சனி, 28 ஜூலை, 2012

உபதேசம்!

உபதேசம்!

                                                   கரும்புகையைக் கக்கியபடி
                                                   கடந்த வாகனத்தில்
                                                   கண்ணில் பட்ட வாசகம்
                                                   "சுற்றுச்சூழல் காப்போம்!"

ஓரமாய் நின்றிருந்த வேனில்
   ஓடிக்கொண்டிருந்தது என்ஜின்
எழுதியிருந்த வாசகமோ   
எரிபொருள் சிக்கனம்
தேவை இக்கணம்!


பிஞ்சுமனம்!

அழுகையை நிறுத்தியது
அடம்பிடித்த குழந்தை!
கடந்துபோன காரில்
கரடி  பொம்மைகள்!


                                                            
                                                       

செவ்வாய், 24 ஜூலை, 2012

மட்பா(ண்)டம்!




மட்பா(ண்)டம்!


பாங்கான மண்ணெடுத்து
பக்குவமாய்ப் பிசைந்து
சக்கரத்தில் ஏற்றி
சரியாக வடிவமைத்து
தட்டிக் கொடுத்து
தரைமீது உலர்த்தி
சுட்டெடுத்த பின்னர்தான்
மட்பாண்டம்- எண்ணம்போல்!

உருவான பாண்டங்கள்
உடைந்திட சாத்தியமுண்டு!
உடைத்திட சாத்திரமுண்டு!
உடைப்பதும், உடைவதும்
படைத்தலுக்கு அடித்தளமே!

பட்டபின்னர் மனம்
பக்குவப்படுதல்போல்
சுட்டபின் மட்பாண்டம்
சுடுநீரைக் குளிர்விக்கும்!

உருவாக்கும் கைகளில்
உருப்பெறுமே களிமண்ணும்!
வளர்ப்பு முறையினிலே
வாழ்வின் வடிவமையும்!
பச்சிளம் பருவத்தை
பயனுள்ள பாத்திரமாய்
வடிப்பது நம்கையில்!


வாழ்க்கைச் சக்கரத்தில்
வடிவெடுக்கும் பாத்திரங்கள்
பயன் தரும் பாத்திரமாய்
பல்லாண்டு வாழ்கவென
பாடம் சொல்கிறதோ
பாரினில் மட்பா(ண்)டம்!


-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி:: நன்றி-கூகிள்

சனி, 14 ஜூலை, 2012

புன்னகைப்(பூ)க்காரி!

புன்னகைப்பூக்காரி!


மல்லிப்பூ, ........சாமந்தி,...... ரோஜா...
வலிக்காதோ வாயெனவே
எண்ணிடும் வண்ணம்
ஒலித்தபடி வருகின்றாள்!

எதிர்த்த தெருநாய்கள்
இப்போதெல்லாம்
ஏனோ குரைப்பதில்லை!
வறியவளின் நிலையுணர்ந்து
வாய்மூடி நின்றனவோ?

எத்தனைமுறை உரைத்தும்
ஏனோ கேளாமல்
அடித்திடுவாள் பலதடவை
அழைப்பு மணியினையே!


நடைப் பயணம் வாட்டியதோ?
வாடினவே  பூச்சரங்கள்!
வாங்க வில்லையெனில்
வாடிடும் அவள்முகமும்!

ஓரிரு முழப்பூவும்
உதிர்கின்ற இதழ்களுடன்
ஒருசில ரோஜாக்கள்
கையிலே திணித்து
காசைப் பெறுகையிலே-அவள்
உதிர்க்கின்ற புன்னகை
உரைத்திடுதே அவள்நிலையை!


-காரஞ்சன்(சேஷ்)