ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலா!- காரஞ்சன்(சேஷ்)

                                                                   நிலா!

பெற்றவளைச் சுற்றி
பிள்ளை வருவதுபோல்
கற்காலம் தொட்டு
கணிணிக்காலம் வரை
நிற்காமல் நீள்புவியை
நீ சுற்றி வருகின்றாய்!

சுழலும் இப்புவியைச்
சுற்றிவரும் வெண்ணிலவே!
என்னுடைய முன்னோரை
என்றோ பார்த்தவள் நீ!
அன்றுமுதல் இன்றுவரை
அனைத்தும் அறிந்தவள் நீ!
உன்னிடம் சிலகேள்வி
உண்மை உரைத்திடுவாய்!

பண்டைநாளில்..
படைகொண்டு மன்னர்கள்
சண்டையிட்டு மாண்டகதை
சரித்திரம் பறைசாற்றும்!

இந்நாளில்..

ஆறடி மனிதருக்குள்
அரையடிக்கு தினம் சண்டை!
விண்வெளியில் உன்னுடனே
எண்ணிலா விண்மீன்கள்
சண்டையிலா நிலை
சாத்தியமானதென்ன!

காரிருளைக் களைந்து
பேரொளி தருபவளே!
பாரில் மாந்தரின் மன இருளைப்
போக்கிட ஏன் மறந்தாய்?

கிண்ணம் நிறைய
உண்ணச் சோறிருந்தும்
தின்ன அடம்பிடிக்கும்
சின்னக் குழந்தைக்கு
அன்னையர் உன்னை
அழைக்கிறார் அமுதூட்ட!

ஓட்டை விழுந்த
ஒவ்வொரு குடிசையிலும்
அழையாமலே புகும் நீ
ஆறாத பசியால்
அங்கு அழும் குழந்தைக்கும்
கொஞ்சம் கொண்டுவந்து
கொடுக்க ஏன் மறந்தாய்?

சங்கப் பாடல்களில்
அங்கம் வகிப்பவளே!

பாடும் கவிஞர் உனைப்
பலவாறாய் அழைக்கின்றார்!

காட்சி பல அமைத்து
சாட்சி நீ என்கின்றார்!

பிரிவால் தவிப்பவர்கள்
ஏன் நிலவே? என்கின்றார்!
திருமணத் தம்பதியர்
தேன்நிலவே என்கின்றார்!
எல்லோர் கேள்விக்கும்
என்னபதில் சொல்கின்றாய்?

சேர்த்த செல்வத்தை சேமித்து வைக்காமல்
வாரியிரைத்து வள்ளலாக நினைத்தாயோ?
தழலை விழுங்கி தண்ணொளியாய்த் தருபவளே!
ஒருசில நாட்கள் ஓடி ஏன் மறைகின்றாய்?

ஓடும் நதியில், உவர் கடலில்
உன்முகத்தைப் பார்ப்பவளே!
மாறாது நீயிருக்க -புவி
மாற்றம் கண்டது ஏன்?
ஆர்ப்பரிக்கும் கடல்
ஆவேசம் கொள்வதும் ஏன்?

வாழ வழியிருந்தால்
வந்துவிடும் மாந்தரினம்
நிலவிவரும் சூழல்
நிம்மதியும் கெடுமெனவே
நீரையும் காற்றையும் நீ
நிரந்தரமாய்த் துறந்தாயோ?


                                                     -காரஞ்சன்(சேஷ்)
படம்:கூகிளுக்கு நன்றி!

ஞாயிறு, 18 மார்ச், 2012

மனித நேயம்- கவிதை ஆக்கம் என் மகள் பவித்ரா


மனித நேயம்!

அறிவியலில் வளர்ந்தோம்!
ஆற்றலிலே சிறந்தோம்!

ஆனால்...

நாளொரு குற்றம்!
பொழுதொரு கொலை!

தினசரி நாளிதழில்
தினமொரு செய்தி!

உலகிற்கே உணவுதரும்
உழவனுக்குப் பசிக்கொடுமை !

பசியுடன் அழும்
பச்சைக் குழந்தைகள்
குப்பைத் தொட்டிகளில்!
தொட்டில்களா தொட்டிகள்?

