பருவமங்கையின்
தோற்றத்தில் வனப்பு!
அமர்க்களமாய்
ஆசிரியரின் வர்ணிப்பு!
அதற்கேற்ப
அனைத்துப் படங்களும் சிறப்பு!
இளைஞர்க்கு
அவளிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு!
பலாப்பழம்
நாடும் ஈக்கள்போல் மொய்ப்பு!
கோயிலுக்கு
வரும் கூட்டம் அதிகரிப்பு!
பூக்காரப்
பாட்டியின் வியாபாரம் குறைப்பு!
பாழும்
நெற்றிகளில் திருநீறும் அதன் பாதிப்பு!
மங்கையின்
திறனால், பூக்கள் விரைவில்விற்றுத்தீர்ப்பு!
பாட்டிக்குப்
பொறாமை இல்லாதது கதையில் பிடிப்பு!
பலர் வந்து
அப்பெண்பற்றி பாட்டியிடம் விசாரிப்பு!
யாரென்று
அறியேனென பாட்டியின் பதிலிறுப்பு!
செவ்வாய்
வெள்ளி இனி வருவாள் என உரைப்பு!
கேட்டதும்
ஓர் இளைஞனின் பதைப்பு!
அவளைப்
பலரும் சூழ்வதில் வெறுப்பு!
அவளை
வாராதிருக்க பாட்டி மூலம் கண்டிப்பு!
அறியாப்
பருவம் முதல் அவனைஅறிந்ததால்
“பேராண்டி”
என அன்புடன்அழைப்பு!
பக்தியில்
அவனுக்கோ மிகவும் விருப்பு!
அன்றாடம்
ஆலயம் வருவதில் இலயிப்பு!
உழைத்துப்
பிழைப்பதில் பாட்டியின் பிடிப்பு
உண்டாக்கியது
நாயகனுக்கு அவள்மேல் விருப்பு!
பாட்டியின்
நலனில் அவனுக்குப் பொறுப்பு!
மழையில்
நனையாமல் காத்தது சிறப்பு!
பட்டியல்
நீளும் பூக்களின் தொகுப்பு
சிறுவயதில்
அவனுள்ளே பாட்டியின் விதைப்பு!
பூக்களிலும்
ஜாதியுண்டோ? கேள்வியின் தொடுப்பு!
கேட்டதும்
பாட்டி அடைந்தாள் மலைப்பு!
பாட்டிக்கு
அவன் திறனில் மதிப்பு!
வாழ்வின்
நிகழ்வுகள் அனைத்தும் உரைப்பு!
ஏதும்
அதிலில்லை ஒளிப்பு, மறைப்பு!
இருவருக்கும்
இது அன்றாட நடப்பு!
ஜாதிப்பூவை
மணந்திட விருப்பு!
பாட்டியிடம்
அதை உரைப்பதும் சிறப்பு!
ஆலய மணியும்
அவ்வேளையில் ஒலிப்பு!
அதனால்
அவனுள் விளைந்தது களிப்பு!
சேதியை
அறிந்ததும் பாட்டிக்கும் வியப்பு!
பேத்திக்கு
ஏற்ற வரனென நினைப்பு!
அவளும்
அடைந்தாள் அளவிலாப் பூரிப்பு!
பேத்திதான்
அவளென உரைத்திடத் துடிப்பு!
கொடுத்த
வாக்கைக் காப்பாற்றத் தவிப்பு!
அப்படியே
நடக்கும் என ஆசீர்வதிப்பு!
அவ்வேளை
மங்கல இசையும் ஒலிப்பு!
இருவரைச்
சேர்ப்பது இனி பாட்டியின் பொறுப்பு!
அன்புளம்
இணைவது அனைவரின் எதிர்பார்ப்பு!
யாருக்கும்
இல்லையதில் எதிர்ப்பு!
விடுப்பரோ
அனைவருக்கும் அழைப்பு!
இதுவன்றோ
கதையின் உயிர்ப்பு!
ஜாதிப்பூ
ஒரு அருமையான படைப்பு!
சிறுகதைகளின் அணிவகுப்பு!
சிந்திக்க
வைக்கும் முனைப்பு!
சமுதாயச்
சூழல்கள் சித்தரிப்பு!
சிறந்த
நடையில் படைப்பு!
கோர்வையாய் எடுத்துரைப்பு!
அத்தனையும் தித்திப்பு!
இவையே
கதாசிரியரின் சிறப்பு!
எல்லோர்
மனங்களிலும் இடம்பிடிப்பு!
வைகோ
அவர்களுக்கு வழங்கிடுவோம் இனிப்பு!
நல்ல
தீர்ப்பு இனி நடுவரின் பொறுப்பு!
---------------------------------------------------------------
-காரஞ்சன்(சேஷ்)