓசைகள் பயமுறுத்திய வண்ணம் இருந்தன. தகரக் கூரைகள் பெயர்ந்து பறக்க முற்பட்டு சிறகொடிந்து சிதறி பேரிரைச்சலை ஏற்படுத்தின. இடி இடித்தால் அர்ஜுனா, பல்குனா எனக் கூறுவீர்களே! இந்தப் பயமுறுத்தும் காற்றுக்கு என்ன சொல்வீர்களோ? என வினவி அவர் கைகளைப் பற்றினேன்.
வேரோடு மரங்களைப் பிடுங்கி எறிவதால் "வீமன்" என்றழைப்பதா? வில்லொடிப்பதுபோல் வீடுகளை ஒடிப்பதால் இராமன் என்றழைப்பதா? எனச் சொல்லிக் கொண்டே புயல் பற்றிய செய்திகளை அறிய மின்கலத்தின் துணையுடன் இயங்கும் வானொலிப் பெட்டியில் பண்பலை ஒலிபரப்பை வைத்தோம். தன் பங்கிற்கு அதுவும் "உன்னைத்தானே.... தஞ்சம் என்று ..", காற்றில் எந்தன் கீதம் ... பாடல்களை ஒலிபரப்பி "தானே" புயலின் தாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
மன்னர்கள் காலத்தில் இது போன்ற பேரழிவுகள் ஏற்படும்போது மக்கள் என்ன செய்திருப்பார்கள்? என வினவினேன். அதற்கு தாத்தா, அன்ன சத்திரங்களிலும் ஆலயங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்திருப்பார்கள் என்று கூறிவிட்டு உறுதியானக் கட்டிடத்திற்குள்ளே உறக்கமின்றித் தவிக்கிறோமே கூரை வீட்டிலிருப்பவர்களின் கதி என்ன ஆவது? என வேதனைப்பட்டார். நானும் வருந்தினேன்.
மாநிலச் செய்தியில் இன்னும் ஓரிரு மணிநேரத்தில் புயல் புதுவைப் பகுதியில் கரையைக் கடக்கும் என அறிவித்தார்கள். காற்றோ 140 கி.மீ வேகத்தில் சுழன்று அடித்து ஊரைப் போர்க்களமாக்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மிகப் பலமான சேதம் இருக்கும் எனக் கூறிய தாத்தா நான் கூடப் புயல் தானே? என நினைத்தேன். தானே புயலோ கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறதே! தானாக அது இனிமேலாவது சீக்கிரம் கரையைக் கடக்கட்டும் எனக் கடவுளிடம் வேண்டினார். அதை ஆமோதிப்பதுபோல் மணிகள் பொருத்தப்பட்ட பூஜை அறைக்கதவு காற்றில் பலமாக ஆடி ஒலி எழுப்பியது.
வறியவர்கள் விடியலுக்கு ஏங்குவதுபோல் நானும் தாத்தாவும் விடியலை எதிர்நோக்கிக் காத்திருக்கலானோம்!
-காரஞ்சன்(சேஷ்)