வளர்த்த பெற்றோர்கள்
வாடிடலாமோ?
முதியோர் இல்லங்களை
நாடிடலாமோ?

பணத்திற்காய்
மனதையும் விற்கும்
மனிதர்கள் இன்று!

வன்முறை என்பது
இவையும் தானே?

வேரறுப்போம்
இவ்வன்முறையை!
வீறுகொள்வோம்
மனிதநேயம் மாண்புறவே!

                                                         -சே.பவித்ரா

பட உதவி: கூகுள்

புதன், 14 மார்ச், 2012

கடல்- காரஞ்சன்(சேஷ்)

கடல்


நீள்நிலமதில் படர்ந்த
நீலக் கொடியோ நீ?

உன்னுள் ஓருலகம்
ஒளிந்திருப்பதாலோ
ஓயா அலைகளுடன்
உறங்காதிருக்கின்றாய்?

உலகை உய்விக்க
உன்வழி இதுவாமோ?

கதிரவனின் கருணையால்
கார்மேக உருக்கொண்டு
காற்றெனும் தேரேறி
வான்மழையாய் வந்திறங்கி
வளம்தரும் நதிகளாகி
வந்தடைவாய் உன்னிடத்தை!

உதித்திடும் கதிரவன்
உறைவது உன்னிடமோ?
உலக நஞ்செலாம்
உன்னிடம் சேர்ந்ததனால்
நீலநிறந்தனை நீ
நிரந்தரமாய்ப் பெற்றனையோ?

உப்பான உன்னுடலில்
உண்டான பெருந்தாகம்
எத்தனை நதிகலந்தும்
ஏன் இன்னும் தீரலையோ?

கையளவு இதயந்தனில்
கடல்மேல் ஆசை என்ன?

காதல் கைகூடக்
காத்திருக்கும் காதலர்கள்!
மணல் வீடமைத்து
மகிழ்ந்திருக்கும் சிறுவர்கள்!
கவலை மறக்க
காற்றாட வந்தவர்கள்!
தினப் பிழைப்புக்காய்
தின்பண்டம் விற்பவர்கள்!
கட்டுமரத்தோடு
கடலடையும் மீனவர்கள்!

அண்டி வருவோர்க்கு
ஆறுதலை அளிப்பவளே!

சீரியநின் செல்வங்களை
மாந்தரினம் பறிப்பதாலோ
சினங் கொண்டெழுந்து
சிலநேரம் சீறிப்பாய்கின்றாய்?
                                 -காரஞ்சன்(சேஷ்)

புதன், 7 மார்ச், 2012

என் மகள் - காரஞ்சன்(சேஷ்)

                                                                  என் மகள்!
நண்பர்களே!

2005ஆம் ஆண்டு என் மகள் பற்றி நான் எழுதிய கவிதை
இது. பள்ளிக்குச் செல்லும் குழ்ந்தைகள் இருக்கும்  இல்லங்களில்  இப்பதிவில்  கூறியுள்ள இந்நிகழ்வுகள் இயல்பே!


ஊர்தூங்கும் வேளையிலே
ஊன்றிப் படித்திடுவாள்!
பாரினில் புகழ்பெறவே
விரிந்திடுமே அவள் கனவு!

சுட்டிவிகடன், சுவையான சிறுவர்மலர்,
கட்டை அவிழ்த்துக் கண்டெடுத்த சிறுவர்மணி
குழ்ந்தைகள் இதழான கோகுலம் இவையனைத்தும்
எடுத்து வைத்திருப்பாள் எப்போதும் பக்கத்தில்!

படித்தது போதும், படுத்துறங்கு எனச் சொன்னால்
தீராதகோபம், திரும்பிடுமே என் மீது!
எனைப்பாராது முகம் திருப்பி
படுத்தபடி முணுமுணுப்பாள்!
கணப்பொழுதில் என்கழுத்தைக்
கட்டிக் கதை கேட்பாள்!

பாட்டோ, கதையோ பாதி முடிக்குமுன்னே
தொட்டிலிட்டு தாலாட்ட
தொடர்ந்துறங்கும் சேய்போல்
நீட்டிய கால்மடக்கி
நித்திரையில் ஆழ்ந்திடுவாள்!

