சிறுவயதில்..
அடைகாத்த ஆசைகளுக்கு
விடைகிடைக்கும் நாளாய்
அடைமழை ஐப்பசியில்
அமைந்திடும் தீபாவளி!
புத்தாடை உடுத்தி
மத்தாப்பு கொளுத்தி
இருப்பதைப் பகிர்ந்து
இனிப்பொடு காரம்
இணைந்துண்ட மகிழ்வுக்கு
ஈடில்லை உலகினிலே!
இருண்ட வானம்
இடையிடையே வெளிவாங்கி
வறுமை நிலையல்ல
வளம்பெறுவீர்! என்றுணர்த்தும்!
தூறலில்லா வேளைகளில்
ஈரம் உலர்த்திட
இருக்கும் பட்டாசை
விரிந்தகன்ற தாம்பாளம்
முற்றத்தின் மூலைதனில்
கூடல் வாய் பகுதியிலே
குச்சிமேல் சுமந்திருக்கும்!
காலை விடிவதற்குள்
கலசமும் மத்தாப்பும்!
சரமாய் வெடித்தால்
சட்டென முடியுமென்று
சரங்களைப் பிரித்து
சரிசமமாய்ப் பகிர்ந்திடுவோம்!
எட்டுப் பிள்ளைகளும்
விட்டு விட்டு வெடிப்பதனால்
இடைவேளையின்றி
வெடிச்சத்தம் கேட்டிருக்கும்!
அந்நாளில்
தீபாவளி இரவில்
இறுதியாய் ஒலிக்கும்
பட்டாசின் வெடிச்சத்தம்
இவ்வளவு விரைவாக
இந்நாள் முடிந்ததே
எனும் தாக்கத்தை
என்னுள் விதைத்தது!
இப்போதெல்லாம்..
இறுதியாய் ஒலிக்கும்
ஒற்றை வெடிச்சத்தம்
பட்டாசுத் தொழிற்சாலையில்
திரியாய்க் கருகிய
உயிர்களின் சோகத்தை
உணர்த்துவதாய்த் தோன்றுகிறது!
வெடிக்கும்போது
வெளிப்படும் புகையோ
காற்றில் நஞ்சை
ஏற்றிச் செல்கிறது!
மாசுபடும் காற்றாலே
மனிதர்க்குப் பலநோய்கள்!
தீபஒளித் திருநாளில்
ஒளியேற்றி
வெடி தவிர்ப்போம்!
இணைந்து கொண்டாடி
இன்புற்று வாழ்ந்திடுவோம்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!