சனி, 31 ஆகஸ்ட், 2013

தென்னை! கவர்ந்தது என்னை! - காரஞ்சன்(சேஷ்)

 
                               
                         தென்னை கவர்ந்தது என்னை!

பெத்து வளர்த்ததெல்லாம்
சொத்தைப் பறிச்சுக்கிட்டு
சோறிட மறுக்கையிலே
வைச்சு வளத்தவங்க
வாரிசுக்கும் பயனளிச்சு
தன்னையே தருவதில்
தானுயர்ந்த தென்னை!

பாளைகள் படமெடுக்க
பசுங்குலைகள் அழகூட்ட
ஆரமென கீற்றிருக்க
அழகிய ஓர்வட்டம்!

வண்ணப் படத்தினிலே
வானுயர்ந்த தென்னை!
கண்டவுடன் கவிதைதர
கவர்ந்திழுத்த தென்னை!

-காரஞ்சன்(சேஷ்)

செய்தி: நன்றி-தினமலர் 31/8/2013
பட உதவி: மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஓட்டு வீடு!- காரஞ்சன்(சேஷ்)



மழைக்கால இரவுகளில்...

ஓட்டு வீட்டிற்குள்
ஒற்றுமையாய் நாமிருக்க
வறுமை நம்முடனே
வசதியாய் வாழ்ந்தது!

ஓட்டைகள் வழியாக
உள்ளிறங்கும் மழைநீரோ
பாடும் பாத்திரமாய்
பாத்திரத்தை மாற்றிவைக்கும்!

கோணிகளை விரித்து
குளிராமல் படுத்திருந்தோம்!
நம்பிக்கைக் கீற்றெனவே
நாம் மி (இ)ன்னல் இரசித்திருந்தோம்!

ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
பெய்யும்மழை இரசிக்க
ஓட்டுவீட்டில் இருந்த
ஒட்டுதல் ஏனில்லை?

கண்ணீர் வழிந்து
காதோரம் நனைத்திருக்க
பாத்திரங்களை இரசிக்கும்
பாத்திரம் ஆனேன்நான்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

புதன், 14 ஆகஸ்ட், 2013

ஏற்றிப் போற்று!-காரஞ்சன் (சேஷ்)

                                                               ஏற்றிப் போற்று!

எங்கும் நிறைந்தது சுதந்திரக் காற்று!
பெற்றுத் தந்தவர் பெருமையைப் போற்று!

வண்ணப் பறவைகள் வாழ்ந்திடும் கூடு!
வளரும் நம்முடை(ய)  தாய்த்திரு நாடு!

நம்முள் பிரிவுகள் நீர்மேல் கோடு!
நாட்டின் நலனில் ஒன்றாய்க் கூடு!

ஊழலும், பகைமையும் உயர்விற்குக் கேடு!
அகற்றிட பற்பல வழிகளைத் தேடு!

பெரியோர் காட்டிய அறவழி ஏற்று
 நாளும் நீயும் நற்கடன் ஆற்று!

தம்மின் இளையோர் நலம்பெறத் தேற்று!
நாட்டைக் காப்பவர்  நற்புகழ் சாற்று!

நாளைய பாரத நம்பிக்கைக் கீற்று!
நன்னாளில் கொடி ஏற்றிப் போற்று!




இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

எட்டு! எட்டு!-காரஞ்சன்(சேஷ்)

                                                            
                                                                எட்டு! எட்டு!


                                          சிரித்த முகத்துடன்
                                          சிறார்கள் எட்டு!

                                         காண்பவர் மகிழ்வர்
                                         கவலையை விட்டு!

                                         எட்டுத் திக்கும்
                                         இவர்களின் இலக்கு!
                                    
                                         இலக்கை நோக்கி
                                         பறப்பதில் சிட்டு!
                                      
                                        பாதையின் கடினம்
                                        பாதங்கள் அறியும்!
                                     
                                        தாங்கிக் கடந்தவர்
                                        தடங்கள் பதியும்!
                                     
                                        துவளா மனத்திடம்
                                        தோல்வியும் துவளும்!
 
                                        வெற்றியின் படிகள்
                                        விரைவில் தெரியும்!
 
                                       களைப்பெனும் துயரம்-வெற்றிக்
                                       களிப்பில் மறையும்!

                                      நீங்கா நினைவென
                                      நெஞ்சில் பதியும்!

                                                 -காரஞ்சன்(சேஷ்)

படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி

சனி, 3 ஆகஸ்ட், 2013

கட்டுண்ட கால்நடைகள்!-காரஞ்சன்(சேஷ்)

                                                        கட்டுண்ட கால்நடைகள்!


மடித்துக் கட்டியதில்
மடிந்ததே மானுடம்!
கண்ணுறும் போதே
கண்ணீர் பெருகிடுதே!

பிஞ்சு நெஞ்சங்கள்
பிடித்த குடையின்கீழ்
நனையாமல் நனைகிறதே
நாயொன்று அன்புமழையில்!

சேருமிடம் பொறுத்தே
செல்வாக்கு  அமைந்திடுமோ?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: மின்ஞசல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!