காலையில் துயிலெழுப்பக்
கடுந்தவம் புரிதல்வேண்டும்!
பள்ளிக்குப் புறப்படவே
பார் மகளே நேரமிது
என்றன்னை எழுப்பிட்டால்
தூக்கம் வருகிறதே
தொந்தரவு ஏன் என்பாள்!

ஒருவழியாய்த் துயிலெழுப்பி
உடனிருந்து பணிவிடைகள்
நீராடி முடிக்குமுன்னே
சீருடைகள் அணிவகுக்கும்!

ஊட்டிவிட்டால் உணவை
"உவ்வே.." என மறுப்பாள்!
அப்பா நிலையோ
அந்தோ பரிதாபம்!

மதிய உணவும்
மறக்காமல் தண்ணிரும்
பொதியாய்க் கனக்கும்
புத்தகப் பையுமேந்தி
அம்மா உடன்வருவாள்
அவளை வழியனுப்ப!

புறப்படும் முன்னரே
போயிருக்கும் பேருந்து!
வண்டியுடன் நிற்குமெனை
ஏறெடுத்துப் பார்த்து
இயம்பிடுவாள் இவ்வாறு!

"விரைந்து என்னை நீங்கள்
விடவேண்டும் பள்ளியிலே
நேரம் கடந்துவிட்டால்
நீள்கதவை மூடிடுவர்!"

அருமை மகளின்
அன்புக் கட்டளைக்கு
மறுப்பேதும் சொல்ல
மனம்வருமோ எந்தனுக்கு?

                                                      -காரஞ்சன்(சேஷ்)

வெற்றிப்பாதை! -காரஞ்சன்(சேஷ்)

படம்: நன்றி-தினமலர்.


வெற்றிப்பாதை!

பயணத்தின் பாதையை
பனித்திரை மூடலாம்!
 தடைகளைப் படிகளாக்கி
தாண்டிச் செல்!
பலவீனங்களைப் பலமாக்கு!
வெற்றியின் பாதை
விரைவினில் திறந்திடும்!

-காரஞ்சன்(சேஷ்)

செவ்வாய், 6 மார்ச், 2012

அருவி!- எனது மகள் எழுதிய கவிதை

அருவி! (என் மகள் எழுதிய கவிதை)

                                     நீரெனும்  மகளாகத் தாய் மடியில்
  மழையெனும் பாலை அவளூட்ட
 மலையெனும் தந்தை கண்டு சிரிக்கிறாள்!
             தென்றல் யாழ் மீட்டித் தாலாட்ட  
                                    திங்கள் அமுதூட்டும் -அவளுக்கும்
  விண்மீன்கள் பலகதைகள் பகரும்!

                                   கடலெனும் கணவனைக் கண்டவுடன் 
  காதலில் விழுந்து கரைகிறாள்!
                                  அலையெனும் நரைகண்ட பின்பும்
  அன்பிற்கு அணைகாண வழியில்லை!
                                   இன்றும் மகிழ்வுடன் பொங்கி
   அவளும் விழுகிறாள் அருவியாய்!

                                                                                                          சே.பவித்ரா
படம்:கூகுளுக்கு நன்றி!

வியாழன், 1 மார்ச், 2012

நேச மலர்கள்!- காரஞ்சன்(சேஷ்)


நேச மலர்கள்!

காற்றின் தழுவலில்
கட்டுண்ட மரமிங்கு
புன்னகை பூக்கிறதோ
பூக்களைத் தூவி!

தாலாட்டும் காற்றை
தழுவமுயன்ற மலர்கள்
தரையில் வீழ்ந்தனவோ?

பூத்திருக்கும் மரத்தடியில்
காத்திருக்கும் எனக்கு
காதல்மொழி பேச
கற்றுக்கொடு காற்றே!
சொன்ன மொழி என்ன?
இத்தனை மலர்கள்
மயங்கி விழுகிறதே!

வளர்ந்த மரமிங்கு
வளர்க்கின்ற வேரை
வணங்கிடுதோ மலர்தூவி!

உதிர்ந்தாலும் உரமாகி
உனைக்காப்போம் என
உரைக்கின்றனவோ
மலரும் சருகும்?
                                                  -காரஞ்சன்(சேஷ்)