அன்னத்தின் எண்ணம்!
வன்னமிகு அன்னமே!
கயல்களெலாம் எந்தன்
கண்ணசைவில் மயங்கிநிற்க,
கூவிமகிழும் குயிலினமென்
குரல்கேட்கக் காத்திருக்க
எண்ணம் உரைத்திட -நீ
எந்தூதாய் வருவாயா?
ஏந்திழையே!
உன்னுள்ளம் நிறைந்தவர்க்கு
உன்நிலையை நானுரைப்பேன்!
திரும்பிடுவார் விரைவினில்திண்ணமிது! கலங்காதே!
தூதுசெல்லும் எங்களுக்கும்
துயருண்டு மனதினிலே!
எங்கள் மனத்துயரை
யாரிடம் யாமுரைப்போம்?
ஆயிழைக்கு வியப்பளிக்க
என்னென்று அறிந்திட நான்
ஏனோ தலைப்பட்டேன்!
அன்னத்தின் மொழிகேளீர்!
எண்ணம் உரைத்திட
எங்களைத் தூதுவிட்டீர்!
இன்னுமொரு நூற்றாண்டில்
எங்களின் நிலைஎதுவோ?
வியனுலகும் சுருங்கிடலாம்!
விரல்நுனியில் உலகிருக்க
அன்னத்தைத் தூதுவிட
அந்நாளில் யார்வருவார்?
பெருகிடும் குடியிருப்பால்
அருகிடுமே நீர்நிலைகள்!
காவியக் கதைகளில்தான்
ஓவியமாய் உறைவோமோ?
-காரஞ்சன்(சேஷ்)
ஓவியம் பகிர்ந்து எனை எழுதத் தூண்டிய திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
ஓவியம் பகிர்ந்து எனை எழுதத் தூண்டிய திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!